14/08/2022
யார் இந்த ஹச்சி ஹாஜியார்?
மூன்று தசாப்தங்கள் முழு மூச்சான சேவை. அந்-நஹ்ஜா அரபுக்கல்லூரி அச்சி ஹாஜியாரின் கல்லூரியாய் ஆகிப்போனது. 06.06.1990 இருந்து இது நாள் வரை இயக்குனர் சபைத்தலைவராக ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருந்த அந்-நஹ்ஜாவின் இஸ்தாபகர்களில் ஒருவரான அல்ஹாஜ் எம்.எல்.ஹச்சி முஹம்மது இன்று 14.08.2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இவ்வுலகுக்கு விடை கொடுத்தார். வல்ல இறைவன் அவரையும் அவரது சேவைகளையும் பொருந்திக்கொள்வானாக.
பிறப்பும் குடும்பப்பின்னணியும்
1949ஆம் ஆண்டு வாழைச்சேனைக் கிராமத்தில் சாதாரண குடும்பமொன்றில் முஸ்தபா லெப்பை - ஆசியா உம்மா தம்பதிகளின் இரு ஆண் பிள்ளைகள், நான்கு பெண் பிள்ளைகள் என அறுவர் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையாகப் பிறக்கிறார். சாதாரண பெற்றோர், சாதாரண குடும்பம், பிள்ளைப்பருவம் ஆரவாரமின்றி கழிந்து முடிகிறது.
கல்வி
வாழைச்சேனை அரசினர் கலவன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியையும் தரம் 8 வரையான இடைநிலைக்கல்வியையும் பெற்றுள்ளார்.
அந்நாட்களில் தரம் 8 இப்போதைய உயர் தரத்திற்கு சமாந்தரமாக பார்க்கப்பட்டது என்பதும் கவனத்திற் கொள்ளத்தக்கதாகும். தனது ஆரம்ப குர்ஆன் கல்வியை ஆட்டுக்குட்டி ஆலிம் என அறியப்பட்ட லெப்பைத்தம்பி ஹஸ்ரத்திடம் கற்றுள்ளார்.
தொழில் வாழ்க்கை
தரம் எட்டோடு தனது பாடசாலைக்கல்வியை நிறுத்திக் கொண்ட எம்.எல்.அச்சி முஹம்மது ஹாஜியார் தொடர்ந்து சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
வாழைச்சேனை சந்தையில் சிறியளவில் ஒரு தேநீர்க்கடை ஒன்றினை சிறிது காலம் நடாத்தியுள்ளார். பின் அதனை கைவிட்டு வாழைச்சேனை கடதாசி ஆலையில் சுமார் மூன்று ஆண்டு காலம் பணி புரிந்துள்ளார்.
1978ம் ஆண்டின் சூறாவளி நிகழ்வே ஹாஜியாரின் தொழில் வாழ்க்கையின் திருப்பு முனை எனலாம். சூறாவளியுடன் கடதாசி ஆலை தொழிலினை கைவிட்டு மீண்டும் சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
வாழைச்சேனை கல்குடாவிற்குச்சென்று மீன்கள் மற்றும் கடலுணவுகளை மொத்தமாக கொள்வனவு செய்து வந்து வாழைச்சேனை சந்தையில் வியாபாரம் செய்துள்ளார்.
இதன் பிறகே ஹாஜியாரின் வாழ்வில் செல்வம் கொழிக்கத்தொடங்கியது. எண்பதுகளின் துவக்கத்தில் மீன்பிடிப் படகுகளை சொந்தமாக வைத்து தொழிலில் ஈடுபட்டு பெரும் செல்வத்தை ஈட்டியுள்ளார். அந்நேரம் வாழைச்சேனை கிராமத்தில் காணப்பட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களுல் அச்சி ஹாஜியாரும் ஒருவராகும். தன் உழைப்பால் ஈட்டிய பெரும் செல்வத்தை அன்றிலிருந்து கணக்கின்றி இறை பாதையில் இறைக்கத் தொடங்கினார்.
திருமண வாழ்வு
1969 ஆம் ஆண்டு முகம்மது இஸ்மாயில் ஸீனத்தும்மா என்பவரை கரம் பற்றி சிறப்பான குடும்ப வாழ்வைத் தொடங்கினார். திருமண பந்தத்தின் மூலம் அவருக்கு நான்கு ஆண் பிள்ளைகளும் நான்கு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
2006 ஆம் ஆண்டு தனது பாசமிகு மனைவி ஸீனத்தும்மா இறையடி சேர்ந்த பிறகு 2007ம் ஆண்டு விதவையான நாகூர் உம்மாவை இரண்டாம் தாரமாக மணமுடித்துக் கொண்டார். இதிலும் ஒரு ஆண் பிள்ளை உண்டு. 1986 ஆம் ஆண்டு முதல் தடவையாக புனித மக்கா சென்று ஹஜ் கடமையினையும் நிறைவேற்றியுள்ளார்.
சமூகப்பணி
90களில் வாழைச்சேனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயலில் பொதுமக்களால் பல தடவைகள் ஏகமனதாக பிரதம தர்மகர்த்தாவாகத் தெரிவு செய்யப்பட்டு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அல்லாஹ்வின் மாளிகையை பரிபாலனம் செய்யும் பெரும் பேற்றினைப் பெற்றார்.
ஈழப்போர் உச்சத்தை தொட்டிருந்த இந்நாட்களில் இது போன்ற சமூகப்பணிகள் மிகவும் சவாலானதாகும்.
வாழைச்சேனை கடல் வளமிக்க பிரதேசமாகும். இப்பிரதேச மக்களின் ஜீவனோபாயமாக கடற்றொழிலே விளங்குகிறது. கடற்றொழில் மூலம் பெறப்படும் வருமானத்தினூடாக பொதுப்பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்ற உயர்ந்த எண்ணம் இப்பிரதேச தனவந்தர்கள் சிலருக்கு ஏற்பட்டது.
அதன் பயனாக 1994ஆம் ஆண்டு உருவானதே வாழைச்சேனை ஹைராத் ட்ரஸ்ட் நிறுவனமாகும்.
வாழைச்சேனையிலிருந்து மீன்களை ஒரு பொதுப் போக்குவரத்து மூலம் கொழும்புக்கு ஏற்றி பெரும் வருமானத்தை ஈட்டுவதே இதன் இலக்காகும். இந்த நிதியினை வாழைச்சேனை ஹைராத் மஸ்ஜிதின் நிர்மானத்திற்கும் அந்-அநஹ்ஜா அரபுக்கல்லூரிக்கும் செலவழிப்பதே ஹைறாத் ட்ரஸ்டின் பிரதான இலக்குகளாகும்.
இதனைத்தாண்டி பல உப இலக்குகளையும் எய்த ஹைறாத் ட்ரஸ்டினால் முடிந்துள்ளமை நிதர்சனமாகும். இந்நிறுவனத்தை தாபிக்க தங்களது சொந்தப் பணத்தை முதலீடு செய்து மிகப்பெரும் சதக்கத்துன் ஜாரியா ஒன்றுக்கு வித்திட்ட ஆரம்ப கர்த்தாக்களுள் ஹாஜியாரும் ஒருவராகும்.
அச்சி ஹாஜியாரின் அந்-நஹ்ஜா
06.06.1990 இல் அந்-நஹ்ஜா அரபுக்கல்லூரி உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட தினத்திலிருந்து கல்லூரியின் இயக்குனர் சபைத்தலைவராக செயற்பட்டு வருகிறார் அச்சி ஹாஜியார்.
மூன்று தசாப்தங்கள், ஒரே கல்வி நிறுவனத்தில் பல்வேறு பரிமாணங்களில் தொண்டாற்ற கிடைப்பது பெரும் பேறாகும் என்பதில் ஐயமேதுமில்லை.
அத்தகைய வரப்பிரசாதமொன்றை இறைவன் அன்னாருக்கு நல்கியுள்ளான். இருநூற்றுக்கும் மேற்பட்ட 'ஹபழதுல் குர்ஆன்' இறைமறையை தங்களது உள்ளங்களில் சுமந்தவர்கள், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையான இறை மார்க்கத்தை அதன் தூய வடிவில் உலகமெல்லாம் எடுத்தோதும் ஆலிம்கள் (மௌலவிமார்கள்) உருவாக்கத்தின் பின்னால் கருவியாய் தொழிற்பட கிடைத்த பாக்கியத்தை என்னவென்று சொல்வது?
இதற்குப்பின்னால் அன்னாரின் தூய எண்ணமும் அர்ப்பணிப்பும் இருக்குமென்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை.
எண்பதுகளின் இறுதியில் வாழைச்சேனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயலில் ஒரு சின்னஞ்சிறு பிள்ளை தன் மெல்லிய குரலில் குர்ஆனை ரமளான் கால இராத் தொழுகையில் ஓதி தொழுகை நடத்துகிறது.
இந்நிகழ்வே ஹாஜியாரின் உள்ளத்தில் மார்க்கக் கல்வியைப் போதிக்கும் ஒரு கலாசாலை ஒன்றினை துவங்க வேண்டும் என்றிருந்த எண்ணத்திற்கு உடனடியாக செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என தூண்டிய காரணியாகும்.
அன்று ஊரிலிருந்த வெகு சில உலமாக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், தனவந்தர்கள் என சிறு குழுவினர் வாழைச்சேனை முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாயலில் ஒன்றுகூடி ஆலோசித்து முடிவெடுத்ததன் பயனாக ஜாமிஅதுந் நஹஜதில் இஸ்லாமிய்யா எனும் பெயரில், அரபுக்கல்லூரி, இப்போது அமைந்திருக்கும் இடத்தில் சிறிளவில் 20 மாணவர்களைக் கொண்டு 06.06.1990 ஆம் ஆண்டு புதன்கிழமை காலை வேளையில் சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் அதிபர் அலியார் (தேவ்பந்தி), காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக்கல்லூரியின் பிரதி அதிபர் அலியார் (பலாஹி) ஹஸ்ரத் ஆகியோர்களைக் கொண்டு உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
ஹச்சி ஹாஜியார் அரபுக்கல்லூரியின் துவக்க காலத்தில், தனது உடல், பொருள், காலம் எல்லாவற்றையும் அர்ப்பணித்து, ஒப்பற்ற, தன்னலமற்ற சேவையொன்றை வழங்கினார்.
கல்லூரியின் இயக்குனர் சபைத்தலைவராக மட்டுமல்லாமல், தேவையின் நிமித்தம் அதிபராக, ஆசானாக, காவலாளியாக, சமையற்காரராக, ஏன் சுத்திகரிப்பு தொழிலாளியாகக்கூட பரிமாணம் எடுத்திருக்கிறார்.
வெளியூர் பயணங்கள் சென்று திரும்பும் போது, தன் சொந்தப் பிள்ளைகளுக்குப் போல மத்ரசாவில் பயின்ற மாணவர்கள் எல்லோருக்கும் தந்தையின் இடத்திலிருந்து பழமும் இனிப்புப்பண்டமும் வாங்கித் தந்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
நஹ்ஜா அரபுக்கல்லூரி இப்பிரதேசத்திலேயே சிறந்த ஓர் கலாசாலையாகவும், அங்கிருந்து பட்டம் பெற்று வெளியே வருவோர் இத்தேசத்திற்கே பயன்தரத்தக்க தலைசிறந்த உலமாக்களாக வேண்டுமென்ற கனவும் இலட்சியமும் அவருள் இருந்து கொண்டே இருந்தது.
கனவு நனவாகவும் இலட்சியம் ஈடேறவும் சதாவும் அவர் உழைத்துக்கொண்டே இருந்தார். அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் கண்டுள்ளார். இதில் இன்னும் நீண்ட நெடிய தூரம் பயணிக்க வேண்டுமென்ற யதார்த்தத்தையும் புரிந்து செயற்பட்டுக் கொண்டிருந்தார். மொத்தத்தில் ஹச்சி ஹாஜியார் என்றால் அந்-நஹ்ஜா என்பதே அடையாளமாகிப்போனது.
அன்னாருக்கு மேலான சுவர்க்கம் கிடைக்கவும் தன்னிகரில்ல அவரது சேவையை வல்ல இறைவன் பொருந்திக் கொள்ளவும் பிரார்த்தனைகள்.
ஹாபிஸ் இஸ்ஸத் அஹ்மத் (நஹ்ஜீ) அவர்கள் ஹச்சி ஹாஜியாரின் மரணத்திற்கு முன்னர் எழுதிய பதிவு. சிறு மாற்றங்களுடன் பிரசுரமாகிறது.