12/09/2025
"பெண்களை அவமதிக்க இடமளிக்க முடியாது" - பிரதமர்
ஆளும் தரப்பைச் சேர்ந்த பெண் எம்.பியான லக்மாலி ஹேமசந்திரவை அவமதிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பியான பிரசாத் சிறிவர்தன, கருத்து தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிக்கும் செயல்.பாராளுமன்றத்துக்குள் இருந்து கொண்டு பெண்களை அவமதிக்க இடமளிக்க முடியாது. எனவே சம்பந்தப்பட்ட எம்.பியை கடுமையாக எச்சரிக்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) அன்று விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன் கிழமை (10) நடைபெற்ற அமர்வின் போது லக்மாலி ஹேமசந்திர எம்.பியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார்.இது முற்றிலும் முறையற்றது.
தென்னாசிய நாடுகளில் இலங்கையில் தான் பெண் பிரதிநிதித்துவம் குறைவாகவே காணப்பட்டது. இம்முறை தான் 22 பெண் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்குத் தெரிவானார்கள். பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கின்ற நிலையில் தான் எதிர்க்கட்சியினர் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசுகிறார்கள்.இதனை பெண்களுக்கு எதிரான வன்முறை ,அச்சுறுத்தல் என்றே குறிப்பிட வேண்டும்.
இந்த முறையற்ற கலாசாரத்தை தோற்கடிப்பதற்காகவே நாங்கள் முயற்சிக்கிறோம். லக்மாலி ஹேமசந்திரவை அவமதித்ததை ஒட்டுமொத்த பெண்களையும் அவமதித்ததாகக் கருத வேண்டும்.ஆகவே பெண்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதற்கு இடமளிக்க முடியாது. பெண் பிரதிநிதிகளின் திறமைகள் ஆண் பிரதிநிதிகளால் சவாலுக்குட்படுத்தப்படுகின்றன . ஆகவே எதிர்க்கட்சிஎம்.பி.யின் முறையற்ற கருத்தை கடுமையாக எச்சரியுங்கள் என்றார்.
http://muslimvoice.lk/?p=41733