06/06/2025
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு
"வலுவூட்டலால் நாட்டை வெல்லுங்கள் - போதையிலிருந்து மீண்டெழுங்கள்" - 2025 தொனிப் பொருளுக்கமைய, 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு சமுர்த்தி கொடி தின நிதி சேகரிப்பு வேலைத்திட்டத்தில் கூடிய நிதியினை சேகரித்த கள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு சமுர்த்திப் பணிப்பாளர் திரு எவ்.சி. சத்தியசோதி தலைமையில் இன்றைய தினம் (05.06.2025 ) காலை 11.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தமதுரையில், கொடி தின நிதி சேகரிப்பில் 2023 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தினையும், 2024 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டமையானது சிறப்பான விடயம் எனவும்,கொடி தினத்தில் சேகரிக்கப்பட்ட நிதியினை வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள், சிறுவர்களுக்கான கல்வி உதவி போன்ற திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், மக்களுக்கான சேவைகளை உயர்ந்தளவில் வழங்க வேண்டும் எனவும், எமது முன்னாள் அரசாங்க அதிபர் அமரர் திரு. க. கணேஷ் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவது "அரச சேவையாற்றுவதற்கான இவ் அரிய சந்தர்ப்பம் கடவுளால் தரப்பட்டுள்ளது - அதனைச் சரியாக பயன்படுத்த வேண்டும்" எனக் கூறுவதை அரசாங்க அதிபர் ஞாபகப்படுத்தி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மக்களுக்கான சேவையினை வினைத்திறனாகவும் அர்ப்பணிப்புடனும் வழங்கி வந்தால் கடவுளின் ஆசீர்வாதம் உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார். மேலும், கிராம மட்டத்தில் வறுமை ஒழிப்பு திட்டத்தில் நேரடியாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுவருதனால் வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு வலுவூட்டல் செயற்பாடுகளில் சிறப்பாக ஈடுபட வேண்டும் எனவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது. மேலும், கொடி தினத்தில் அதிக நிதி சேகரித்த உத்தியோகத்தர்களுக்கான கெளரவிப்பானது ஏனைய உத்தியோகத்தர்களையும் உற்சாகப்படுத்த தூண்டும் என்பதால் குறுகிய நாட்களில் ஒழுங்கு செய்யப்படுத்தப்பட்டதாகவும் எனத் தெரிவித்து, சமுர்த்தி வேலைத் திட்டங்கள் ஊடாக வறுமையினை ஒழிக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் 2024 ஆம் ஆண்டு கொடி தினத்தில் அதிக நிதியினை மாவட்ட ரீதியில் சமுதாய அடிப்படை அமைப்பினைச் சேர்ந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் - முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட கோப்பாய் பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. செ. சிவகுமார் அவர்களுக்கும், இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ்ப்பாண பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த திரு. அ. யூட்சன் அவர்களுக்கும், மூன்றாவது இடத்தினை பெற்றுக்கொண்ட ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த திரு. கோ. கருணாகரன் அவர்களுக்கும், நான்காவது இடத்தினை பெற்றுக்கொண்ட நல்லூர் பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த திருமதி சி. றஞ்சினி அவர்களுக்கும், ஐந்தாவது இடத்தினை பெற்றுக்கொண்ட சாவகச்சேரி பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த திருமதி இ. அன்ரனற் ஜொலிற்றா அவர்களுக்கும் கேடயமும், பாராட்டுச் சான்றிதழும் அரசாங்க அதிபரால் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.மேலும், 15 பிரதேச செயலக ரீதியாக அதிக நிதி சேகரிப்பில் ஈடுபட்ட 128 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், மாவட்ட சமுர்த்தித் திணைக்கள கணக்காளர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர்கள், வங்கி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
ஊடகப்பிரிவு, மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்