23/05/2025
NPP அலுவலகத்தில் எழுதிக் கொடுக்கப்படுவதை மனனம் செய்து, நாடாளுமன்றில் ஒப்புவிக்கின்ற துரதிஷ்ட நிலையில் புத்தளம் மாவட்ட MP பைசல்!
புத்தளத்திலிருந்து எழுவன்குளம் ஊடாக மன்னாருக்கான பாதையினை திறப்பது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னதாக மன்னாரில் இடம்பெற்ற கூட்டத்தில் உறுதி அளித்திருந்தார். அது தேர்தலுக்கு முன்னதாக இடம்பெறும் என்ற ஒரு செய்தியை சொல்லி இருந்த போதும் அது இடம்பெறவில்லை. தேர்தல் முடிந்து இன்று ஒரு மாதம் கழிந்த நிலையிலும், இதுவரைக்கும் அந்தப் பாதை திறப்பு தொடர்பில், அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் எவ்வித நகர்வுகளும் எடுத்ததாகத் தெரியவில்லை.
நாட்டின் அபிவிருத்தி, நாட்டு மக்களது தேவைப்பாடுகள் தொடர்பிலேயே தாங்கள் கவனம் செலுத்துவதாக கூறிவரும் தேசிய மக்கள் சக்தி, இதுவரைக்கும் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது தெள்ளத் தெளிவான உண்மையாகும். குறிப்பாக, வடக்கிலும் கிழக்கிலும் தமிழ், முஸ்லிம் மக்களுடைய காணிகளை கபளீகரம் செய்கின்ற பணியினை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாக, அரசியல் தலைமைகள் திறந்தவெளிகளிலும் பாராளுமன்றத்திலும் தங்களது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இதற்கு பதிலளிக்க முடியாமல் மழுப்பல் அரசியலை செய்கின்ற தேசிய மக்கள் சக்தி, பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்ற எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை இலக்கு வைத்து, மீண்டும் மிக மோசமான செயல்பாடுகளை ஆரம்பித்து இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
எதிர்க்கட்சி என்ற வகையில், தேசிய மக்கள் சக்திக்கு ஆலோசனைகள் அல்லது நீங்கள் வாக்குறுதி அளித்தவற்றை செய்யுங்கள் என்று கேட்டால், அதற்கு “உங்களது ஆட்சி காலத்திலேயே எல்லாம் இடம்பெற்றது. ஏன், உங்களது ஆட்சிக் காலத்தில் நீங்கள் இருந்தீர்கள்தானே, இவற்றை செய்து இருக்கலாம் அல்லவா” என்று பேசுகின்ற வெறும் பொம்மைகளாகவே அவர்கள் பாராளுமன்றத்தில் காணப்படுகின்றனர்.
புத்தளம், எழுவன்குளம் ஊடாக மன்னாருக்கான பாதையை திறப்பதில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் எடுத்த முயற்சிகள், அவற்றை இப்போது பாராளுமன்றத்தில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அறியமாட்டார்கள். முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் காலத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் ஊடாக, இந்த பாதையினை திறப்பதில் ரிஷாட் பதியுதீன் வெற்றிகண்டிருந்தார்.
வன்னி மாவட்ட மக்களின் வாக்குகளால் வந்தவர் ரிஷாட். இந்த வகையிலும் முன்னாள் அமைச்சர் என்ற வகையிலும் அவரது பணியை அவர் சரியாகச் செய்தார். ஆனால், அந்தப் பாதை திறப்புக்கு எதிராக, சூழலியலாளர்கள் என்கின்ற பலர் ஒன்று சேர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தனர். இதனையடுத்து, நீதிமன்றம், சட்டமா அதிபருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது. அதுமட்டுமல்லாமல், இந்தப் பாதையை பயன்படுத்துவதில் தாமத நிலையும் தடங்கல்களும் ஏற்படுத்தப்பட்டது.
இருந்தபோதும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், ரிஷாட் பதியுதீன் அவர்கள் இந்தப் பாதையினை திறப்பதற்கு தேவையான பல்வேறு முன்னெடுப்புகளை முன்னெடுத்தார். வீதி அபிவிருத்தி அதிகார சபை, சுற்றாடல் திணைக்களம் மற்றும் வன பரிபாலனத் திணைக்களத்தின் பிரதிநிதிகளைக்கொண்ட குழுவினர், அந்தப் பகுதிக்கு விஜயம் செய்து, இந்தப் பாதையினை மக்கள் போக்குவரத்துக்கு திறந்துகொடுப்பதற்கு இருக்கின்ற சாதக, பாதக நிலைகள் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையொன்றையும் சமர்பித்தார்கள். இருந்தபோதும், சட்டமா அதிபருடைய இனக்கபாடும் இந்த பாதை திறப்பதற்கு கிடைக்காத நிலையிலையே, நீதிமன்றத்தில் அவை வழக்காகத் தொடர்ந்து நிலுவையில் இருந்ததை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
இந்தப் பாதையின் வரலாறு தெரியாத, புத்தள மாவட்டத்திலிருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் அவர்கள், “பாராளுமன்றத்தில் நீங்களும் உறுப்பினராக இருந்தீர்கள், அமைச்சராக இருந்தீர்கள். அந்தப் பதவியில் இருந்தபோது, ஏன் இவற்றை திறக்கவில்லை? இப்பொழுது எங்களிடம் கூறுகிறீர்கள்” என்று கூறுகிறார்.
இதிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிகின்ற விடயம், NPP என்கின்ற தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் எழுதிக் கொடுக்கப்படுகின்ற அந்த பேப்பரை மனனம் செய்து, அதனை பாராளுமன்றத்தில் ஒப்புவிக்கின்ற துரதிஷ்ட நிலையில், இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது கவலையளிக்கிறது.
ஒரு விடயத்தை பேசுவதற்கு முன்னர், அது தொடர்பில் முழுமையான தகவல்களை பெற்றுக்கொள்ளாது, யாரோ கூறியதை வைத்துக்கொண்டு இவ்வாறு பாராளுமன்றத்தில் உரையாற்றுவது ஜனநாயகமா?
இந்த மக்களின் தேவைகள் பற்றி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகின்றபோது, அதற்கு தடை விதிப்பது இந்த ஆளும் அரசாங்கத்தின் வழமையான செயலாகவே இருக்கிறது. வெறும் வாய் பேச்சு மட்டுமே அவர்களது சேவையாக இருப்பதை மக்கள் இன்று காணுகின்றனர்.
நடந்து முடிந்த தேர்தலில் அவர்களுக்கு மக்கள் ஒரு சிகப்பு எச்சரிக்கையினை வழங்கியிருக்கிறார்கள். பொய்யையும் இயலாதவற்றையும் கூறி, மீண்டும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகின்ற ஒரு நகர்வுகளை அவர்கள் முன்னெடுப்பதை அவதானிக்க முடிகிறது.
இது எவ்வாறாக இருந்தபோதும், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எடுத்த முயற்சியின் பலனாக, ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்தப் பாதை திறக்கப்பட்டிருந்தமை நினைவுகூறப்பட வேண்டிய ஒரு வரலாறாகும்.
இப்போது, சகல அதிகாரங்களையும்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் அவர்கள் இதனை திறந்துகொடுத்து, மக்களின் போக்குவரத்துக்கு இலகுவாக உதவி செய்வதை விடுத்து, அவற்றை பேசுகின்றவர்களுக்கு எதிராக காழ்ப்புணர்ச்சிகொண்டு பேசுவது பொறுத்தமற்றது. தெரிந்த உண்மையினை பேசுவதை விடுத்து, பொறுத்தமில்லாத பேச்சும், சம்பந்தமில்லாதவற்றுக்கு மூக்கை நுழைப்பதும் கண்டிக்கத்தக்காது.
இந்தப் பாதை தொடர்பில், அரசின் இயலாத் தன்மையினை மறைப்பற்கு, இஸ்லாமியருக்கு எதிராக இஸ்லாமியரை பயன்படுத்தும் இந்த ஆட்சியாளரின் திட்டமே, புத்தளம் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது பைசல் மூக்கு நுழைத்த விடயம் காணப்படுகின்றது.
- இர்ஷாட் ரஹ்மதுல்லா