07/04/2025
#இறைநேசர்_குஞ்சு_மூஸா_ஒளலியாவும்_பொத்துவில்_இராயர்_குடிப்பரம்பரையினரும்
பொத்துவில் பெரிய பள்ளி வளாகத்தினுள் சமாதி கொண்டிருக்கின்ற மாட்சிமை பொருந்திய மகான் குஞ்சு மூஸா ஒளலியா நாயகம் என்பவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அவர்களுடைய வரலாற்றுப் பின்னணி என்ன? என்பவை தொடர்பாக ஏற்கனவே பல விரிவான பதிவுகள் நம்மால் இடப்பட்டிருக்கின்றன. இப்பதிவில் குஞ்சு மூஸா ஒளலியா அன்னவர்களுக்கும் பொத்துவில் இராயர் குடியினருக்குமிடையிலான ஆத்மார்த்தமான தொடர்புகள் மற்றும் அதனால் இராயர் குடிப்பரம்பரையினர் பெற்றுக் கொண்ட அதீத அருளாசிகள் தொடர்பாக ஆராயப்படுகிறது.
மகான் குஞ்சு மூஸா ஒளலியா நாயகமவர்கள் ஆரம்பகாலத்தில் பொத்துவிலூருக்கு வருகைதந்து அப்போது காடுமண்டிப்போயிருந்த இப்போதைய பெரிய பள்ளிவாயல் காணியில் ஒரு மரத்தடியில் அமர்ந்து இறை தியானத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.
ஊர் மக்கள் பலபேர் அவ்வழியில் சென்றாலும் குஞ்சு மூஸா ஒளலியாவின் தத்துவத்தை யாரும் அப்போது உணர்ந்து கொள்ளவில்லை. ஆனால் காலப்போக்கில் இம்மகானின் இறைதியானமும் சாந்தியும் ஜீவகாரூண்யமும் அப்போதிருந்த புத்தியுள்ள சிலருக்கு குஞ்சு மூஸா ஓர் தத்துவமுள்ள இறைநேசர் என்பதனை அடையாளப்படுத்திக் காட்டியது!
குஞ்சு மூஸா ஒளலியாவின் தத்துவத்தை அறிந்து கொண்டவர்களில் முதன்மையானவர்கள் குடிகளில் உயர்ந்தவர்களான இராயர்குடிப் பரம்பரையினர்களே! ராயரும் அவர்குடும்பம் சகிதமுமாக குஞ்சு மூஸா ஒளலியாவை நன்கு பராமரித்து அவர்களுக்குரிய பணிவிடைகளை பலகாலமாகத் தவறாது செய்து வந்தனர்.
குஞ்சு மூஸா ஒளலியா நாயகமவர்கள் தமது அந்திமகாலத்தில் தாம் வைத்திருந்த கைக்குட்டை வடிவிலான அருள் பொருந்திய துணித்துண்டொன்றை ராயரிடம் கொடுத்து இதுவரை நீங்கள் செய்துவந்த உபகாரத்திற்கு கைம்மாறாக அதனை வைத்திருக்குமாறு கூறி இருக்கின்றார்கள்.
குஞ்சு மூஸா நாயகம் கொடுத்த அந்த அருள் மிக்க துணித்துண்டைப்
பெற்றுக்கொண்டதிலிருந்து இராயரின் வழக்கை மாறியது!!
ஆம் கைகூடாதவைகள் யாவும் ராயருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் கைகூடி வந்தன! அருளும் பொருளும் வீடுதேடி வந்தன!! அந்த மகத்துவமுடைய துணித்துண்டை இராயர் அவரது கடைசிக்காலத்தில் தன் மகன் உடையாரிடம் கொடுத்து அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தினார்!
உடையாரின் கைகளுக்கு குஞ்சுமூஸா ஒளலியாவின் அருள் பொருந்திய துணித்துண்டு கிடைக்கப்பெறும்போது இலங்கையில் ஆங்கிலேயர்களின் காலணித்துவ ஆட்சி ஆரம்பமாகி இருந்தது. அந்தக் கைக்குட்டை வடிவத் துணியின் மாட்சிமையால் உடையார் திடீரென பிரித்தானியர்களின் பொத்துவில் பிராந்தியத்திற்கான ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்!!அதிகாரம் அவரைத் தேடி வந்தது! ஈற்றில் உடையார் பெரும் நிலப்பிரபுவாகவும், செல்வந்தராகவும் உருவெடுத்தார்!!
உடையாருக்குப் பின்னர் அவருடைய மகன் வை.எம். முஸ்தபாவிற்கு(எஸ்.எஸ்.பி. மஜீட் அவர்களின் மாமனார்) பரக்கத்தும் ரஹ்மத்தும் பொருந்திய குஞ்சுமூஸா ஒளலியா நாயகத்தின் துணித்துண்டு கிடைத்தது. அதனால் வை. எம். முஸ்தபா அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கியது! பொத்துவிலூரின் மிகுந்த செல்வாக்குடையவராக இவர் மாறினார். பல அரச உயர்பதவிகளில் இருந்து பொத்துவிலூரை அலங்கரித்தார்! மேலும் அனேக காணிகளை மீட்டு குடியேற்றங்களை உருவாக்கினார். நீதி மன்ற வழக்குகளில் பொரும்பாலான தீர்ப்புக்கள் இவருக்குச் சாதகமாகவே அமைந்தாகக் கூறப்படுகிறது!
வை.எம். முஸ்தபாவின் நிர்வாகத்தில் பொத்துவில் பெரிய பள்ளியின் கருவறையாய் அமைந்திருந்த குஞ்சு மூஸா ஒளலியா ஸியாரமானது எப்போதுமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பொத்துவிலூருக்கே மாபெரும் அருளாக வந்த பெருந்தகை, மகான் குஞ்சு மூஸா ஒளலியா நாயகத்தின் நினைவாக ஆண்டுதோறும் கந்தூரி அன்னதான நிகழ்வுகளை வை. எம். முஸ்தபா தலைமையிலான நிர்வாகக்குழுவினர் வெகுவிமர்சையாக நடாத்தினர். ஊரும் அருள் மிகுந்திருந்தது.
ராயர் பரம்பரையில் தலைமுறை தலைமுறையாகப் பேணப்பட்டுவந்த பொக்கிஷமும் அருள் பொருந்தியதுமான குஞ்சுமூஸா ஒளலியா நாயகத்தின் கைக்குட்டை வடிவ புனித துணித்துண்டு வை.எம். முஸ்தபாவிற்குப் பின்னர் யாருடைய கைகளுக்குச் சென்றது என்பது தொடர்பில் அனுமானிக்க முடியவில்லை. இது தொடர்பாகப் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. ஆனாலும் இறைநேசச் செல்வர் ஒருவரின் திருப்பொருத்தத்தைப் பெற்றமையினால் இராயர் பரம்பரைவழியில் இன்றுவரை உள்ளவர்களும் கூட அருளும் பொருளும் பெற்றவர்களாகவே மிளிர்கின்றனர்! இவர்களில் சிலர் பெரும் பெரும் பதவிகளை வகிப்பவர்களாகவும் இன்னும் பலர் பெரும் செல்வந்தர்களாகவும் உள்ளனர்.
-ஏ.எஸ்.எம். முஜாஹித்