03/10/2026
நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த கல*கொட அத்தே ஞான*சார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். தீனியாவல பகுதியில் உள்ள ஆரணிய சேனாசனம் (ஆச்சிரமம்) ஒன்றில் தலைமறைவாக இருந்தபோதே இவர் கைது செய்யப்பட்டார்.
2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அனுமதி இன்றி நீதிமன்றத்தில் பேசியமை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக ஞான*சார தேரர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் திகதி இக்குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞான*சார தேரருக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுடன், அதனை 6 ஆண்டுகளில் அனுபவித்து முடிக்கும் வகையில் தீர்ப்பளித்தது.
பின்னர், அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுவித்தார். எனினும், இந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு அரசியலமைப்புக்கு முரணானது எனத் தெரிவித்து பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி அந்தப் பொதுமன்னிப்பை ரத்துச் செய்து தீர்ப்பளித்தது.
உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் தண்டனை நிறைவேற்றப்படாமை குறித்து மனுதாரர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது அறிவித்தல் அனுப்பப்பட்டிருந்தபோதிலும் ஞான*சார தேரர் ஆஜராகாததால், அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்தே பொலிஸார் அவரைத் தேடி வந்த நிலையில் தற்போது கைதாகியுள்ளார்.