
07/08/2025
மன்னார் மாவட்டமும் காற்றாலை மின் உற்பத்தியும் கனிய மணல் அகழ்வும்!!!
இன்று முகநூல் ஒன்றில் ஒருவரின் பதிவு பார்த்தேன் காற்றாலை மின் உற்பத்தியால் மன்னாரிற்கு என்ன தீமை? ஏன் எதிர்ப்பு?என்று
அதற்கான சிறு தெளிவுபடுத்தல்... என்னால் முடிஞ்சது...👇👇✍️🙏🙏
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள போதிலும், மன்னார் தீவுப் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மற்றும் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகின்றது.
இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான 30 காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில காற்றாலை கோபுரங்கள் தற்போது ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், இந்தியாவின் அதானி நிறுவனம் மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த சூழ்நிலையில், அந்த திட்டத்திலிருந்து தாம் வெளியேறுவதாக அண்மையில் அறிவித்திருந்தது.
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி முன்னெடுக்கப்படுவதற்கு மன்னார் மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இலங்கையின் புவியியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக மன்னார் தீவு பகுதி அமையப் பெற்றுள்ளது.
மன்னார் நிலப் பரப்பில் அதிகளவிலான கனிம வளங்கள் காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இல்மனைட் கனிம வளம் மன்னார் நிலப் பரப்பில் அதிகளவில் காணப்படுகின்றன. இல்மனைட்டை தவிர்த்து. மேலும் பல்வேறு வகையான கனிம வளங்கள் காணப்படுவதாக ஆய்வுகளின் ஊடாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நிலப் பரப்பில் சுமார் 6000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முன்னரான காலத்திலிருந்து இந்த கனிம வளங்கள் உருவாகியுள்ளதாக மன்னார் கனிம வளங்கள் தொடர்பில் ஆய்வுகளை நடத்திய ஆவுஸ்திரேலிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கைக்கு வருடாந்தம் லட்சக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பறவைகள் வருகைத் தருகின்ற சூழ்நிலையில், அந்த பறவைகளின் பிரதான நுழைவாயிலாக மன்னார் பகுதி காணப்படுகின்றது.
இவ்வாறு இலங்கைக்கு வருகைத் தருகின்ற வெளிநாட்டு சுற்றுலாப் பறவைகள், இலங்கையில் முட்டை இட்டு குஞ்சு பொறிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து, மீண்டும் குஞ்சுகளை இலங்கையிலிருந்து தமது நாட்டிற்கு அழைத்து செல்வதாக சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கடலால் சூழப்பட்ட இயற்கை வளங்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை மன்னார் மாவட்டம் கொண்டுள்ளது.
மன்னாரில் வலுசக்தி அமைச்சின் கீழ் 30 காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் 2020ம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் 200 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் நிதித் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் ஊடாக ஆண்டொன்றிற்கு 400 மெகா வோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் மேலும் சில காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
காற்றாலை மின் உற்பத்தியின் விளைவுகள்
1. மன்னார் காற்றாலை மின்சார உற்பத்தி கோபுரங்களினால் தமது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பகுதி மக்கள் குறிப்பிடுகின்றார்கள்.
2.ஒரு காற்றாலை அமைப்பதற்கு 3000 பக்கெட் மண்ணை அகழ்கின்றனர். இவ்வாறு தோண்டி எடுக்கின்ற மண்ணை வெளி இடங்களுக்கு கொண்டு போகின்றார்கள்.
3. குடியிருப்பு பாதிக்கப்படுகின்றது. தாழ்வுபாடு கிராமத்தில் 30 காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிதாக மூன்று காற்றாடிகள்.
4. காற்றாடி அமைப்பதற்கு வயர் கொண்டு போவதாக சொல்கின்றார்கள். இந்த வயர் புதைப்பதற்கு நிலத்தில் 25 அடி தோண்டி அந்த வயரை புதைத்து கொங்கீரிட், மண் போன்றவற்றை போட்டு செய்கின்றார்கள். கரையோரத்தில் கொங்கீரிட் போடுவதனால் மழை நீர் வெளியில் போகாது.
5.காற்றாலை அமைக்கபட்டதன் பின்னர் கடல் மட்டத்தை விடவும், நில மட்டம் தாழ்வாக இருக்கின்றமை எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை உண்டு பண்ணும்.
6. கடத்தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டவர்களுக்கு,
காற்றாலை அமைக்கப்பட்டதன் பிறகு, முன்னர் இருந்த மீன்களின் தொகையும், இந்த காற்றாலை அமைக்கப்பட்டதன் பின்னர் இருக்கின்ற மீன்களின் தொகையும் மிகக் குறைவு.
07.காடுகள் அழிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பனைகள் போன்ற இயற்கை வளங்கள் அழிக்கப்படுன்றது.
08.காற்றாலைகள் அமைக்கப்பட்டதன் பிறகு இந்த ஊருக்குள் தண்ணீர் தேங்கி நிற்கின்ற காலம் நீண்டு போய், மழை காலத்திற்கு பிறகு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு தண்ணீர் கிராமபுறங்களில் மூன்றில் இரண்டு பகுதிகளில் தேங்கியிருக்கின்றது. இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுகின்றது.
''மன்னார் மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அச்சுறுத்தலாக இந்த இல்மனைட் அகழ்வு காணப்படுகின்றது. மன்னார் மாவட்டத்தின் அதிஷ்டம் அல்லது துரதிஷ்டம் என்பது மன்னார் மாவட்டத்தில் மிகக் குறைந்த செலவோடு மிகச் செறிவான இல்மனைட்டை பெறக்கூடிய நிலைமைகள் காணப்படுகின்றது.
இலங்கையின் மற்றைய பகுதிகளிலும், உதாரணமாக மாணிக்க கங்கை, கும்புக்கன் ஓயா, புல்மோட்டை பகுதிகளிலும் இந்த இல்மனைட் காணப்பட்டாலும் கூட, அந்த பிரதேசங்களில் இந்த இல்மனைட்டை எடுப்பதற்கான செலவுடன் ஒப்பிடும் போது மன்னார் மாவட்டத்தினுடைய இல்மனைட் அகழ்வு என்பது மிகவும் செலவு குறைந்தது."
"அத்தோடு, அவற்றில் சில கனிமங்கள் காணப்படுகின்றன. எபடைட், டேடைல், சில்கோன், இல்மனைட் போன்ற கனிமங்கள் காணப்படுகின்றன. ஒரு தொன் மணல் அகழப்பட்டால், அந்த மணலில் குறிப்பிட்ட அளவு மணல் மட்டுமே மீண்டும் பயன்படுத்த முடியாத மணலாக காணப்படும். பெரியளவானவை கனிம மணலாக காணப்படுகின்றன. மன்னார் மாவட்டம் கடல் பரப்பிலிருந்து குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது."
"இந்த கனிம மணல் அகழ்வின் ஊடாக மேலும் பரப்பளவு குறைக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்தில் மன்னார் கடலுக்குள் மூழ்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
இல்மனைட் அகழ்வு ஆரம்பிக்கப்பட்டு மூன்று நான்கு வருடங்களிலேயே மன்னார் மாவட்டம் கடல் நீருக்குள் மூழ்கின்ற அபாயம் காணப்படுகின்றது.'' என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் அகழப்படுகின்ற சிறியளவிலான மணல் அகழ்வு கூட, மன்னார் மாவட்டத்தின் நிலைமையை பெரிதும் பாதிக்கும் என புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..