
26/06/2025
மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு
மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று(26) நடைபெற்றது. தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் சிறிநாத் சபையோர் அரங்கில் அவதானித்துக் கொண்டிருந்தார்.
இச்சபையில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா இரண்டு நிமிடம் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன்போது பிரதிநிதிகள் தமது வெற்றிக்காக வாக்களித்த மக்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன் தமது வட்டாரங்களில் நிலவும் குறைபாடுகள் குறித்தும் எடுத்துக்கூறினர்.
இச்சபையின் சீரான நடவடிக்கைகளுக்காக தொழில் நுட்பம், அனர்த்த முகாமைத்துவம், சுற்றாடல், நிதி விவகாரம், வீடமைப்பு, சமூக அபிவிருத்தி மற்றும் ஆலோசனை ஆகிய விடயங்களைக் கையாள்வதற்காக மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டன.
குறிப்பாக யாழ்ப்பாணம் செம்மணி படுகொலையைக் கண்டித்து இச்சபையில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அடங்கிய மகஜர் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்புவதாக முடிவு செய்யப்பட்டது.
இச்சபையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. 18 வட்டாரங்கள் மற்றும் பட்டியல் ஆசனங்கள் மூலமாக தெரிவுசெய்யப்பட்ட 32 உறுப்பினர்கள் ஏறாவூப்பற்று பிரதேச சபையில் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.
இலங்கை தமிழரசுக்கட்சி- 13 ஆசனங்கள், தேசிய மக்கள் சக்தி-5 பிரதிநிதிகள், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்- 4 உறுப்பினர்கள், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி தலா இரண்டு உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சைக்குழுக்கள், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஆகிய அணிகள் இச்சபையில் ஐந்து ஆசனங்களைக் கொண்டுள்ளன