Alaitv. lk

Alaitv. lk The official page for Alaitv.lk - Reporting News & Current Affairs from Sri Lanka to the World in Tamil.

காத்தான்குடியில் அதிரடி சுற்றிவளைப்பு: கொழும்பிலிருந்து போதைப்பொருட்களுடன் வந்த மூவர் கைது..!மட்டக்களப்பு மாவட்ட குற்றத்...
12/08/2026

காத்தான்குடியில் அதிரடி சுற்றிவளைப்பு: கொழும்பிலிருந்து போதைப்பொருட்களுடன் வந்த மூவர் கைது..!

மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில், கொழும்பிலிருந்து மட்டக்களப்பு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் ஐஸ் மற்றும் ஹெரொயின் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், உப பொலிஸ் பரிசோதகர் மதுசங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர், காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரை வீதியில் நேற்று முன்தினம் (09) ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர் ஒருவரிடமிருந்து 100 கிராம் ஐஸ் போதைப்பொருளும், மற்றுமொரு சந்தேகநபரிடமிருந்து 110 கிராம் ஹெரொயின் போதைப்பொருளும், மூன்றாவது சந்தேகநபரிடமிருந்து 120 கிராம் ஹெரொயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்படி, மொத்தமாக 100 கிராம் ஐஸ் மற்றும் 230 கிராம் ஹெரொயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த 32, 31 மற்றும் 34 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் நேற்று (10) திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய, மூவரையும் மூன்று நாட்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கலாசார ஆடையுடன் கடமையாற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்ட முஸ்லிம் பெண் ஊழியர்களை இன்று (11)...
11/08/2026

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கலாசார ஆடையுடன் கடமையாற்றுவதற்கு தடைவிதிக்கப்பட்ட முஸ்லிம் பெண் ஊழியர்களை இன்று (11) செவ்வாய்க்கிழமை காலை வைத்தியசாலை நிர்வாகம் அழைத்து கூட்டமொன்றை நடத்தியுள்ளது.

தற்போது விடுமுறையிலுள்ள வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சுகுணனும் தொலைபே ஊடாக இந்தக் கூட்டத்தில் இணைந்துள்ளார்.

இதன்போது, கலாசார ஆடையுடன் பணியாற்றுவதற்கு அனுமதிக்குமாறு, குறித்த பெண் ஊழியர்கள் வைத்தியசாலை நிர்வாகத்துக்கு கோரிக்கைக் கடிதங்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

எனினும், குறித்த கடிதத்தை வழங்குவதில்லை என குறித்த பெண் ஊழியர்கள் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.

“அரசியலமைப்பின் மூலமும் சுற்றறிக்கைகள் வழியாகவும் வழங்கப்பட்டிருக்கும் உரிமையொன்றை, வைத்தியசாலை நிர்வாகத்திடம் எழுத்து மூலம் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது” என இந்த முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு தற்போது சட்ட உதவி வழங்கி வரும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையினால், குறித்த ஊழியர்கள், எந்தவித எழுத்து மூலக் கோரிக்கைகளையும் நிர்வாகத்துக்கு வழங்க வேண்டிய தேவை கிடையாது என்றும் சட்டத்தரணி மேலும் கூறியுள்ளார்.

கல்முனை ஆதார வைத்தியசாலை சம்பவம் : இனவாதமாக செயற்பட்ட அதிகாரிகள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் – காரைதீவு பி...
11/08/2026

கல்முனை ஆதார வைத்தியசாலை சம்பவம் : இனவாதமாக செயற்பட்ட அதிகாரிகள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபையில் வலியுறுத்தல்

நூருல் ஹுதா உமர்

காரைதீவு பிரதேச சபையின் 04ஆவது சபையின் 14ஆவது மாதாந்த சபைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (11.08.2026) காலை 9.30 மணிக்கு காரைதீவு பிரதேச சபை அலுவலக சபா மண்டபத்தில் நடைபெற்றது.

சபைத் தவிசாளர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டதுடன், 13ஆவது மாதாந்த சபைக் கூட்டத்தின் அறிக்கை நிறைவேற்றப்பட்டு, தவிசாளரின் அறிவிப்புகள் மற்றும் பல்வேறு பிரேரணைகள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, கல்முனை ஆதார வைத்தியசாலையில் அண்மையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பிலும் சபையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இச்சம்பவம் தொடர்பில் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் கடும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.

அவர் கருத்து தெரிவிக்கையில், அரச நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் தொடர்பில் நடைமுறையில் உள்ள அரச சேவை விதிமுறைகள், சுற்றுநிருபங்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான நீண்டகால நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் பாதிக்கக்கூடிய வகையில் எந்தவொரு நிர்வாக நடவடிக்கையும் அமையக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒன்றிணைந்து செயற்படும் இந்த சூழலில், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது ஆரோக்கியமானதல்ல எனவும் தவிசாளர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, எம்.ஏ. சுமந்திரன் போன்ற தமிழ் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தமிழ்–முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அரச நிறுவனங்களில் ஏற்படும் சர்ச்சைகள் அந்த நல்லிணக்கப் பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என அவர் தெரிவித்தார்.

இதைப்போன்று கருத்து தெரிவித்த உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், முன்னாள் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் மற்றும் சபை உறுப்பினர்களான என்.எம். ரணீஸ், ஏ. பர்ஹான், குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள், கல்முனை ஆதார வைத்தியசாலை சம்பவம் தொடர்பில் தமது கண்டனத்தையும் அதிருப்தியையும், கவலையையும் வெளிப்படுத்தினர்.

அவர்கள் தமது உரைகளில், அரச நிறுவனங்கள் தனிநபர்களின் விருப்பு–வெறுப்புகளின் அடிப்படையில் இயங்கக்கூடாது எனவும், அரச சட்டங்கள், சுற்றுநிருபங்கள், சேவை விதிமுறைகள் மற்றும் அரச நியமன நடைமுறைகள் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அத்துடன், அரச நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்படுவதுடன், எந்தவொரு நிர்வாகத் தீர்மானமும் சட்ட ரீதியானதும் நியாயமானதுமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்பது அனைத்து அரச நிறுவனங்களினதும் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்ட அவர்கள், தமிழ்–முஸ்லிம் மக்களிடையே தேவையற்ற முரண்பாடுகளை உருவாக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்த்து, பிரச்சினைகளை கலந்துரையாடல் மற்றும் சட்ட ரீதியான வழிமுறைகள் ஊடாகத் தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்புகள் முன்வர வேண்டும் எனவும் இவ்வாறான நிலைப்பாட்டில் உள்ள அந்த வைத்தியசாலை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கி சட்ட நடவடிக்கைக்கும் உட்படுத்த அரசாங்கத்தையும், உரிய அமைச்சு, திணைக்களம், அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டனர்.

இதேவேளை, கூட்டத்தில் சபைக்குச் சொந்தமான JCB வாகனத்தை திருத்தம் செய்வதற்கான மதிப்பீட்டுத் தொகையான ரூ.340,500 செலவில் திருத்தப் பணிகளை மேற்கொள்ள சபை அனுமதி பெறுதல் உள்ளிட்ட பிரேரணைகளும் ஆராயப்பட்டன. இதன்போது கருத்து தெரிவித்த உறுப்பினர் ஏ. பர்ஹான், பழைய வாகனங்களை தொடர்ந்தும் திருந்திக்கொண்டிராமல் அரசாங்கத்திடமிருந்தும், அமைச்சுக்களிடமிருந்தும் புதிய JCB வாகனத்தை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும், சபையின் பதில் செயலாளராக கடமையாற்றும் திருமதி வனிதா டேவிட் அமிர்தலிங்கம் அவர்களின் பதில் செயலாளர் சேவைக்காலம் நிறைவடைந்த பின்னரும் தொடர்ந்து பதில் செயலாளராக கடமையாற்றுவதற்கான அனுமதி தொடர்பிலும் சபையில் பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன் டெங்கு ஒழிப்பு, வடிகான் துப்பரவு, மாளிகைக்காடு மையவாடி செயற்றிட்டம், சட்டவிரோத வர்த்தக நிலையங்களின் வருகை தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டு பொருத்தமான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் சபை நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச சபையின் இன்றைய கூட்டத்தில் நிர்வாக ஒழுங்கு, அரச விதிமுறைகளைப் பின்பற்றுதல், பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், அத்துடன் தமிழ்–முஸ்லிம் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்கள் முக்கியத்துவம் பெற்றன.

சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த திட்டமிடப்பட்ட குற்றவாளி ஒருவருடன் மேலும் இரு சந...
11/08/2026

சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த திட்டமிடப்பட்ட குற்றவாளி ஒருவருடன் மேலும் இரு சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

வலான மத்திய ஊழல் தடுப்பு தாக்குதல் பிரிவின் அதிகாரிகள் குழுவினால், சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த திட்டமிடப்பட்ட குற்றவாளி ஒருவர் மலேசியாவில் வைத்து, அந்நாட்டு பொலிசார் மற்றும் சர்வதேச பொலிசாரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டு, 2026.08.10 ஆம் திகதி மாலை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் 41 வயதுடைய ரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். (குறித்த சந்தேகநபர் பேராதனை மற்றும் திஸ்ஸமஹாராம பிரதேசங்களிலும் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.)

இச்சந்தேகநபர்,

• 2014 ஆம் ஆண்டு பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் துப்பாக்கிகளைக் காண்பித்து ஒருவரை கடத்திச் சென்று தாக்கி, பலத்த காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பாகவும்,

• அதே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 2016 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு மனிதப் படுகொலை செய்தமை தொடர்பாகவும்,
கண்டி கௌரவ நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் இரண்டு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவராவார்.

மேற்குறித்த வழக்குகளுக்காக சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதன் காரணமாக, அவருக்கு எதிராக திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், குறித்த சந்தேகநபர் 2003 ஆம் ஆண்டு கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற பணக் கொள்ளை சம்பவம் தொடர்பாகவும் கைது செய்யப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன், 2007 ஆம் ஆண்டு கல்கிசை பொலிஸ் நிலையத்தினால் கைக்குண்டொன்றை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பாகவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்குறித்த சந்தேகநபர் மலேசியாவில் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவருடன் இருந்த இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரும், கல்கிசை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இரு சந்தேகநபர்களையும் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணை நடவடிக்கைகள் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனை மற்றும் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.

News Source : PMD

இலங்கையில் மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பில் பரிசீலனை..!​போதைப்பொருள்களால் அதிகரிக்கும் அச்சுறுத்தலுக்குக் பதி...
10/08/2026

இலங்கையில் மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பில் பரிசீலனை..!

​போதைப்பொருள்களால் அதிகரிக்கும் அச்சுறுத்தலுக்குக் பதில் வழங்கும் வகையின் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

​ஜனாதிபதி செயலகத்தில் திங்கள்கிழமை (10) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற "ரட்டம எக்கட்ட" (நாடொன்றாக இணைந்து) தேசிய செயல்பாட்டுக் குழுவின் கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

2026-08-09 காவல்துறை உத்தரவின்றி ஓட்டப்பட்ட சொகுசு வாகனம் ஒன்று வனப்பகுதியில் கைவிடப்பட்டுள்ளது.புல்மோட்டேயிலிருந்து மொர...
10/08/2026

2026-08-09 காவல்துறை உத்தரவின்றி ஓட்டப்பட்ட சொகுசு வாகனம் ஒன்று வனப்பகுதியில் கைவிடப்பட்டுள்ளது.

புல்மோட்டேயிலிருந்து மொரவேவ நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஒரு சொகுசு வாகனத்தை, மொரவேவ பொலிசார் தடுப்புகளைப் பயன்படுத்தி நிறுத்தியது. அப்போதும், அதன் ஓட்டுநர் காவல்துறை உத்தரவின்றி வாகனத்தைத் தொடர்ந்து ஓட்டியுள்ளார்.

பின்னர், அந்த வாகனம் ரோட்டாவேவ-தம்பாவேவ சந்திக்கு அருகிலுள்ள ஒரு வனப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக மொரவேவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் க...
09/08/2026

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தினசரி சோதனைகளின் போது 437 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, நேற்று (08) 33,024 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதன்போதே இந்த சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

2026 ஓகஸ்ட் 09ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு2026 ஓகஸ்ட் 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.சப்ரகமுவ...
09/08/2026

2026 ஓகஸ்ட் 09ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2026 ஓகஸ்ட் 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இன்றைய தினம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவ செல்வங்களுக்கும் Alaitv.lk இன் நல்வாழ்த்துக்கள்.   .lk  ...
09/08/2026

இன்றைய தினம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவ செல்வங்களுக்கும் Alaitv.lk இன் நல்வாழ்த்துக்கள்.
.lk

Clean Sri Lanka – தேசிய தூய்மை வேலைத்திட்டம்அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டத்தின் கீ...
08/08/2026

Clean Sri Lanka – தேசிய தூய்மை வேலைத்திட்டம்

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய தூய்மை வேலைத்திட்டத்தின் கீழ், Clean Sri Lanka – Green Sri Lanka வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இன்று 08.08.2026 சனிக்கிழமை காலை பாரிய சுத்திகரிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவின் புதிய காத்தான்குடி வடக்கு 167A கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள கடற்கரைப் பகுதியில், காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத் அவர்களின் தலைமையில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது கால்வாய்கள் , வீதிகள் மற்றும் கடற்கரைப் பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டதுடன், அடர்ந்து காணப்பட்ட புற்கள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மற்றும் Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் காத்தான்குடி இணைப்பாளர் MBM. பிர்தெளஸ் நழீமி, பிரதேச செயலக அதிகாரிகள், இலங்கை விமானப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், சுகாதாரப் பரிசோதகர்கள், பிரஜாசக்தி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு துப்புரவுப் பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்கினர்.

மேலும், இவ்வேலைத்திட்டம் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் ஒரே நாளில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் சமூக நலனை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் இவ்வாறான தேசிய வேலைத்திட்டங்களில் காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பும் தொடர்ந்தும் தனது சமூகப் பொறுப்புடன் பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Alaitv. lk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share