04/05/2017
ஜெயலலிதா மறைவு விவகாரம்: தேசியப் பாதுகாப்புப் படை மீது எழுப்படும் சந்தேகங்கள்.
என்.எஸ்.ஜி எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படையை பொறுத்தமட்டில் ஒரு முக்கிய அரசியல் தலைவர் அவரது குடியிருப்பில் இருந்து இன்னொரு இடத்திற்குப் பயணம் செய்துவிட்டு, மீண்டும் தன் இருப்பிடத்திற்கு திரும்பி வரும்வரை சம்பந்தப்பட்ட அரசியல் தலைவரின் பாதுகாப்பு இவர்களின் பொறுப்பில்தான் இருக்கும்.
தேசியப் பாதுகாப்புப் படையான கருப்புப் பூனைப்படை 1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே மொத்தம் 16 முக்கிய அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே, என்எஸ்ஜி படையினரின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியும் இசட் பிளஸ் பாதுகாப்புக்கு உரியவர்கள்.
பொதுவாக, வி.ஐ.பி-க்கள், வி.வி.ஐ.பி-க்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பானது Y, Y-பிளஸ், X, X-பிளஸ், Z, Z-பிளஸ் என வகைப்படுத்தப்படும். மாவட்ட ஆட்சித் தலைவர், முக்கிய அரசியல் பிரபலங்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் என்ற ரேங்கில் உள்ளவர்களுக்கு ஒய் மற்றும் ஒய் பிளஸ் பிரிவில் உள்ளவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இப்போது ஓ.பன்னிர் செல்வத்துக்கு ஒய் பிரிவில் மத்திய அரசு பாதுகாப்பு வழங்கியுள்ளது.
முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் ஆகியோருக்கு Z- பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்தக் கருப்புப் பூனைப் படையினர் அனைவரும் மத்திய உள்விவகாரத்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்.
ஒரு வி.வி.ஐ.பி-க்கு 40 என்.எஸ்.ஜி வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஷிப்ட் அடிப்படையில் செயல்படும் இவர்களில் ஒரு ஷிப்டில் ஒரு குழு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும். அந்தக் குழுவில் ஐந்து ரேஞ்சர்கள் இருப்பார்கள் ஒரு உதவி ஆணையர் ரேங்க்கில் உள்ளவர் தலைமை பொறுப்பில் இருப்பர்.
ஒவ்வொரு வி.வி.ஐ.பி-க்கும் தனிப்பட்ட மெய்க்காவலர்கள், பாதுகாவலர்கள் தவிர, மாநில அரசு அளிக்கும் கமாண்டோ பாதுகாப்பும் இருக்கும். அவர்களுக்கும் அடுத்த உயர் பாதுகாப்புதான் என்.எஸ்.ஜி.
ஒரு வி.வி.ஐ.பி வீட்டில் இருந்து புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் முன்னதாக, இவர்கள் தயாராக இருப்பார்கள். அதுவரை வி.வி.ஐ.பி-யின் தனிப் பாதுகாவலர்கள் மற்றும் மாநிலப் பாதுகாப்புப்படை வசம் உள்ள வி.வி.ஐ.பி-யின் பாதுகாப்பு என்.எஸ்.ஜி-யிடம் ஒப்படைக்கப்படும்.