20/06/2025
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் ஆட்சியை தீர்மானிக்கும் அமர்வு வாகரை பிரதேச சபை சபா மண்டபத்தில் இன்று (20) கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி முன்னிலையில் நடைபெற்றது.
19 உறுப்பினர்களை கொண்ட பிரதேச சபையில் தவிசாளர் தெரிவானது எவ்வாறு நடாத்தப்பட வேண்டும் என்ற வாக்கெடுப்பு கோரல் இடம்பெற்றது.
அதில் திறந்த வாக்கெடுப்புக்கு சார்பாக 08 உம், இரகசிய வாக்கெடுப்புக்கு 11 ஆதரவு கோரினர்.
அதன் அடிப்படையில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு கோரப்பட்டது.
இலங்கை தமிழரசு கட்சி சார்பில் பல்கோஸ் மோகனராசா அவர்களும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் சார்பில் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் அவர்களும் முன்மொழியப்பட்டனர்.
இரகசிய வாக்கெடுப்பு மூலம் 12 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததன் அடிப்படையில் க. தெய்வேந்திரன் தெரிவு செய்யப்பட்டார். 07 உறுப்பினர்கள் எதிரான வாக்குகளை செலுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் பிரதித்தவிசாளர் தெரிவு கோரப்பட்டது. அதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த சன்முகநாதன் ரசிகரனும், இன்னுமொரு தெரிவாக ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த மொஹமட் புகாரி மொஹமெட் ஹைதர் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டிருந்தார்.
அதில் சன்முகநாதன் ரசிகரனுக்கு ஆதரவாக 10 வாக்குகளும் மொஹமெட் ஹைதர் அவர்களுக்கு ஆதரவாக 08 வாக்குகளும் கிடைக்கப்பெற்றதுடன், பிரதித்தவிசாளராக சண்முகநாதன் ரசிகரன் தெரிவு செய்யப்பட்டார். ஒரு உறுப்பினர் நிராகரித்து வாக்கினை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.