
02/02/2025
பூமியில் உயிர் எவ்வாறு உருவானதென்று பல நூறு ஆண்டுகளாக ஆய்வாளர்களுக்கு மத்தியில் ஒரு தேடல் இருந்து கொண்டேயிருக்கிறது. அதற்கான விடையைத் தேடி இன்றும் பல மில்லியன் டொலர்கள் செலவோடு பூமியிலும், பூமியை தாண்டியும் பல ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
உயிரின் தோற்றம் பற்றிய தேடலில் அறிவியலாளர்களுக்கு மத்தியில் இரண்டு கொள்கைகள் பிரபலமானவை. ஒன்று உயிர் இரசாயனக் கோட்பாடு (Abiogenesis), மற்றையது வான் விதை கோட்பாடு (Panspermia).
உயிர் இரசாயனக் கோட்பாட்டின் படி பூமி உருவாகிய காலத்தில் அத்தனை கனிமங்களும் அதன் ஆதிக் கடலில் கரைந்திருந்தன. ஆதிக் கடலெனும் இந்த கரைசல் அதிகளவான வெப்பம், கதிர்வீச்சு என்பவற்றினால் தாக்கமடைந்த போது அதிலிருந்த மூலக்கூறுகள் சேர்ந்து கடலின் எங்கோ ஒரு ஆழத்தில் முதல் உயிரினம் உருவானது.
இந்தக் கொள்கையை 1953 இல் மில்லர் - யுரே என்ற இரு ஆய்வாளர்கள் தங்கள் பரிசோதனைக் கூடத்தில் நிரூபித்துக் காட்டினர். அவர்களால் ஆதிக் கடலின் அதே நிலைமைகளை தங்கள் பரிசோதனைக் கூடத்தில் உருவாக்கி உயிரங்கிகளின் கட்டமைப்புக்கு அத்தியவசியமான 20 அமினோ அமிலங்களில் 5 அமினோ அமிலங்களை வெற்றிகரமாக உருவாக்க முடிந்தது.
இதனால் ஏனைய கோட்பாடுகள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டு உயிர் இரசாயனக் கோட்பாடு முதன்மை பெற்றது. பிற்காலத்தில் இந்தக் கோட்பாட்டை வைத்து முதல் உயிர் அந்த ஆதிக் கடலின் எவ்விடத்தில் தோன்றியிருக்கலாம் என ஆழமாக ஆராயப்படுகிறது. கடலுக்கடியிலிருக்கும் வெப்ப ஊற்றுகள், எரிமலைகள், கார ஊற்றுக்கள் என்பன இவ்வாறு ஆராயப்படுகின்றன.
வான் விதை கோட்பாட்டின் படி பூமியின் முதல் உயிரானது பூமிக்கு வெளியே எங்கிருந்தோ வந்திருக்கிறது. இதற்காக ஏனைய கோள்கள், அவற்றினுடைய துணைக்கோள்கள், விண்கற்கள் என்பன தொடர்ச்சியாக ஆராயப்படுகின்றன. ஆனால் இந்நாள் வரையிலும் இந்த ஆராய்ச்சிகள் எதுவும் சாதகமான பெறுபேறுகளை நமக்கு கொடுக்கவில்லை.
இப்படியிருக்க நாஸா 2016 ஆம் ஆண்டு பெண்ணு (Bennu) என்றழைக்கப்படும் ஒரு விண்கல்லை நோக்கி OSIRIS-REx என்றொரு விண்கலத்தினை ஏவியது. அது 2018 ஆம் ஆண்டு பெண்ணுவில் தரையிறங்கி ஆராந்து, 2020ஆம் ஆண்டு அதன் மாதிரிகளை சேகரித்துக் கொண்டு பூமியை நோக்கி கிளம்பியது. 2023 ஆம் ஆண்டு அம்மாதிரிகள் பூமியை வந்தடைந்தன.
நேற்று பெண்ணுவின் மேற்பரப்பில் பெறப்பட்ட இம்மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கின்றன. இவை அறிவியலில் அதிலும் குறிப்பாக பூமியில் முதல் உயிர் எப்படி உருவானது என்ற கோட்பாட்டில் யாருமே எதிர்பார்க்காத மிகப் பெரிய திருப்பத்தினை ஏற்படுத்தியிருக்கின்றன.
உயிரினங்களின் கட்டமைப்பிற்கு அத்தியவசியமான 20 அமினோ அமிலங்களில் 14 அமினோ அமிலங்கள் பெண்ணுவின் மேற்பரப்பில் கிடைத்திருக்கின்றன. அத்தோடு உயிரினங்களின் மரபணுக்களான DNA, RNA களை உருவாக்கும் உப்பு மூலங்கள் (Nucleobases) ஐந்தும் இருக்கின்றன.
DNA/RNA இன் உதவியுடன் அமினோ அமிலங்கள் தொடராக அடுக்கப்படும் போது அவை புரத நார்களை உருவாக்குகின்றன. இந்த புரதங்கள் சேர்ந்து கலங்களை உருவாக்குகின்றன. இந்த கலங்கள் DNA/RNA ஊடாக பிரிவடைந்து பெருகுகின்றன. அடுத்த கலங்களும் அதே செயற்பாட்டை செய்வதற்கான தகவல்களை பிரிவடைந்த DNA/RNA களே தமக்குள் வைத்திருக்கின்றன.
ஆக ஒரு உயிரங்கியை உருவாக்குவதற்கு தேவையான அத்தனை மூலக்கூறுகளையும் பெண்ணுவின் மேற்பரப்பில் பெற்றிருப்பதாக இன்று மார்தட்டிக் கொள்கிறது அறிவியல். இதற்கு மேலதிகமாக ஹைட்ரோ காபன் சங்கிலிகள், அமோனியா என்று இன்னும் பல வகை மூலக்கூறுகளும் இருக்கின்றன.
வரலாற்றில் முதல் தடவையாக நாம் பயன்படுத்தும் மேசை உப்பு (Sodium Chloride) உட்பட 11 வகை கனிமங்களை பெண்ணுவின் மாதிரிகள் கொண்டிருக்கின்றன. இவை யாவும் நீரில் கரைந்திருந்து காலப் போக்கில் நீர் ஆவியாகும் போது எவ்வகையான பளிங்குகளை உருவாக்குமோ அதே வடிவத்தில் காணப்படுகின்றன. இது விண்வெளி ஆய்வின் மிகப் பெரிய மைல்கல்.
இதிலிருந்து பெண்ணு பூமியில் உயிரினம் ஒன்றின் உருவாக்கத்துக்கு தேவையான அனேகமாக மூலகங்களையும், நீரையும் கொண்டிருந்த ஒரு விண்கல் என்பது தெளிவாகிறது. இது சனிக் கோளுக்கு பின்னாலுள்ள ஏதோவொரு வான்பொருளின் உடைந்த பகுதி என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஆக உயிரினங்கள் உருவாக்கக்கூடிய அத்தனை அம்சங்களையும் கொண்ட ஒரு வான் பொருளொன்று நமது சூரியத் தொகுதியில் தூரத்தில் எங்கேயோ இருக்கிறது. அது உயிரினங்கள் வாழலாம் என்று சந்தேகிக்கின்ற சனியின் துணைக்கோளான Enceladus ஆகவோ/ குருங் கோலான Ceres ஆகவோ இருக்கலாம்.
பெண்ணுவின் தோற்றம் 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்னானது. ஆனால் பூமியில் முதல் உயிரினம் 3.8 பில்லியன் வருடங்களுக்கு முன்தான் உருவாகியதாக அறிவியல் சொல்கிறது. ஆக பூமிக்கு பெண்ணு போன்ற ஏதேனுமொரு விண்கல் ஒன்றின் மூலமாக உயிர் வந்திருப்பதற்கான சாத்தியங்களே அதிகம் இருக்கின்றன.
இந்தக் கண்டுபிடிப்பு உயிர் இரசாயனக் கோட்பாட்டை விடவும் வான் விதைக் கோட்பாட்டை முதலாவதாக முன்னிருத்துகின்ற அதே வேளை உயிர் என்பது பூமிக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதையும் ஆதாரங்களுடன் சொல்லிச் சென்றிருக்கிறது.
#ஷியான்_யாக்கூப்