04/11/2025
சீனாவில் நடந்த அபின் போர் ஐ பற்றி நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்களா? இலங்கை மக்கள் இந்த யுத்தம் பற்றி கட்டாயம் அறிய வேண்டிய கால கட்டம் இது.
ஓபியம் அல்லது அபின் போர் (O***m War 1839–42) என்பதற்கு, நவீன சீன வரலாற்றில் முக்கிய இடம் உண்டு. பிரிட்டிஷார் உலகின் பல நாடுகளை காலனி ஆதிக்கத்துக்கு உட்படுத்தியிருந்த சமயம் அது. தங்கள் தேவைக்காக தேயிலை, பட்டு, பீங்கான் பாத்திரங்கள் போன்ற பொருட்களை சீனாவில் இருந்து ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்தன. அதேசமயம், ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சீனர்கள் இறக்குமதி செய்யவில்லை; தன்னிறைவாக இருந்தனர். இதனால், சீனா பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டது.
பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள், இதைக் கண்டு ஆத்திரமடைந்தனர். இந்தியாவில் அவர்கள் இலகுவாக காலூன்ற முடிந்தாலும், சீனாவில் அது சாத்தியப்படவில்லை. இதையடுத்து, தந்திரமான ஒரு யோசனையை பிரிட்டன் கையாண்டது. அதாவது, சீனாவில் போதைப்பொருளை விற்பதன் மூலம், இளைஞர்களை பாழாக்கி பொருளாதாரத்தைக் கைப்பற்றலாம் என்பது பிரிட்டனின் திட்டம்.
இதையடுத்து, இந்தியாவிலும், வங்காள பகுதிகளிலும் பிரிட்டன் அபின் உற்பத்தியில் ஈடுபட்டது. அதை, சீனாவில் இறக்குமதி செய்தது பிரிட்டன். இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானதால், பிரிட்டனின் வியாபாரம் அமோகமாக நடந்தது. போதைப்பொருள் பழக்கத்தால், சீனாவில் பல சீர்கேடுகள் தலைதூக்கின. தெருவெங்கும் இப்போது இருக்கும் இலங்கையை போன்று ஒவ்வொரு வீடுகளுக்கும் கொள்ளை நோயை விட வேகமாக இந்த அபின் / ஓபியம் பரவி சீரழித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிங் சீனப்பேரரசு (Qing Dynasty), இங்கிலாந்தின் போதைப்பொருள் இறக்குமதியைத் தடை செய்தது. எனினும், அரசின் தடையை மீறி, சீனக் கடைத்தெருக்களில், அபின் மலிவாக கிடைத்தது. சீனாவின் மக்கள் வாழ்க்கையும், பொருளாதாரமும் சின்னாபின்னமாகி, எதிர்காலமே கேள்விக்குறியானது.
இதையடுத்து, மன்னர் டாவோகுவாங் (Daoguang) போதைப்பொருளைப் புகைப்போருக்கும், விற்பனை செய்வோருக்கும் எதிராக, கடும் நடவடிக்கைகள் எடுத்தார். தடையை மீறிய பிரிட்டன் வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, சிறைக்குள் தள்ளப்பட்டனர். அபின் ஏற்றி வந்த கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. போதை இல்லாமல் சில இடங்களில் இளைஞர்கள் கொதி கொண்டு கிடைக்கும் அனைத்தையும் போதைக்காக பயன்படுத்த தொடங்கினர். கேஸ் ஒயில், கற்பூரம், ஒட்டுவதற்கு பயன்படும் கம், காய்ந்த தேயிலை நீர் என்று கைகளில் கிடைப்பதை எல்லாம் மாற்று போதைப் பொருளாக எடுக்க தொடங்கினர். இதன் விளைவு கொத்து கொத்தாக மரணங்கள் சீனா எங்கும் விழத்துவங்கியது. பல போதையாளர்கள் தாமாகவே உயிரை மாய்க்க தொடங்கினர். எனினும் சீன அரச போதை ஒழிப்பில் விடாப்பிடியாக இருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பிரிட்டன் அரசு, கிழக்கத்தியக் கம்பெனி படைகள் மூலம், சீனாவின் மீது போர் தொடுத்தது.
முதலாம் அபின் போர் 1839ம் ஆண்டு முதல் 1842ம் ஆண்டு வரை நடந்தது.
இதை வாசிக்கும் போதே இலங்கையின் தற்போதைய நிலையும் சமீப காலமாக ஏற்படும் இளம் மரணங்களுக்கான காரணமும் உங்கள் மனக்கண்ணில் வந்து போயிருக்கும்.
ஜனாதிபதி அனுரவின் போதை ஒழிப்பு முயற்சியின் பின்னணியில் சில துயரங்களும் வெளிப்படுகின்றன. அது தவிர்க்க முடியாதது. எமது பிரதேசங்களிலும் ஐஸ், ஹெரோயின் போன்ற கடுமையான போதைப் பொருட்கள் கிடைக்காததால் சில இளம் வாலிபர்கள் மாற்று வழிகளைத் தேடி போதைய தாக்கத்தைப் பெறும் மாத்திரைகளை ஒரே அடியாக விழுங்க தொடங்கியுள்ளனர்.
போதை மாத்திரைகள் மாத்திரம் இன்றி Tramadol, Penadol போன்ற மருத்துவ குளிசைகள், பெயிண்ட் இற்கு பயன்படுத்தும் தின்னர், Tooth Paste, கடுகு, இருமல் பாணி போன்றவற்றையும் மாற்று போதை பொருட்களாக பாவிக்க தொடங்கியுள்ள அவல நிலை தொடங்கியுள்ளதுடன் கடந்த சில நாட்களாக இளம் உயிர்கள் இந்த ஆபத்தான பழக்கத்தால் மரணமடைந்துள்ளனர்.
இது ஒரு எச்சரிக்கை மணி. இந்த நிலைமையை அலட்சியப்படுத்தினால் இன்னும் பல குடும்பங்கள் துயரத்துக்குள்ளாக நேரிடும்.
அல்லாஹ் கூறுகிறான்:
“நாங்கள் உங்களை பயமும் பசியும், பொருள், உயிர், விளைச்சல் இழப்பாலும் சோதிப்போம்”
(அல்-பகரா 2:155)
இன்று நம் சமூகத்தில் நிகழும் இளம் உயிரிழப்புகள் துயரமானவை தான், ஆனால் அவை நம்மை விழிப்புணரச் செய்யும் சோதனைகள். அல்லாஹ் சில மரணங்களைப் பிறருக்கான படிப்பினையாகவும், சமூகத்திற்கான மீட்பாகவும் மாற்றுவான்.
நம் நாட்டில் இப்போது நடைபெறும் போதை ஒழிப்பு முயற்சி முன்பை போன்று சாதாரண அரசியல் நடவடிக்கை அல்ல என்பதை உணர்ந்து இருப்போம். ஒரு கிராம் இரண்டு கிராம் என்று சில்லறை தூளர்களை பிடித்து படம் காட்டாமல் டொன் கணக்கில் உற்பத்தி செய்யும் மேல்மட்ட போதை மாபியாவின் தலையில் அரசாங்கம் கை வைக்க தொடங்கியாதன் விளைவே இந்த போதை தட்டுப்பாடும், அதன் வழியான மரணங்களும்.
சீனாவில் போதை அழிவை ஏற்படுத்தியபோல், இலங்கையிலும் இதனை நிறுத்தாவிட்டால், அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபடாவிட்டால் நம் நிலை கேள்விக்குறிதான். போதை கருவறுப்பு அரசாங்கத்தின் வேலை மாத்திரம் என்று நினைத்து ஒதுங்கி விடாமல் மக்களின், பெற்றோரின், பள்ளிகளின், மத அறிஞர்களின், மற்றும் ஒவ்வொரு சமூக தலைவரின் கடமை என்ற எண்ணம் வராத வரை இனி வரும் இழப்புங்களுக்கும் குறைவேதும் இருக்க போவதில்லை..
நன்றி!
📝Abdul Hathee