30/10/2025
GovPay ஊடாக ரூ. 568 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனை!
https://skytamilnews.com/?p=5019
இலங்கை அரசாங்கத்தின் சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டணங்களைச் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான மற்றும் வசதியான இணையவழி தளமான ‘GovPay’ மூலம், குடிமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், வரிகள், அபராதங்கள், பயன்பாட்டு கட்டணங்கள், கல்வி கட்டணங்கள் மற்றும் ஏனைய சேவைக் கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பணப்பைகள் மூலம் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று வரையில் 37,715 பரிவர்த்தனைகள் ஊடாக ரூபா 568,666,330 பெறுமதியான அரசாங்க நிதிப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பணியில் 184 அரச நிறுவனங்கள் இணைந்துள்ளன.
GovPay ஆனது, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) மற்றும் இலங்கை மத்திய வங்கி (CBSL) ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழ் செயற்படும் நாட்டின் தேசிய கொடுப்பனவு வலையமைப்பான LankaPay ஆல் இயக்கப்படும் ஒரு திட்டமாகும்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் முன்முயற்சியின் கீழ், இந்தப் புதிய தளம், அரசாங்கத்தின் நிதிப் பரிவர்த்தனைகளில் மேம்பட்ட கட்டுப்பாடு, துல்லியம், பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதன் மூலம் வருவாய் சேகரிப்பு செயல்முறைகளை நவீனப்படுத்துகிறது.
இதன் மூலம், அரச நிறுவனங்களுடனான நிதிப் பரிவர்த்தனைகளை முறைப்படுத்துவதன் மூலம் மின்-ஆளுகையை மேம்படுத்துவதற்கான இலங்கையின் டிஜிட்டல் மாற்ற முயற்சிகளில் இந்தப் திட்டம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.
GovPay, ஜனாதிபதியும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க தலைமையில் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இத்திட்டம் பல கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.