29/07/2026
கீரிமலை குப்பை மேட்டில் மர்ம நபர்கள் தீ வைப்பு – புகையால் மக்கள் அவதி
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள குப்பை மேட்டில் மர்ம நபர்கள் தீ வைத்ததாகக் கூறப்படும் சம்பவத்தால், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து புகை பரவி வருவதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வலி. வடக்கு பிரதேசத்தின் மாவிட்டபுரம் – கீரிமலை வீதியில் 1990ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் சுண்ணக்கல் அகழப்பட்டதால் உருவான பாரிய குழிகளை, கழிவுகளை கொட்டி மூடும் சுகாதார நில நிரவுகைத் திட்டம் 2019ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், பொதுமக்களின் கடும் எதிர்ப்பினால் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.
இந்நிலையில், அண்மைக் காலமாக வலி. தெற்கு பிரதேச சபையினரும் கடற்படையினரும் டிப்பர் வாகனங்கள் மூலம் அந்தக் குழிகளுக்குள் மீண்டும் கழிவுகளை கொட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக கடந்த ஜூலை 16ஆம் திகதி நடைபெற்ற வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில், அந்த இடத்தில் குப்பைகளை கொட்ட அனுமதிக்கக் கூடாது என்றும், ஏற்கனவே கொட்டப்பட்ட கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், அந்தத் தீர்மானத்தையும் மீறி வலி. தெற்கு பகுதியில் இருந்து கழிவுகள் கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, வலி. வடக்கு பிரதேச சபையின் சுகாதாரக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது குப்பைகளை கொட்ட வந்த கடற்படையின் டிப்பர் வாகனம் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று (28) காலை அடையாளம் தெரியாத குழுவொன்று அப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, ஏற்கனவே கொட்டப்பட்டிருந்த குப்பைகளுக்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக தீ தொடர்ந்து எரிந்து வருவதால், அடர்ந்த புகை பரவி அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.