08/07/2023
ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தார். மிகவும் நல்லவர்.
ஒரு நாள் அரண்மனையில் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அதில் ஒரு வழக்கு. ஒரு விவசாயி வந்து புகார் கொடுத்தார்.
அது என்னவென்றால் அவரது வயலில் ஆடுகள் வந்து மேய்ந்து பயிரை அழித்துவிட்டன.
நிறைய உழைத்து செலவு செய்து பயிரை உண்டாக்கி வைத்திருந்தேன். எல்லாம் போய் விட்டது. இனிமேல் நான் என்ன செய்வது? நீங்கள் தான் சரியான தீர்ப்பு வழங்க வேண்டும் என்றார் அந்த விவசாயி.
அந்த ஆடுகளுக்கு சொந்தக்காரர் யார் என்று கண்டுபிடித்து அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு வாருங்கள் என்று உத்தரவு போட்டார் ராஜா.
சேவகர்கள் போய் அவரை அழைத்துக் கொண்டு வந்தார்கள். ராஜா விசாரித்து முடித்து தீர்ப்பு வழங்கினார்.
விவசாயி அடைந்திருக்கின்ற இழப்புக்கு ஈடாக உன்னுடைய ஆடுகளை அவரிடம் கொடுத்து விடு என்று சொன்னார்.
இதை மன்னருடைய மகன் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.
இந்த தீர்ப்பை இன்னும் சிறப்பாக வழங்க வேண்டும் என நினைத்தான்.
அதை அப்பாவிடம் சொன்னான். உடனே அரசர் சரி நீ இதற்குச் சரியான தீர்ப்பினை சொல் என்றார்.
இளவரசன் சொன்னான். உமது ஆடுகள் எல்லாத்தையும் ஓராண்டு காலத்துக்கு அந்த விவசாயிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த ஒரு வருடத்திற்குள் அந்த ஆடுகள் போடுகிற குட்டிகள், பால், எரு எல்லாம் விவசாயி எடுக்க வேண்டும். ஒரு வருடத்துக்குப் பிறகு உமது ஆடுகளை நீ திரும்ப வாங்கிக் கொள். இதுதான் இளவரசன் சொன்னது.
இது சரியான தீர்ப்புதான்.
எனது அரசு பொறுப்புகளை இளவரசன் வசம் ஒப்படைக்கிறேன் என்று சொல்லி விட்டார் ராஜா.
சுலைமான் நபி அவர்களின் சரித்திரத்திலே இந்த சம்பவம் காணப்படுவதாக ஒரு நண்பர் எனக்கு இதை கூறியிருந்தார்.
அதாவது ஒரு தண்டனையை பெறுகிறவன் அதற்குப் பிறகு சமூகத்தில் நல்லவிதமாக வாழ வாய்ப்பு கிடைக்கக் கூடியவாறு அந்த தீர்ப்பு அமைய வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
சில தீர்ப்புகள் அப்படி அமைவதில்லை.
ஒரு தண்டனையை அனுபவித்து முடித்தவன் அதன் பிறகு இந்த சமூகத்தில் நல்லவனாக வாழ நினைத்தாலும் அதற்கு தகுதி இல்லாதவன் என்கிற அளவுக்கு அவனை அப்படியான ஒரு சூழ்நிலைக்கு கொண்டு தள்ளிவிடுகின்றன பல தீர்ப்புகள்🙏🙏🙏