12/12/2024
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் புதிய செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர உத்தியோகத்தரான திரு.கே. குணநாதன் அவர்கள்:
=========[எம்.ஐ.எம்.வலீத்]============
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் புதிய செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர உத்தியோகத்தரான திரு.கே. குணநாதன் நேற்று (11.12.2024) கடமையேற்றுக் கொண்டார்
1973 ஏப்ரல் 13ம் திகதி யாழ்ப்பாண தெல்லிப்பழையில் குமாரசிங்கம் -பூலோகேஸ்வரி தம்பதிகளின் புதல்வராக பிறந்த இவர் தனது பாடசாலைக் கல்வியை மந்துவில் ஸ்ரீபாரதி வித்தியாலயத்திலும் பின்னர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் கற்றார்.
பின்னர் 1995-1998 ஆம் ஆண்டுவரை வவுனியா கல்விக் கல்லூரியில் தனது ஆசிரியர் பயிற்சியை அதி சிறப்பு சித்தியுடன் முடித்து, 1999ம் ஆண்டு முதல் செப்டம்பர் 2003 வரை சுமார் 05 வருடங்கள் யாழ்ப்பாண கல்வி வலய கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றினார்.
2001ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தின் கலைத்துறையில் (வணிகம். புவியியல், அரசியல்) விஷேட பட்டப்படிப்பை சிறப்பு தேர்ச்சியுடன் முடித்து, செப்டம்பர் 2003ல் இலங்கை நிருவாக சேவைக்கு தெரிவாகி பயிற்சிகளை முடித்து 2004ம் ஆண்டு இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் மாகாணப் பொது நிருவாகத்தினுள் உள்ளீர்க்கப்பட்டார்.
நவம்பர் 2004ம் ஆண்டு முதல் ஏப்ரல் 2005ம் ஆண்டு வரை வடகிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்களத்தின், உள்ளுராட்சி உதவி ஆணையாளராக (தலைமைக் காரியாலயம்- பொறுப்பதிகாரி) கடமையாற்றினார்.
அதே ஆண்டு திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளராக நியமனம்பெற்று சுமார் 08 வருடங்கள் உள்ளுராட்சி துறைக்கு அபரிமிதமான பங்களிப்புக்களை வழங்கினார்.
மேலும் அதே காலப்பகுதிகளில் கிழக்குமாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் பதில் செயலாளராகவும், உலக வங்கியின் சமூக குடிநீர் வழங்கல் செயற்றிட்டத்தின் திருகோணமலை மாவட்ட மேற்பார்வை மதிப்பீட்டு அதிகாரியாகவும், பதில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராகவும் 2009ம் ஆண்டுவரை கடமை புரிந்தார்.
2010ம் ஆண்டு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் பொது நிருவாகத்தின் டிப்ளோமா முடித்து 2012ல் அதே பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாகத் துறையில் முதுமாணிப்பட்டம் பெற்றவர் என்பதுடன் மூன்று மொழிகளிலும் சிறப்பு தேர்ச்சியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2010 முதல் 2013 வரை உலகவங்கியின் அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்பட்ட புறநெகும/நெல்சிப் திட்டத்தில் மாவட்ட திட்டப்பணிப்பாளராகவும்,ஜெய்க்கா-ஜப்பான் நிதி அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கிராமிய குடிநீர் விநியோகத்திட்டத்தில் மாவட்ட திட்ட முகாமையாளராகவும் தனது சீரிய பங்களிப்புக்களையும் நல்கினார்.
2013 முதல் 2015 ஆண்டு வரை கிழக்குமாகாண சமூகசேவைகள் திணைக்களப் பணிப்பாளராகவும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் பதில் செயலாளராகவும் கடமையாற்றினார்.
கிழக்குமாகாண கிராமிய தொழிற்துறை திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக 2015ம் ஆண்டு நியமனம்பெற்று 2017 ம் ஆண்டு வரை அதன் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றினார்.
ஜனவரி 2017 முதல் 2018 வரை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளராகவும், ஆகஸ்ட் 2018 முதல் 2021 வரை திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளராகவும், ஜூலை 2022 முதல் 2024 டிசம்பர் வரை திருகோணமலை குச்சவெளிப் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றினார்.
மேலும் கனடா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பல்வேறுபட்ட சர்வதேச மாநாடுகளிலும் சிறப்பு பயிற்சிகளிலும் பங்கு பற்றியுள்ளதுடன் இலங்கையிலும், மேற்படி உலக நாடுகளிலும் பெற்றுக்கொண்ட தனது அனுபவத்தின் பயனாக இலங்கையின் உள்ளுராட்சி மன்றங்களின் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சிறப்புத் தேர்ச்சிமிக்க வளவாளராகவும் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனம், இலங்கை உள்ளுராட்சி நிறுவகம், மாகாண முகாமைத்துவ பயிற்சித்திணைக்களம், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சு, ஆசியா மன்றம், கொமன்வெல்த் உள்ளுராட்சி அமையம் உள்ளிட்ட பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் செயற்றிட்ட ஆலோசகராகவும், திட்ட வளவாளராகவும் தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 2006 இல் திருமண பந்தத்தில் இணைந்த இவருக்கு சதுர்ஷன்,கபிலேஷ் ஆகிய இரு புதல்வர்கள் உள்ளனர்.