07/09/2025
கூட்டம் நடத்துவதற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை கிளைக்குழுவினர் சட்டவிரோதமாக இன்றைய தினம் (07) கூட்டமொன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்றும், எனவே – அதனைத் தடுத்து நிறுத்துமாறும் கோரி – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை இந்த முறைபாட்டைச் செய்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனைப் பிரதேச அமைப்பாளராகவும் உதுமாலெப்பை எம்.பி பதவி வகிக்கின்றார்.
எதிர்வரும் 16ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நினைவு தினமாகும். அதனை அட்டாளைச்சேனையில் அனுஷ்டிப்பதற்கான ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்யும் பொருட்டு, அதற்கான கலந்தாலோசனைக் கூட்டமொன்றை, முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை கிளையினர் இன்று (07) மாலை 4.30 மணிக்கு நடத்தவுள்ளர்.
அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ள மேற்படி கலந்தாலோனைக் கூட்டத்துக்கான அழைப்புக் கடிதம் – பலருக்கும் அனுப்பி வைக்கப்படுள்ளதோடு, முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பைக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளராகிய தன்னிடம் அனுமதி பெறாமல், சட்டவிரோதமாக – இவ்வாறாதொரு கலந்தாலோசனைக் கூட்டத்தை, அட்டாளைச்சேனை கிளைக் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர் என்றும், எனவே – அதனைத் தடுத்து நிறுத்துமாறும், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை முறைப்பாடு செய்துள்ளார் என, அவரின் தரப்பு தெரிவிக்கிறது.
இந்தக் கூட்டம் நடைபெற்றால் – அங்கு தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம் எனவும், உதுமாலெப்பை எம்.பியின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை கிளைக் குழுவின் தலைவர் எஸ்.எல்.ஏ. ஹலீம் மற்றும் செயலாளர் ஏ.சி.எம். ஹாரித் (ஆசிரியர்) ஆகியோரை, அக்கரைப்பற்று பொலிஸார் தொடர்பு கொண்டு, மேற்படி முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இதனை கிளைக் குழுவின் தலைவர் ஹலீம் உறுதிப்படுத்தினார்.
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பின் நினைவுநாள் நிகழ்வை, அட்டாளைச்சேனையில் நடத்துவதற்கு ஒருபுறம் அந்தக் கட்சியின் கிளைக்குழவினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறமாக, குறித்த நினைவுநாள் நிகழ்வை அட்டாளைச்சேனையில் நடத்துவதற்கு – நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையும் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார் எனவும் அறிய முடிகிறது.
முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை கிளைக்குழுவினரின் கூட்டம் இன்றைய தினம் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள இடத்துக்கு, அக்கரைப்பற்று பொலிஸ் குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்படுவதற்கும் ஏற்பாடாகியுள்ளதாக அறியமுடிகிறது.
முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை கிளைக் குழுவினருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பைக்கும் இடையில் மிக நீண்ட காலமாக இருந்துவந்த உட்பிரச்சினைகளும், முறுகல் நிலையும் – தற்போது பூதாகரமான நிலையில், பொலிஸ் நிலையம் வரைச் சென்றுள்ளது.
புதிது