08/07/2025
28/06/2025 முதல் 06/07/2025 வரை சிங்களச் சிறையில் வாடும் தமிழ் அரசியற் கைதிகளின் கதியை அன்றாடம் பதிவிட்டு வந்தேன். பலர் படித்திருப்பினும் சிலர் மட்டுமே கருத்திடல் செய்தனர்.
சிங்களச் சிறை , அரசியற் கைதி , விடுதலை போன்ற பதப் பிரயோகம் சிலருக்கு எரிச்சல் ஊட்டியிருக்கலாம். ஆட்சியாளரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேளுங்கடா என்று அந்தச் சிலர் தம் மனதுள் முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது.
பாரிய குற்றஞ்சாட்டப்பட்ட தமிழ் அரசியற் கைதிகளில் கணிசமானோர் 2009 இலிருந்து பலதடவை தம் குடும்பத்தினர் ஊடாக ஆட்சியாளரிடம் மன்னிப்புக் கோரிக் கடிதம் அனுப்பினர். அவை பயன் தரவில்லை. ஆனால் நான் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடவில்லை.
எனக்கெதிராக அரசினால் கொழும்பு மேல்நீதிமன்றில் தொடுக்கப்பட்ட இரண்டு வழக்குகளிலும் சட்டத்தரணியை நியமிக்காமல் எனக்காக நானே வாதாடினேன். ஒரு வழக்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழும் இன்னொரு வழக்கு அவசரகாலச் சட்டத்தின் கீழும் போடப்பட்டிருந்தன.
சிங்கள மொழித் தேர்ச்சியோ வழக்காடும் சட்ட அறிவோ பயிற்சியோ எதுவும் இல்லா நிலையில் மனத் துணிவை மட்டுமே நம்பி ஆபத்தான இக் கருமத்தில் இறங்கினேன்.
சிறையிலிருந்து தமிழ்த் தேசிய மூத்த சட்டத்தரணி ஒருவரைத் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்க முயன்றேன். தன் மனைவியின் சகோதரி குடும்பம் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள். எனக்கு இப்போது நேரமில்லை என்று கூறிக் கதையை முடித்து விட்டார். என்னால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மீது நடத்தப்பட வேண்டிய உண்மை விளம்பல் விசாரணை ( Voir Dire ) பற்றிய அறிவு அப்போது எனக்கு இருக்கவில்லை. நீதிமன்றும் எனக்கு அதைத் தெளிவுபடுத்தவில்லை. இந்த இடத்தில் நான் சறுக்கியதன் காரணமாகவே தண்டிக்கப்பட்டேன். இது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான 2008 இல் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையதில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கு. 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை 2017 இல் எனக்கு விதிக்கப்பட்டது. தண்டனையைக் குறைக்கக் கோருமாறு கேட்கும் வாய்ப்பு நீதிமன்றினால் தரப்பட்ட போதும் நான் அதை வேண்டாம் என நிராகரித்தேன்.
அவசரகாலச் சட்டத்தின் கீழான அடுத்த வழக்கு என்வசம் ஆறு கைக்குண்டுகள் வைத்திருந்த குற்றச்சாட்டுத் தொடர்பானது. குற்றத்தை ஒத்துக்கொண்டால் மூன்று மாதம் சிறைத் தண்டனை தருவதாக நீதிமன்று எனக்கு ஆசை காட்டியது. என் கைது தொடர்பில் அரசுத் தரப்பினால் தவறான தகவல் முன்வைக்கப்பட்டதுடன் முக்கிய பொலிஸ் சாட்சி பொய்யுரைப்பதை குறுக்கு விசாரணை செய்து நான் நிரூபித்தேன். ஆனாலும் நீதிமன்று 2018 இல் ஆயுள் தண்டனை விதித்தது.
நீதிமன்றங்களில் வழங்கப்படுவது தீர்ப்பேயன்றி நீதியல்ல. இரண்டு தீர்ப்புக்கும் எதிராக மேல்முறையீடு செய்தேன். அங்கும் எனக்காக நானே வாதாட அனுமதி பெற்றேன். இதன்போது சட்ட நுணுக்கங்களை அறிந்து கொண்டவனாக நான் வளர்ந்து விட்டேன்.
2023 ஆகியும் மேலும் மேன்முறையீட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டே வந்தது.
இதற்குள் கொறோனா தன் கைவரிசையை ஒருபுறம் காட்ட மறுபுறம் மூன்று நோய்கள் என்னைத் தாக்கின. பலதடவை உண்ணாவிரதம் இருந்ததால் ஏற்கனவே என்னுடல் பலவீனப்பட்டிருந்தது. சிறைக்குள்ளேயே என் சாவு என நான் எண்ணியபோது முக்கியமான மூவர் என் விடுதலைக்குக் காரணமாயினர்.
முதலாமவர் புற்றுநோய். Cancer.
இரண்டாமவர் பக்கவாதம். Stroke.
மூன்றாமவர் நடுக்குவாதம் Parkinson.
இவர்களுடன் இணைந்து பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றி !!!!!!!!!!
அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் யாருக்காவது ஏதாவது தெளிவின்மை அல்லது மாற்றுக் கருத்து இருப்பின் கருத்திடுங்கள். கலந்துரையாடலாம்.
----- தேவதாசன்.
08/07/2025.
பகிர்வு :-
நன்றி 🙏 தேவதாசன் கனகசபை