08/06/2025
#செம்மணி_மனிதப் புதை*குழியில் 600 பொதுமக்கள் கொ*ன்று புதைக்கப்பட்டு இருக்கின்றார்கள்
செல்வி கிரிஷாந்தி படுகொ*லையுடன் தொடர்புடைய இராணுவத்தினருக்கு மரண தண்டனை விதிப்பதற்கு முன்னர் நீங்கள் எதாவது கூறப்போகின்றீர்களா என வினவியதற்கு, சோமரத்ன ராஜபக்ச எனும் இராணுவ அதிகாரி வழங்கிய பதில் செம்மணி படுகொலையை வெளி கொணர்ந்திருந்தது .
சுமார் 400 தொடக்கம் 600 வரையான இளைஞர், யுவதிகள் கொ*லை செய்யப்பட்டு செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக கிரிஷாந்தி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
அதே போல ஜெயவர்தனா, துடுகல்ல, உதயமார, லலித் ஹோவகே, அப்துல் நஷார் ஹமீத், சமரசிங்க உட்பட்ட 20 இராணுவ அதிகாரிகளையும் சூத்திரதாரிகளாக அவர் அடையாளம் காட்டியிருந்தார்
யாழ்ப்பாணம் கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றிய திரு செல்வரத்தினம், அரியாலையைச் சேர்ந்த பார்த்தீபன், சுதாகரன் என்ற இரு இளைஞர்கள், இளம் தம்பதிகள் என பாதிக்கப்பட்ட பலருக்கு நடந்த கொடூரத்தை விபரித்தார்
செம்மணி மற்றும் பகுதிகளில் உள்ள 10 மனிதப் புதைகுழி இடங்களை நான் அடையாளம் காட்டுவேன் என்றார்
மற்றுமொரு குற்றவாளியான ஏ.எம். பெரேரா ஐந்து இடங்களைக் காட்ட இருக்கின்றார் என சொன்னார்
ஒரே புதைகுழியில் மட்டும் 25 முதல் 30 வரையான சடலங்கள் ஒன்றாகப் போடப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன என பல தகவல்களை சொன்னார்
கிரிஷாந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் வழங்கிய வாக்குமூலத்தினையடுத்து, செம்மணி புதைகுழியினை அகழ்வதற்கு நீதிபதி திரு மாணிக்கவாசகர் இளஞ்செழியன், யாழ் நீதவான் நீதிமன்ற விசேட நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
செம்மணி புதைகுழி 1999 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 2000 ஆம் ஆண்டு பங்குனி 27 ஆம் திகதி வரையான ஒன்பது மாதங்கள் நடைபெற்றன.
கிரிஷாந்தி படுகொலையின் மரண தண்டனைக் கைதிகளை விசேட விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து செம்மணி புதைகுழியைத் தோண்டப்பட்டன
செம்மணியில் 25 புதைகுழிகள் தோண்டப்பட்டு 16 சடலங்கள் மீட்கப்பட்டன, எனினும், அவர்கள் அடையாளப்படுத்திய 10 புதைகுழிகளில் சடலங்கள் இருக்கவில்லை.
இதில் அடையாளம் காணப்பட்ட இரண்டு உடல்கள் 1996 இல் காணாமல் போன ஆண்கள் என அடையாளம் காணப்பட்டது.
இதையடுத்து ஏழு ராணுவ வீரர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
செம்மணி, அரியாலை, கொழும்புத்துறை ஆகிய இராணுவ முகாம்களில் கொலை செய்யப்பட்டவர்களே செம்மணியில் புதைக்கப்பட்டதாகக் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட 16 பேரினது சடலங்களும் அடித்துக் கொலை செய்யப்பட்டவை என மரண விசாரணை தீர்ப்பு வழங்கி, யாழ். நிரந்தர நீதிபதியிடம் வழக்கினை பாரப்படுத்திவிட்டு செம்மணி புதைகுழியின் விசேட நீதிபதி திரு மா.இளஞ்செழின் தனது பணியினை நிறைவு செய்தார்.
ஆறு மாதங்களின் பின்னர் செம்மணி புதைகுழி வழக்கின் பிரதிவாதிகள் தமக்குச் சட்டத்தரணிகள் இல்லை எனத் தெரிவித்து, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததையடுத்து, வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்திலிருந்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், ஒரு சில மாதங்களின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் ஏழு பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதன் பின்னர் நல்லாட்சி (?) அரசாங்க காலத்தில் நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன
இந்த வழக்கில் 1996 ஆம் ஆண்டு நாவற்குழி இராணுவ முகாமிற்கு பொறுப்பாகவிருந்த மேஜர் ஜெனெரல் துமிந்த கெப்பட்டி வெலான சார்பில் சட்ட மா அதிபர் ஆஜராகியிருந்தது
இது மாத்திரமின்றி நீதிமன்ற வாளகத்தில் வைத்தே மனுதாரர்கள், சட்டத்தரணிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர்
ஆள்கொணர்வு மனுதரர்களின் வீடுகளுக்கு சென்று புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்தனர்
இந்நிலையில் கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித என்புச் சிதிலங்கள் மீட்கப்பட்டன.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நடைபெறும் அகழ்வுப் பணியில் தற்பொழுது வரை 17 எலும்புக்கூடுகள் பகுதியளவிலும் 5 மனித எலும்பு கூடுகள் முழுமையாகவும் அடையாளம் காணப்பட்டும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இது செம்மணியிலுள்ள சட்டவிரோதமான இரகசியமான புதைகுழிகளில் ஒன்றாக இருக்கலாம் என இருக்கலாம் என கருதப்படுகின்றது
இதற்கிடையில் புதைகுழி உள்ள பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனவும் அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கும், சட்ட மருத்துவ அதிகாரி விடயங்களை செயற்படுத்துவதற்கும் போதுமானளவு நிதி இல்லை என்றும் சொல்லப்படுகின்றது
செம்மணி மட்டும் அல்ல – துரையப்பா விளையாட்டு அரங்கு , மிருசுவில், மன்னார், கொக்கு தொடுவாய், கிளிநொச்சி... என வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளில் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றன
இலங்கை தீவின் எந்த ஆட்சியாளர்களுக்கும் நீதி செய்ய வேண்டும் என்கின்ற அரசியல் விருப்பு “Political will” இல்லாதால்,எதற்கும் நீதி வழங்கப்படவில்லை
சமூகத்தின் மனித தன்மையையே கேள்விக்குள்ளாக்கும் இவ்வாறான இனப்படுகொ*லைகளுக்கு நீதி வழங்காமல் குற்றவாளிகளை பாதுகாத்து கொண்டு எந்த தளத்திலும் முன்னேற முடியாது,
இனமொன்றின் குரல் .