21/09/2025
தோள்களில் சுமந்த விடியல்
# # # # # # # # # # # # # # # # # # # # #
# ஜே. பிரோஸ்கான் ( கவிஞர்- கிண்ணியா)
சிதைந்து போன நகரத்தின் சாம்பலில்
பூக்கள் முளைக்கவில்லை,
ஆனால்
அவனின் சிறிய தோள்களில்
ஏந்திய நம்பிக்கையை கண்டு
உலகம் முழுதும் கண்ணீர் முளைத்தது.
வானம் கரைந்து விழ,
படையெடுப்பின் சத்தம் பிளந்த காற்றில்,
சிறுவன் நடந்தான்
முடியாத அன்பை சுமந்து.
அவனது தோளில் தாலாட்டப்பட்டது
ஒரு சிறுமி;
சிறுமி அல்ல
பாலஸ்தீனின் இரத்தமயமான கனவு.
என் சகோதரி விழுந்துவிடக் கூடாது என்ற
உறுதியின் நெஞ்சுரம்,
ஆயிரம் பீரங்கிகளின் குரலைவிட
அதிகம் ஒலித்தது.
உலகம் பார்த்தது,
உலகம் துடித்தது;
ஆனால் உலகம் இன்னும் மௌனமாய்
அவரது காலடிச் சத்தத்தில் மட்டும்
சுதந்திரத்தின் விதைகள் முளைத்தன.
சின்ன பாதங்கள் நடப்பதில்லை,
சின்ன தேசம் முழுதும் நடக்கிறது;
ஒவ்வொரு அடியிலும் ஒலிக்கிறது:
“பாலஸ்தீன் வாழும்,
பாலஸ்தீன் எழும்.”
அவனது தோள்கள் சோர்ந்தாலும்
விடியலின் தோள்கள் சோர்ந்ததில்லை.
சிதறிய சுவர்களைத் தாண்டி,
சாம்பலின் கரையைக் கடந்தும்,
அவன் சுமந்தது சகோதரி மட்டும் அல்ல,
மக்களின் உயிர்க்குரல்.
பாலஸ்தீனே
உன் விடுதலை வரும்
சிறுவன் சுமந்த அன்பின் எடையில்,
சிறுமி உறங்கிய அமைதியின் அர்த்தத்தில்,
உன் கொடியின் பச்சை
மீண்டும் மலர்வது உறுதி.