29/08/2026
அன்று சொன்ன வார்த்தைகள் எல்லாம்
இன்று காற்றில் எங்கோ போனது!!!
கட்-அவுட்டுகளும் மாறிப்போன அரசியலும்!
அரசியலில் அதிகாரத்தில் இருப்பவர்களை விமர்சிப்பது எளிது. ஆனால், ஒருநாள் எதிர்க்கட்சியில் இருந்து முன்வைத்த அதே விமர்சனங்களை அதிகாரத்திற்கு வந்த பிறகும் தமக்குப் பொருந்தும் வகையில் கடைப்பிடிப்பதே உண்மையான அரசியல் நேர்மை.
ஒரு காலத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த அநுரகுமார திசாநாயக்க, தேர்தல்களில் அரசியல் கட்சிகள் செலவிடும் பெரும் தொகைகள் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.
குறிப்பாக, அரசியல் தலைவர்களின் அதிலும் ராஜபக்ஷாக்களின் பிரமாண்டமான கட்-அவுட்டுகளை சுட்டிக்காட்டிய அவர் இவ்வாறான கட்-அவுட்டுகளுக்காக பல மில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளதாகவும் கேள்வி எழுப்பினார். அவர் அப்போது அதுபற்றி பேசும்போது,
“தேர்தல்களில் ராஜபக்ஷாக்கள் பாரிய மக்கள் பணத்தை வீண்டிக்கிறார்கள், பாரிய கட்அவுட்களை வீதிகளில் வைக்கிறார்கள், ஒரு கட்-அவுட்டுக்கே குறைந்தபட்சம் 20 லட்சம் ரூபாய் செலவாகிறது” என்றும்,
“ராஜபக்சாக்கள் இவ்வாறான கட்-அவுட்டுகளுக்காக பல மில்லியன் ரூபாய்களை செலவிடுகிறார்கள், இது இந்தப் பொதுமக்களின் பணம்தானே?” என்றும் கேள்வி எழுப்பினார்.
அந்தக் கேள்வி அன்றைக்கு ராஜபக்சாக்களை நோக்கியதாக இருந்தது. ஆனால், அரசியலில் கேள்விகள் ஒருதலைப்பட்சமானவை அல்ல. இன்று அதே கேள்வி மீண்டும் எழுப்பப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இன்று வீதிகளில் காணப்படும் பிரமாண்டமான கட்-அவுட்டுகள் யாருடைய அரசியலை பிரதிபலிக்கின்றன?
அவற்றுக்குப் பின்னால் செலவிடப்படும் பணம் எங்கிருந்து வருகிறது?
இவற்றை அமைப்பவர்கள் யார்?
அவற்றுக்கு அனுமதி வழங்கப்படுகிறதா? பொதுமக்களிடம் சிக்கனத்தையும் பொறுப்பையும் பேசும் அரசியல் இயக்கத்தின் ஆதரவாளர்கள் ஏன் மீண்டும் அதே பழைய அரசியல் கலாசாரத்தை பின்பற்றுகிறார்கள்?
அரசியல் மாறிவிட்டதா, அல்லது அரசியல்வாதிகளின் இடம் மட்டுமே மாறிவிட்டதா?
ராஜபக்சாக்கள் ஆட்சியில் இருந்தபோது, பிரமாண்டமான பதாகைகள், கட்-அவுட்டுகள், அரசியல் விளம்பரங்கள் ஆகியவை அதிகார ஆடம்பரத்தின் அடையாளங்களாக விமர்சிக்கப்பட்டன. மக்களின் பணத்தை வீணடிக்கும் அரசியல் கலாசாரத்திற்கு எதிராக மாற்றம் தேவை என்று கூறப்பட்டது.
அப்படியிருக்கையில், இன்று அதே காட்சிகள் வேறு அரசியல் நிறத்தில் தோன்றத் தொடங்கினால், பொதுமக்கள் கேள்வி கேட்பதில் என்ன தவறு?
ஒரு அரசியல் தலைவரை ஆதரிப்பது மக்களின் உரிமை. அவருடைய படத்தை வைத்து கட்-அவுட் வைப்பதும் ஆதரவாளர்களின் விருப்பமாக இருக்கலாம். ஆனால், ஒரு அரசியல் கலாசாரத்தை மாற்றுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தங்களது ஆதரவாளர்களிடையே பழைய அரசியல் கலாசாரமே மீண்டும் உருவாக அனுமதிக்கிறார்களா? என்பதுதான் இங்கு முக்கியமான கேள்வி.
மாற்றம் என்பது ஆட்சியாளரின் முகம் மாறுவது மட்டுமல்ல. மாற்றம் என்பது அரசியலின் நடைமுறையும் மாறுவதுதான்.
நேற்று ராஜபக்சாக்கள் செய்தபோது அது வீண் செலவு என்றால், இன்று அநுரகுமாரவின் ஆதரவாளர்கள் செய்தால் மட்டும் அது அரசியல் அன்பின் வெளிப்பாடாக மாறிவிட முடியாது.
நேற்று “மக்களின் பணம்” என்று கேள்வி எழுப்பிய அரசியல், இன்று அதே காட்சியைப் பார்க்கும்போது அமைதியாக இருந்தால், மக்கள் இயல்பாகவே கேட்பார்கள் “அன்று கேட்ட கேள்வி இன்று உங்களுக்கும் பொருந்தாதா?” என்று.
அரசியலில் உண்மையான சோதனை எதிர்க்கட்சியில் இருக்கும்போது அல்ல; அதிகாரத்தில் இருக்கும்போதுதான்.
அன்று சொன்ன வார்த்தைகளை இன்று நினைவில் வைத்திருக்கிறோமா? அன்று விமர்சித்த அரசியல் கலாசாரத்தை இன்று நாமே உருவாக்குகிறோமா?
இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது எதிர்க்கட்சிகள் அல்ல. அதிகாரத்தில் இருப்பவர்களும், அவர்களை ஆதரிப்பவர்களுமே.
ஏனெனில், மாற்றம் என்பது ஒரு கட்சியின் பெயர் மாறுவது அல்ல; அரசியலின் முகமும் முறையும் மாறுவதுதான்.
அதிகாரத்தில் இருப்பவர் யார் என்பது முக்கியமல்ல. அதே தவறை யார் செய்தாலும், அது தவறுதான்.