05/10/2026
முபாரக் ஹாஜியார் பதவியை அலங்கரிக்கவில்லை; பொறுப்பை அழகுபடுத்தினார்!
-இர்ஷாத் இமாமுதீன்-
ஒரு பதவி ஒருவரை உயர்த்துவதில்லை. அந்தப் பதவிக்கு அவர் வழங்கும் அர்த்தம்தான் அவரை உயர்த்துகிறது.
சமூக ஊடகங்களில் பல உரைகளை நாம் கேட்கிறோம். சில உரைகள் கேட்டு முடிந்தவுடன் மறந்து போய்விடுகின்றன. சில உரைகள் மட்டும் நம்மைச் சற்று நின்று சிந்திக்க வைக்கின்றன.
அண்மையில் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலின் நிர்வாகப் பொறுப்பை புதிய நிர்வாகத்திடம் கையளிப்பது தொடர்பில் அப்பள்ளிவாசலின் முன்னாள் தலைவர் முபாரக் ஹாஜியார் ஆற்றிய உரையை அவதானிக்க நேர்ந்தது.
அந்த உரையில் பதவியைப் பற்றிய பெருமையைவிட, பொறுப்பைப் பற்றிய புரிதலும், தனக்குப் பின்னர் வருபவர்களுக்கு இடமளிக்கும் மனப்பான்மையும் வெளிப்பட்டது. குறிப்பாக, தான் வகித்த பொறுப்பை அடுத்த நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் விதம் கவனத்தை ஈர்த்தது.
அந்த உரையை கேட்ட பிறகு, முபாரக் ஹாஜியாரின் நிர்வாகப் பணிகள் குறித்து மேலும் அறிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.
இது தொடர்பில் ஒரு கவனக்குவிப்பை செய்து அவதானத்தை செலுத்தியபோது வெளிப்பட்ட கருத்துகளையும், அவதானிக்க முடிந்த சில விடயங்களையும் இணைத்துப் பார்க்கும்போது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது:
பதவி என்பது அவருக்கு ஒரு கௌரவம் மட்டுமல்ல; ஒரு பொறுப்பாக இருந்திருக்கிறது.
பள்ளிவாசல் ஒரு சமூகத்தின் இதயம்
பள்ளிவாசலை வெறுமனே தொழுகைக்கான ஒரு இடமாகப் பார்ப்பது அதன் சமூகப் பரிமாணத்தைச் சுருக்கிவிடும்.
ஒரு பள்ளிவாசல் என்பது வழிபாட்டுத் தளம் மட்டுமல்ல அது ஒரு ஊரின் ஆன்மீக மையமாகவும் சமூக உறவுகளின் சந்திப்பிடமாகவும் மக்களின் மகிழ்ச்சியிலும் துயரத்திலும் துணைநிற்கும் சமூக மையமாகவும் இருக்கிறது.
ஒரு குடும்பம் தனது தேவைகளைப் பகிர்ந்துகொள்ளும் இடமாகவும் இருக்கிறது.
ஒரு சமூகத்தின் நலன் குறித்து ஆலோசிக்கப்படும் இடமாகவும் இருக்கிறது.
மக்கள் ஒன்றிணைந்து நல்ல காரியங்களை முன்னெடுக்கும் தளமாகவும் இருக்கிறது.
திருமணம், மரணம், கல்வி, சமூக நலன், ஏழைகளுக்கான உதவி, இளைஞர்களின் வழிகாட்டல் என ஒரு ஊரின் வாழ்வோடு பள்ளிவாசல் பல வழிகளில் பின்னிப் பிணைந்திருக்கிறது.
அதனால் பள்ளிவாசலின் நிர்வாகப் பொறுப்பு என்பது கட்டிடத்தைப் பராமரிப்பதோடு முடிந்துவிடும் ஒரு பணியல்ல. ஒரு சமூகத்தின் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் பொறுப்புடன் கையாளும் பணியாகவும் அது அமைகிறது.
இந்தப் பின்னணியில்தான் ஒரு பள்ளிவாசல் தலைவரின் பணியை மதிப்பிட வேண்டியுள்ளது.
ஒருவருக்கு ஒரு பதவி கிடைப்பது ஒரு விடயம். அந்தப் பதவியை அவர் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதுதான் அவரது தலைமைத்துவத்தின் உண்மையான அளவுகோல்.
சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலின் நிர்வாகப் பொறுப்பில் பணியாற்றிய வர்த்தகப் பெருந்தகை முபாரக் ஹாஜியாரின் செயற்பாடுகளையும் இந்தக் கண்ணோட்டத்திலேயே பார்க்க வேண்டியுள்ளது.
தனது வர்த்தகப் பணிகளின் பரபரப்புக்கு மத்தியில் பள்ளிவாசல் நிர்வாகப் பணிகளுக்கும் நேரத்தை ஒதுக்கியுள்ளார். நிர்வாகத்தின் முக்கியமான விடயங்களுடன் அன்றாடத் தேவைகளிலும் கவனம் செலுத்தியதாக அவரைப் பற்றிப் அறிய முடிகிறது.
உதாரணமாக, தொழுகைக்கு வருபவர்களின் பாதணிகள் ஒழுங்கின்றி சிதறிக் கிடக்காமல் அவற்றை முறையாக வைக்கும் ஏற்பாடுகளுக்கும் கவனம் செலுத்தியதாகக் அறியக்கிடைக்கிறது.
பார்ப்பதற்கு இது ஒரு சிறிய விடயமாகத் தோன்றலாம். ஆனால், நிர்வாகத்தின் தன்மை பல நேரங்களில் இத்தகைய சிறிய விடயங்களில்தான் வெளிப்படுகிறது.
ஒரு இடத்தின் ஒழுங்கு, அதன் நிர்வாகத்தின் பிரதிபலிப்பாகும். பெரிய திட்டங்களோடு அன்றாடத் தேவைகளையும் கவனிப்பது ஒரு பொறுப்புணர்வின் வெளிப்பாடாகும்.
முபாரக் ஹாஜியாரின் பதவியைக் கையளிப்பது தொடர்பான உரையில் என்னை அதிகம் சிந்திக்க வைத்தது, பதவியைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்ற மனப்பான்மையைவிட, பொறுப்பு சரியான முறையில் தொடர வேண்டும் என்ற எண்ணமே முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த விடயம்.
ஒருவர் பதவியில் இருக்கும் போது தனது பணிகளைப் பற்றி பேசுவது இயல்பானது.
ஆனால், பதவியை விட்டு விலகும் தருணத்தில் அடுத்த நிர்வாகத்தைப் பற்றி சிந்திப்பதும், பொறுப்பை அவர்களிடம் ஒப்படைப்பதும் வேறுபட்ட ஒரு மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.
இவரின் பணியைப் பார்த்து, “எங்கள் பள்ளிவாசலிலும் இப்படியான நிர்வாகம் இருக்க வேண்டும். இவரைப் போன்ற ஒருவர் எமது பள்ளிவாசலுக்கும் தலைவராக வரவேண்டுமென்ற என்ற எண்ணம் அனைவரின் உள்ளங்களிலும் உருவாகிறது.
ஒரு தலைவரின் பணியை பெரிய நிகழ்வுகளைக் கொண்டு மட்டும் மதிப்பிட முடியாது.
மக்களை எவ்வாறு அணுகுகிறார்?
சிறிய தேவைகளுக்கு எவ்வாறு கவனம் செலுத்துகிறார்?
நிர்வாகத்தில் எவ்வளவு ஒழுங்கைக் கொண்டுவருகிறார்?
மற்றவர்களின் கருத்துகளுக்கு எவ்வளவு இடமளிக்கிறார்?
பதவியை விட்டு விலகும்போது எவ்வாறு பொறுப்பை ஒப்படைக்கிறார்?
இத்தகைய விடயங்களில்தான் ஒரு தலைமைத்துவத்தின் உண்மையான முகம் தெரிகிறது.
ஒரு தலைவர் பதவியை விட்டு விலகும்போது, அவர் வெறுமனே ஒரு பொறுப்பை மட்டும் ஒப்படைப்பதில்லை.
அவர் கடைப்பிடித்த நிர்வாக நடைமுறைகள், பெற்ற அனுபவங்கள், உருவாக்கிய நல்ல பழக்கங்கள், மக்களுடனான உறவு ஆகியவற்றையும் ஒரு வகையில் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்கிறார்.
அந்த வகையில், முபாரக் ஹாஜியாரின் பதவி ஒப்படைப்பு ஒரு நிர்வாக மாற்றமாக மட்டும் பார்க்கப்பட வேண்டியதில்லை.
“பதவி என்பது நமக்குச் சொந்தமானது அல்ல; அது ஒரு காலத்திற்காக நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு” என்ற எண்ணத்தை அது நினைவூட்டுகிறது.
இதுவே அவரது உரையை அவதானித்தபோது எனக்குள் உருவான முக்கியமான சிந்தனையாகும்.
ஒரு தலைவரின் காலடித் தடங்கள் அவர் பணியாற்றிய கட்டிடத்தில் மட்டும் இருக்க வேண்டியதில்லை. அவர் பணியாற்றிய விதம் பிறர் மனங்களில் ஒரு நல்ல எண்ணத்தை விதைத்திருந்தால், அந்த எண்ணமே அவரது நீடித்த அடையாளமாகிறது.
பதவி என்பது அலங்காரம் அல்ல; அது ஒரு பொறுப்பு. பொறுப்பு என்பது சுமை அல்ல; அது ஒரு அமானிதம்.
அந்த அமானிதத்தை நன்றாக நிறைவேற்றி, உரிய நேரத்தில் அடுத்தவரிடம் ஒப்படைப்பதே தலைமைத்துவத்தின் அழகு.
முபாரக் ஹாஜியார் ஆற்றிய நற்பணிகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக.
அவரது வாழ்வில் பரக்கத்தையும், உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் வழங்குவானாக. அவர் ஆற்றிய சமூகப் பணிகள் தொடர்ந்து பல நல்ல உள்ளங்களுக்கு ஊக்கமாக அமையட்டும்.
சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலுக்காக அவர் செய்த பங்களிப்புகள் காலம் கடந்தும் மக்களின் நல்ல நினைவுகளில் நிலைத்திருக்கட்டும்.
முபாரக் ஹாஜியாருக்கு மனமார்ந்த பாராட்டுக்களும், பிரார்த்தனை கலந்த நல்வாழ்த்துக்களும்!