19/01/2024
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று தென்ஆப்பிரிக்காவில் ஆரம்பமாகவுள்ளது.
இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 'A' பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா, பங்களாதேஷ், அயர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளும் 'B' பிரிவில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென்ஆப்பிரிக்கா மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளும், 'C' பிரிவில் அவுஸ்திரேலியா, இலங்கை, சிம்பாப்வே மற்றும் நமிபியா ஆகிய அணிகளும் 'D' பிரிவில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் என்பதுடன், லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் வீதம் மொத்தம் 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும்.
அதையடுத்து சூப்பர் 6 சுற்றுக்கு வரும் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தலா ஒரு முறை மோதும் என்பதுடன், இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், முதல் நாளான இன்று இரு போட்டிகள் நடைபெறவுள்ளன.
அதற்கமைய, தென்னாப்பிரிக்காவின் புளோம்பாண்டீனில் ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியில், அயர்லாந்து மற்றும் அமெரிக்கா அணிகளும், போட்செப்ஸ்ட்ரூமில் ஆரம்பமாகவுள்ள மற்றுமொரு போட்டியில மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளும் மோதவுள்ளன.
இவ்விரு போட்டிகளும், இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 க்கு ஆரம்பமாகவுள்ளன.
இதேவேளை, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் முன்னர், இலங்கையில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த போதும், இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறி, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு ஐ.சி.சி. இடைக்கால தடை விதித்தது.
ஆதைத் தொடர்ந்து இந்தப் போட்டித் தொடர் தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.