
21/07/2025
கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள ஜும்ஆப் பள்ளிவாசலொன்றில் மூத்த உலமா ஒருவர் ஜும்ஆ பிரசங்கத்தினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது வக்பு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தினை கடுமையாக வலியுறுத்தியதுடன் வக்பு செய்தால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாக புனித அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸில் குறிப்பிடுகின்ற விடயங்களை எல்லாம் சுட்டிக்காட்டினார்.
எனினும், வக்பு சொத்துக்கள் சூறையாடப்படுவது தொடர்பிலும் அதற்காக வழங்கப்படுகின்ற தண்டனைகள் தொடர்பில் எதுவும் குறித்த ஜும்ஆவில் பேசப்படவில்லை.
ஜும்ஆத் தொழுகை முடிவடைந்த பின்னர் குறித்த மூத்த உலமாவினைச் சந்தித்து இது தொடர்பில் கூறினேன். இன்ஷா அல்லாஹ் அடுத்த ஜும்ஆவில் நீங்கள் கூறிய விடயம் தொடர்பில் பேசுகின்றேன் என்று சமாளித்தச் சென்றார்.
குறித்த பள்ளிவாசலுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை தான் இந்த மூத்த உலமா ஜும்ஆப் பிரசங்கத்திற்காக வருவது வழமை என ஜமாத்தார்கள் தெரிவித்தனர். அப்படி என்றால் வக்பு சொத்து சூறையாடப்படுவது தொடர்பில் குறித்த உலமாவின் ஜுஆப் பிரசங்கத்தினை கேட்பதற்கு இன்னும் ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
கபூரியா அரபுக் கல்லூரிக்கு வக்பு செய்யப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் ஏற்கனவே சூறையாடப்பட்டுவிட்டன. கள்-எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரிக்காக வக்பு செய்யப்பட்ட சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கான முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும், இறைவனின் உதவியுடன் குறித்த முயற்சி தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது போன்று எமது மூதாதையர்களினால் நாடளாவிய ரீதியில் எதிர்கால முஸ்லிம் சமூகத்திற்காக வக்பு செய்யப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தற்போது சூறையாடப்படுக் கொண்டிருக்கின்றன. காத்தான்குடி மத்திய கல்லூரிக்குச் சொந்தமான வக்பு செய்யப்பட்ட காணியை அபிவிருத்தி என்ற போர்வையில் சூறையாட ஒரு தரப்பு முயல்வதாக பாடசாலை சமூகத்தினால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம் சமூகத்திற்காக வக்பு செய்யப்பட்ட சொத்துக்கள் சூறையாடப்படுவது தொடர்பான விழிப்புணர்வு மிகவும் அவசியமானதொன்றாகும். எனினும், அதனை மேற்கொள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் சிவில் சமூகங்கள் உள்ளிட்ட இலங்கை முஸ்லிம் சமூக தவறிவிட்டுள்ளது.
‘ஜும்ஆ மேடை’ என்பது சக்தி வாய்ந்த ஊடகமொன்றாகும். இதன் ஊடாக முஸ்லிம் சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வுகளை மிகவும் இலகுவாக வழங்க முடியும். எனினும், அது வினைத்திறனாக இடம்பெறுகின்றதா என்பதே இன்று வரையுள்ள கேள்விக்குரியாகும்.
வக்பு சொத்துக்கள் சூறையாடப்படுவது தொடர்பிலான விழிப்புணர்வினை ‘ஜும்ஆ மேடையின்’ ஊடாக இலகுவாக மேற்கொள்ள முடியும். அத்துடன் இந்த சூறையாடல் எனும் பாவத்திற்காக இறைவனிடமிருந்து கிடைக்கின்ற தீமைகள் தொடர்பில் எடுத்துக் கூறி அந்தப் பாவத்தினை தடுக்க வேண்டியதும் உலமாக்களின் கடமையாகும். எனினும், அதனை மேற்கொள்ள உலமாக்கள் தவறிவிட்டனர். இதற்கான சிறந்த உதாரணம் தான் கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற ஜும்ஆவாகும். ஒரு நன்மையினைக் கூறும் போது அதன் மறுபக்கமான தீமையினையும் கூற வேண்டிய சமயத் தலைவர்களின் தலையாய கடமையாகும்.
வக்பு சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்கின்ற விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலையீடு மிகவும் அவசியாகும். அத்துடன் இது தொடர்பிலான விழிப்புணர்வினை மேற்கொள்ளுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்த வேண்டியது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலையாய கடமையாகும்.
இதனை மேற்கொள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தவறவிட்டுள்ளதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இலங்கை முஸ்லிம்களின் அனைத்து விடயங்களிலும் தலையிடுகின்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வக்பு சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படும் விடயத்தில் இதுவரை வெளிப்படையாக பேசாத விடயம் கவலையைத் தோற்றுவித்துள்ளது.
அவ்வப் பிரதேசங்களிலுள்ள பண முதலைகளினாலேயே வக்பு சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படுகின்ற விடயம் யாவரும் அறிந்த உண்மையாகும். இவர்களுக்கு எதிராக போராடுவது பண வசதியற்ற அப்பாவிகளோயாகும். சில வக்பு சொத்து மோசடி வழக்கு விசாரணைகளின் போது இதனை நேரடியாக அவதானிக்க முடிந்தது.
எனவே, இலங்கை முஸ்லிம் சமூகத்திற்காக வக்பு செய்யப்பட்ட சொத்துக்களை பாதுகாப்பது அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும். இதற்காக வேண்டி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உட்பட அனைத்து முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் களத்தில் இறங்க வேண்டியுள்ளது.
அதேநேரம், ‘ஜும்ஆ மேடையின்’ ஊடாக வக்பு சொத்து கொள்ளையடிப்பிற்கு எதிராக பாரிய விழிப்புணர்வுகளை உடனடியாகவும் அவசரமாகவும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து உலமாக்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்க வேண்டும் என இந்தப் பத்தியின் ஊடாக கோரிக்கை விடுக்கிறோம்.
காலங் கடந்துள்ள இந்த விழிப்புணர்வு என்ற விடயத்தினை இப்போதிருந்தாவது நாம் ஆரம்பிப்போம். இதனை செய்யத் தவறின் ஏனைய வக்பு சொத்துக்களும் நிச்சயம் சூறையாடப்படும்!