06/08/2025
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு 2025
கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபை மற்றும் மூதூர் பிரதேச சபைகளுக்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு கடந்த 2025 ஆகஸ்ட் 05 ஆம் திகதி மூதூரில் அமைந்துள்ள Pearl Grand மண்டபத்தில் நடைப்பெற்றது
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் எம்.எச்.எம்.உசைர் இஸ்லாஹி அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்வில் கிண்ணியா நகர சபை கெளரவ தவிசாளர் திரு.எம்.எம்.மஹ்தி, மூதூ் பிரதேச சபை கெளரவ தவிசாளர் திரு.செல்வரத்னம் பிரகலாதன் மற்றும் கிண்ணியா பிரதேச சபை கெளரவ தவிசாளர் ஏ.ஆர்.எம்.அஸ்மி மற்றும் மூன்று உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களும், மூதூர், கிண்ணியா பிரதேச சிவில் சமூக தலைமைகளும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் விஷேட உரை நிகழ்த்திய உஸ்தாத் எம்.எச்.எம் உஸைர் இஸ்லாஹி அவர்கள்
ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் இறையாண்மை கொண்டவர்கள் ஆவர். அந்த இறையாண்மை தேர்தல்களின் போது வெளிப்படுகிறது. ஜனநாயகத்தின் பயன் அனைத்து மக்களையும் சென்றடைய, ஆட்சி அதிகாரத்தில் மக்கள் பங்கேற்பது அவசியமாகிறது. இந்த நோக்கத்திற்காகவே உள்ளூராட்சி சபைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி சபைகளின் உண்மையான பலம், ஆட்சி முறையை மக்களின் அடிமட்டத்திற்குக் கொண்டு செல்வதிலும், உள்ளூர் மக்களின் நேரடி அரசியல் பங்களிப்பை உறுதி செய்வதிலும், அவர்களின் அன்றாட பொது வசதிகள் தொடர்பான தேவைகளை நிறைவேற்றுவதிலும் தங்கியுள்ளது.ஆனால், இலங்கையில் உள்ளூராட்சி சபைகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் முழுமையாக அடையப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியே.
இதற்கு பல காரணங்கள் இருப்பினும், நேர்மையற்ற அரசியல் கலாச்சாரமும், மக்கள் இனம், பிரதேசம் மற்றும் மொழி அடிப்படையில் பிரிக்கப்படுவதும் முக்கிய காரணிகளாக உள்ளன. இந்த பிரிவினைவாத சக்திகளிடமிருந்து நாடு பாதுகாக்கப்பட வேண்டும்.
நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, அனைவரும் உடல், உள, ஆன்மீக நலத்துடன் மகிழ்ச்சியாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குவது அவசியம். இதனை ஆட்சியாளர்கள், சிவில் சமூகங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமே சாத்தியப்படுத்த முடியும்.
அயல்நாடுகளின் அறமற்ற, சுயநல வெளிநாட்டுக் கொள்கைகளாலும், அதனைப் பயன்படுத்திக்கொண்ட உள்நாட்டு அரசியல் தலைமைகளாலும், மக்களுக்கு மத்தியில் இன உணர்வுகள் கூர்மைப்படுத்தப்படுகின்றன. இதனால் நாடு பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில் இருந்து மக்கள் மீள வேண்டும்.
இந்த பின்னணியில், "ஜமாஅத்தே இஸ்லாமி" மற்றும் அதன் துணை அமைப்பான "ரம்யலங்கா" போன்ற சிவில் சமூக அமைப்புகள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்களைக் கௌரவிக்கவும், பாராட்டவும், சிவில் சமூகத்தின் பொறுப்புகளை நினைவூட்டவும் நாடு தழுவிய ரீதியில் கூட்டங்களை நடத்தி வருகின்றன.
ஜமாஅத்தே இஸ்லாமி என்பது இஸ்லாத்தை ஒரு முழுமையான வாழ்க்கை நெறியாக நிலைநிறுத்த முயலும் ஒரு அமைப்பாகும்.
இவ்விரு அமைப்புக்களும் சமூகங்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வையும் நல்லெண்ணத்தையும் வளர்க்கும் செயற்திட்டங்களை முன்னெடுத்து, நாட்டின் அபிவிருத்திக்கும் அமைதிக்கும் பங்களிப்புச் செய்து வருகின்றன என தெரிவித்தார்.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி திருகோணமலை பிராந்தியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூன்று உள்ளூராட்சி சபைகளுக்குமான நினைவுச்சின்னமும் கௌரவ தவிசாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.