11/07/2025
சம்மாந்துறை - தொப்புக்குடா பிரதான வாய்க்கால் புனரமைப்புப் பணிகளுக்காக 112 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 5 மாத காலத்திற்குள் புனரமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்படும்!
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அவர்கள் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் திரு. சுனில் ரணசிங்க பதிலளிப்பு..!
பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் Dr. றிஸ்வி சாலி தலைமையில் இன்று (11.07.2025) இடம்பெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரிடம் கேள்வி எழுப்புகையில்,
இறக்காம பிரதேச செயலக பிரிவில் சம்மாந்துறை நீர்ப்பாசன திணைக்களத்தால் பராமரிக்கப்பட்டு வரும் தொப்புக்குடா பிரதான வாய்க்கால் நிரம்பி வழியும் காலங்களில் நிந்தவூர், சம்மாந்துறை பிரதேசங்களில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான நெற்காணிகள் நீரில் மூழ்குவதால் விவசாயிகளுக்கு தொடர்ந்தும் பாதிப்பு ஏற்படுவதுடன், தீகவாபி விகாரைப் பிரதேசம், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான நெற்காணிகளும் நீரில் மூழ்கி வருகின்றன. இப்பிரதான வாய்க்கால் (தொப்புக்குடா) ஒவ்வொரு தடவையும் உடைந்து நீர் வழிவதால் இப்பிரதேச விவசாய மக்களும் பெரும் நஷ்டமடைந்து வருகின்றனர். இப்பிரதான வாய்க்கால் புனரமைப்புப் பணிகள் தற்காலிகமான முறையில் திருத்தம் செய்வதனால் மீண்டும் உடையும் நிலைமை ஏற்படுகின்றது. எனவே, இதற்கு நிரந்தரமான முறையில் வாய்க்கால் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தொப்புக்குடா பிரதான வாய்க்கால் புனரமைப்புப் பணிகளை அவசரமாக மேற்கொண்டு சம்மாந்துறை, நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச விவசாயிகள் தொடர்ந்து நஷ்டமடையும் நிலைமையை நிரந்தரமாக இல்லாமல் செய்ய வேண்டும் எனவும், தொப்புக்குடா பிரதான வாய்க்கால் புனரமைப்புப் பணிகளுக்கு நீர்ப்பாசன அமைச்சினால் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் இப்பிரதான வாய்க்கால் புனரமைப்புப் பணிகள் நிறைவு செய்வதற்கான கால எல்லையையும் கௌரவ கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பாராளுமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.
இது தொடர்பாக பதிலளித்த கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் திரு சுனில் ரணசிங்க சம்மாந்துறை - தொப்புக்குடா பிரதான வாய்க்கால் புனரமைப்புப் பணிகளுக்கு 112 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 5 மாத காலத்திற்குள் புனரமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.