02/07/2025
ஜனாஸா வீடுகளில் நடந்தேறும் புதிய அனாச்சாரங்கள்..!
ஒரு வீட்டில் ஜனாஸா ஏற்பட்டு விட்டால், ஜனாஸாவின் முக்கிய விடயங்களை கவனிப்பதை விடவும், சாப்பாடு விடயங்களை மேற்கொள்வதில் தான் கவனம் செலுத்துகின்றார்கள்.
எத்தனை ஸஹன் சாப்பாடு செய்வது
எத்தனை கறி செய்வது?
பருப்பும் கோழிக்கறியும் மட்டும் போதுமா? புளிக் கறியையும் சேர்த்துக் கொள்வோமா? இனிப்புக்கு வாழைப்பழம் வைப்பதா? புடின் செய்வதா?
யார் வீட்டில் சாப்பாடு வைப்பது? யாரை வைத்து சமைப்பது?
கவலைக்குரிய விடயம் என்னவெனில்:-
இத்தனைக்கும் ஜனாஸாக்குரிய அடிப்படை வேலைகளை பூர்த்தி செய்திருக்கவும் மாட்டார்கள். அது பற்றி யோசித்து இருக்கவே மாட்டார்கள்.
அடுத்த பிரச்சினை:-
ஜனாஸா வீட்டுக்கு வந்து செல்வோருக்கு, டீ ஊத்த வேண்டும். கோபி ஊத்த வேண்டும். அதற்கு தண்ணீர் சூடாக்கி சூடாக்கி இருக்க முடியாது. உடனே அதற்குத் தீர்வாக *nescafe machine* ஐ கொண்டு வருவார்கள்.
ஜனாஸாவை இன்னமும் வீட்டுக்கு கொண்டு வந்திருக்க மாட்டார்கள். வைத்தியசாலையில் தான் இருக்கும். ஆனால் *nescafe machine* வீட்டுக்கு வந்து விடும்.
பொதுவான ஏனைய விருந்துகளை மிஞ்சும் அளவுக்கு ஜனாஸா வீடுகளில் மேற்கொள்ளப்படும் விருந்துகள் அமையப் பெற்று வருவதை காணக் கூடியதாக உள்ளது.
ஊருக்கு ஊர் எப்போது ஜனாஸா சங்கங்கள் உருவாகியதோ; அப்போதே இது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறத் தொடங்கி விட்டது.
மேற்படி சங்கங்கள் மூலம் அதிகமான நலவுகள் நடைபெற்று வருகின்ற போதிலும், துரதிஷ்டவசமாக தடுக்கப்பட வேண்டிய, மாற்றம் காணப்பட வேண்டிய இதுபோன்ற விருந்தோம்பல் நிகழ்வுகள் மிக வீரியமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதை கண்கூடாக காண்கின்றோம்.
வீட்டில் தந்தையின் ஜனாஸா இருக்கும். தாயின் ஜனாஸா இருக்கும். பிள்ளை எங்கே என்று பார்த்தால் ஜனாஸாவிற்கு வந்தவர்களுக்கான விருந்தோம்பல் நிகழ்வுகளில் பங்கெடுத்து, வருவோர் போவோருக்கு விருந்தளித்துக் கொண்டிருப்பார்கள். இத்தனைக்கும் அது ஜனாஸா வீடு என்பதை மறந்த நிலையில்...
ஜனாஸா வீடு என்றாலே, அது உண்டு, குடித்து, ஜாலியாக இருக்கும் ஒரு வீடு என்ற நிலைமைக்கு மாறி உள்ளது. அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.
ஜனாஸா வீடுகளுக்கு வருபவர்களுக்கெல்லாம் உணவு வழங்க வேண்டும், தேநீர் வழங்க வேண்டும் என்பது கட்டாய கடமை போன்று பார்க்கப்படுவதும், கட்டாய கடமையாக நினைத்து செயல்படுத்தப்படுவதையும் நிறுத்த வேண்டும்.
ஜனாஸா வீடு என்பது தன்னோடு ஒட்டிப் பிறந்த தனது இரத்த உறவை, தனது தாயை, தனது தந்தையை, உயிராக நேசித்த தனது பிள்ளைகளை, மனைவியை இப்படி யாரோ ஒருவரை இழந்த சோகத்தில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பெரும் கவலையில் துயரத்தில் இருக்கும் ஒருவரிடம் சென்று, தேநீர் வசதிகளை, உணவு ஏற்பாடுகளை முறையாக குறையின்றி செய்து தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
இச்சந்தர்ப்பத்தில் தான் ஜனாஸா சங்கங்கள் முன்வந்து, பத்து, பதினைந்து, இருபத்தைந்து ஸகன் சாப்பாடை நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம். nescafe machine ஐ நாங்கள் தருகிறோம். மாதாந்தம் எங்களுக்கு சந்தா செலுத்தி வாருங்கள் என்று அவர்கள் முன் வருகின்றார்கள். தற்போது பல ஊர்களிலும் ஜனாஸா சாப்பாடு என்பது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. கட்டாயமானதாக மாறிவிட்டது என்பதை விட கட்டாயமான ஒன்றாக மாற்றி விட்டார்கள் என்றே கூற வேண்டும்.
இது பற்றி கண்ணியமிக்க உலமாக்கள் சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும். இது பற்றிய தெளிவுகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும். இப்படியே சென்றால் எதிர் காலத்தில் இதனை தடுப்பதற்காக இன்னொரு போராட்டம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.....
சோனக ருக்கு சோறு கண்ட இடம் சொர்க்கம். அது மைய வீடாக இருந்தாலும் சரி🤐 See less