15/08/2025
தேசிய இளைஞர் சம்மேளன மாநாட்டில் நுவரெலியா தமிழ் பெண்ணுக்கு தேசிய ரீதியில் அங்கீகாரம்.!
இளைஞர் சமூகத்தை நாட்டின் வளர்ச்சிப் பாதையில் ஈடுபடுத்தும் நோக்குடன், கோலாகலமாக நடைபெற்ற 2025 தேசிய இளைஞர் சம்மேளன மாநாட்டில், நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் யுவதியான தனராஜ் சுதர்ஷிக்கா தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் விருது வழங்கல் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்ற இந்த மாநாடு, இளைஞர் சமுதாயத்தின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது. அரசியல் சார்பற்ற, சுயாதீனமான இளைஞர் சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற இந்த மாநாட்டில், திறமை வாய்ந்த இளைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
நுவரெலியா மாவட்டத்தின் போகாவத்தை தோட்டத்தை சேர்ந்த தமிழ் பெண், தேசிய மட்டத்தில் இந்த மதிப்புமிக்க பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது, இளைஞர் சேவை மன்றம் நாட்டின் பல்லின சமூகத்தினரிடையே சமத்துவத்தையும், திறமைகளையும் அங்கீகரிக்கிறது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது நுவரெலியா மாவட்டத்தின் இளைஞர்களுக்கு மட்டுமன்றி, முழு இலங்கைக்கும் பெருமை சேர்க்கும் ஒரு தருணமாகும்.
விருது வழங்கல் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சுதர்ஷிக்கா, இளைஞர்களின் படைப்பாற்றல், அர்ப்பணிப்பு மற்றும் சமூகப் பங்களிப்புகளை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நோக்கங்களை மேலும் வலுப்படுத்துவதோடு, புதிய தலைமுறையினரை ஊக்குவிக்கவும் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என தெரிவிக்கப்படுகிறது.