15/01/2026
பிடிகயிறு
காலாண்டுச் சஞ்சிகை
வெளியீட்டு விழா
10 ஜனவரி 2026
மாணவர்களது ஆளுமை விருத்தியையும் வாசிப்பு பழக்கத்தையும் ஏற்படுத்துவதை மையமாகக் கொண்டு வெளியிடப்படும் பிடிகயிறு எனும் மாணவர் சஞ்சிகை, மண்டபம் நிறைந்து வழிந்த பார்வையாளர்கள் முன்னிலையில், கல்விமான் கலாநிதி அலவி ஷரீப்தீன் அவர்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
கிராஅத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் Open Feed நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி அலவி ஷரீப்தீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள்.
லண்டனை வசிப்பிடமாகக் கொண்ட அல் ஹாஜ் அனீஸ் சிறப்பு அதிதியாகவும் வைத்தியக் கலாநிதி ஷியாம், சட்டத்தரணிகளான சாதிக்குல் அமீன், உமர் அலி, சஞ்சிகை ஆசிரியர் குழு சார்பாக ரிஸாம் ஜுனைத், ராஷித் நுஃமான் ஆகியோரும் கலந்த சிறப்பித்தனர்.
கலாநிதி அலவி ஷரீப்தீன் கல்விச் சகாய நிதி மூலம் பயன் பெறுகின்ற மாணவர்கள், கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலை மாணவர்களுமாக சுமார் 600 மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன், பெற்றோர்கள், ஆசிரியர்கள் நலன் விரும்பிகளும், இச் சஞ்சிகை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வெளியீட்டு நிகழ்வில் பிடிகயிறு சஞ்சிகையின் பின்னணி, அதன் பெயர், நோக்கம் பற்றி கலாநிதி அலவி ஷரீப்தீன் தெளிவுபடுத்தினார்.
சட்டத்தரணி உமர் அலி சஞ்சிகை அறிமுகத்தை நிகழ்த்தியதுடன் சஞ்சிகை ஆசிரியர் குழு சார்பாக ரிஸாம் ஜுனைத் அதன் நோக்கம் அதற்கான மாணவர்களின் பங்களிப்பு போன்ற விடயங்களை தனது உரையிலே எடுத்துரைத்தார்.
முன்னாள் சிலாபம் நகரசபையின் பிரதித் தவிசாளர், சட்டத்தரணி சாதிக்குல் அமீன் அவர்கள் கலாநிதி அலவி ஷரீப்தீன் நடந்து வந்த கடின பாதைகள், எதிர் கொண்ட சவால்கள், சட்ட பீட மாணவனாய் இருந்த காலத்தில் சுறுசறுப்போடு செய்த சமூகப் பணிகள் பற்றி எடுத்துரைத்ததுடன், சட்டத்தரணியாக வரவேண்டிய அலவி ஷரீப்தீனை இச்சமூகம் இழந்து கலாநிதியாக பெரும் சமூகப் பணியாளனைப் பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டார்.
நிகழ்வில் மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இறுதியாக கலந்து கொண்ட சகல மாணவர்களுக்கும் சஞ்சியையும் பாடசாலை உபகரணங்களும் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.