
22/07/2022
பாராளுமன்றம், மக்கள், புதிய ஜனாதிபதி – கற்றுக் கொள்ள வேண்டிய கசப்பான பாடங்கள்
Daily FT இணையத்தள ஆசிரியர் தலையங்கம் - வியாழன், 21 ஜூலை 2022
தமிழாக்கம் : முஹம்மத் பகீஹுத்தீன்.
இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்காவை 20 ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றம் தெரிவு செய்தது. அவர் 223 வாக்குகளில் 134 வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளார். பிரதான எதிர் தரப்பு போட்டியாளரான டலஸ் அழகப்பெருமவுக்கு 82 வாக்குகளுக்குகள் மாத்திரமே கிடைத்தன.
1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் கீழ் இடைக்கால ஜனாதிபதியை பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கும் இரண்டாவது நிகழ்வு இதுவாகும். இதற்கு முன்னர் 1993ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் டி.பி. விஜேதுங்க பிரேமதாசவின் எஞ்சிய காலப்பகுதிக்கு ஜனாதிபதியாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
அன்று இடக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட விஜேதுங்க அவர்கள் பிரேமதாசவினால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகவும் மற்றும் அவரது இயல்பான வாரிசும் ஆவார். அவரது கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையும் இருந்தது. மேலும் பிரேமதாசாவின் எஞ்சிய பதவிக்காலத்தில் பணியாற்றுவதற்கான சட்டப்பூர்வத்தன்மையும் மக்களின் ஆணையும் அவருக்கு இருந்தது.
2022 ஆண்டில் நிகழ்நதுள்ள விடயங்களும் மிகவும் வித்தியாசமானது என்று குறிப்பிடுவதற்கு இல்லை.
80 ஆண்டுகளாக இலங்கை மண்ணில் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய மிகவும் பழமை வாய்ந்த கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரே விக்கிரமசிங்க ஆவார். ஆனால் ரணில் விக்கிரமசிங்க கால்நூற்றாண்டு காலம் ஐ.தே. கட்சியின் தலைவராக இருந்த நிலையில் 2020 ஆண்டில் நடைபெற்ற பாரளுமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்தார். அவரது தலைமையின் கீழ் களமிறங்கிய ஐ.தே.கட்சி நாடளாதவிய ரீதியில் பெற்ற வாக்குகள் வெறும் 3 வீதத்திற்கும் குறைவானதாகும். படுமோசமான தோல்வியை சந்தித்த அந்தத் தேர்தலில் ஐ.தே.க.வின் எந்த வேட்பாளரும் வெற்றி பெறவில்லை. ஆனால் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையின் புண்ணியம் காரணமாக அக்கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்தது.
ஜனநாயகத்தை மதிக்கும் எந்த கட்சியாக இருந்தாலும், அந்த கட்சியின் தலைவர் இவ்வளவு மோசமான படுபயங்கரமான தோல்வியை சந்திக்க நேரிட்டால் கட்டாயமாக ராஜினாமா செய்திருக்க வேண்டும். அதுதான் ஒரு கனவான் அரசியல்வாதிக்கு மரியாதையாகும். இங்கு அதற்கு பதிலாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட்ட தனியொரு ஆசனத்தை நிரப்புவதற்காக ரணில் விக்கிரமசிங்க தன்னை தானே நியமித்துக் கொண்டார்.
கடந்த மே மாதம், கோட்டாபய ராஜபக்ஷவின் விருப்பத்தின் பேரில் பிரதமர் பதவியை ஏற்பதற்கு யூ.என்.பி தலைவர் ஒப்புக்கொண்டமை யாருமே எதிர்பார்க்காத விடயமாகும். இதனால் ஜனாதிபதி கோட்டாபயவை பதவி நீக்கம் செய்யக் கோரி நாடுமுழுவதும் பொங்கி எழுந்த மக்கள் இயக்கத்தின் உயிரோட்டத்தையே அவர் நிலைகுலையச் செய்து விட்டார்.
ரணிலுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இருந்த இறுக்காமான சம்பந்தம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு கடும் நஞ்சாகவே பட்டது. அவர்கள் 'கோட்டா கோ ஹோம்' என்ற எதிர்ப்புக் கோஷத்துடன் விக்கிரமசிங்கவும் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை அழுத்தமாகவே முன்வைத்தனர்.
இலங்கை வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவர் தனது பதிவி காலத்தில் இராஜினாமா செய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவேயாகும். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகத்தான ஆணையைப் பெற்ற ராஜபக்ச அவர்கள் மிக மோசமனா முறையில் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யதன் காரணமாக ஆட்சி செய்வதற்கான சட்டபூர்வ தன்மையை இழந்தவராகக் கருதப்பட்டார்.
இலங்கை மண்ணில் ஜூலை 9 ஆம் திகதியன்று மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை அடைந்ததை உலகமே அறிந்தது. பொங்கியெழுந்த மக்களின் ஆக்ரோசம், வெறுப்பு கடும் அதிருப்தி காரணமாக, ரணில் மக்களின் நம்பிக்கையையும் அபிமானத்தையும் முற்றிலும் இழந்துவிட்டார் என்பதையே அது நிரூபித்துள்ளது.
தற்போது நாட்டில் பற்றி எரியும் சில கேள்விகள் உள்ளன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவரினால் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் ஒருவர் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் இருக்கும் போது ஆட்சியதிகாரம் செய்வது தர்மமாகுமா? அது ஒரு கனவான் அரசியலாகுமா? விக்கிரமசிங்கவை தெரிவு செய்ததன் மூலம் மக்கள் எழுச்சி இயக்கத்தின் விருப்பத்தை பாராளுமன்றம் வெளிப்படுத்தியுள்ளதா? போராட்டக்காரர்களின் அழைப்புக்கு பாராளுமன்றம் செவிசாய்த்துள்ளதா?
நேற்றைய வரலாற்று சிறப்புமிக்க பாராளுமன்றத்தின் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், இந்தக் கேள்விகளுக்கான பதில் 'இல்லை' என்பதே திட்டவட்டமான பதிலாகும்.
சந்தேகத்திற்கு இடமின்றி ஜனாதிபதி விக்கிரமசிங்க சட்டப்பிரகாரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்றத்தின் பொறிமுறையும் சுதந்திரமாகவும், நியாயமாகவும், வெளிப்படையில் சட்டப்படியும் அமைந்தன. ஆனால் சட்டபூர்வதன்மையுடையது என்பதற்கும் சட்டப்படி என்பதற்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. பாராளுமன்றம் நேற்று ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்துள்ளமை இந்த வேறுபாட்டை மேலும் ஆழப்படுத்தியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மையான மக்கள் ஆணை கிடையாது. அவர் ஒரு கும்பலின் பிரதிநிதியாக இருந்தன் மூலம் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளார். உண்மையில் அவர் பெரும்பான்மையான SLPP வாக்குகளின் பலத்தால் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கை பொதுசன முன்னணி (SLPP) எனும் அரசியல் கூட்டணி பொதுமக்களின் நம்பிக்கையை இழந்த கடும் வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஒரு கட்சியாகும். அக்கூட்டணி ஆட்சிக்கு கொண்டு வந்துள்ள ஜனாதிபதியும் மக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் அல்ல என்பது தெளிவு.
பதவி நீக்கம் செய்யப்பட்ட கோட்டாபயவிற்கு பாதுகாவலராக வரக்கூடிய ஜனாதிபதிகள் விக்கிரமசிங்கவாக அல்லது வேறு பிரதிநிதிகளாக இருக்கட்டும், அவர் யாராக இருந்தாலும் பதவியில் இருந்து வெளியேற்றப்படும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்றே மக்கள் எழுச்சிப் போராளிகள் உறுதியளித்துள்ளனர்.
அமைதியும் ஸ்திரத்தன்மையும் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற இலங்கை தேசத்திற்கு, கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்கு அவருடைய ஒரு பாதுகாவலராக அமையும் பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதால் அந்த இலக்கை அடையவே முடியாது. மக்கள் எழுச்சி இயக்கமானது, ராஜபக்ச கும்பல்களால் தெரிவு செய்யப்படும் அடுத்த வாரிசை நிச்சயமாக எதிர்க்கும். துரிதமான பாரிய ஒரு செயற்திட்டம் அல்லது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்கான விரைவான ஒரு திட்டம் கொண்டுவரப்படாத வரை எழச்சிப் போராளிகளின் அழுத்தும் கூடுமே தவிர குறையாது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு தீர்க்கமான ஒரு தெரிவுதான் உள்ளது. அது என்ன வென்றால், 19வது திருத்தத்தில் பொதிந்துள்ள கட்டமைப்புகளையும் கட்டுப்பாடுகளையும் மற்றும் ஒழுங்குவிதிகளையும் குறைந்தபட்சம் மீட்டெடுக்கும் வகையில் 21வது திருத்தத்தை விரைவாக நிறைவேற்றுவதாகும். அதுவே தற்போதைய ஸ்திரத்தன்மைக்கான ஒரே வழியாகும்.
அடுத்த தேர்தலில் மக்கள் தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் வரையில் ஒரு அமானிதமாகவே ஜனாதிபதி ரணில் தனது பதவியை வகிக்கிரார் என்பதை இடைக்கால ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும்.
கட்டம் கட்டமான மாற்றம் வேண்டும் என்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்ற பெரும் கூச்சல் நிறைந்த சூழலில், வீதியில் எழுப்பப்படும் கோரிக்கைகளுக்கு சாதகமான சமிக்ஞையை கொடுக்காமல் ஜனாதிபதி விக்கிரமசிங்க வினைத்திறனுடன் ஆட்சி செய்வார் என நம்ப முடியாது. அதுவும் அவர் தனக்கு முன்சென்றவரின் கசப்பான பாடங்களைக் கற்றுக்கொள்ள விரும்பினாலே தவிர நிறைவேறாது.