
04/07/2025
💔 ரிதன்யா மரணம் உணர்த்தும் பாடம்!
ரிதன்யா என்பது மிக அழகான தனித்துவமான பெயர். விஜய் டிவி ‘புகழின்’ மகள் பெயரும் இது தான் ! இன்று நவீனமாக இருக்கும் பெயரை 27 வருடங்களுக்கு முன்பு 90 களில் ஒரு பெற்றோர் தனது குழந்தைக்கு வைத்துள்ளார்கள் என்பதே அவர்களது பேரன்பிற்கு சான்று.
நல்ல வசதியுடன் வளர்த்த தனது செல்ல மகளை, பெரிய இடத்தில் கட்டித்தர வேண்டும் என்று தான் எந்த தகப்பனும் நினைப்பான். அரசியல் பின்புலமிக்க பாரம்பரிய குடும்பம் ! மாப்பிள்ளைக்கு எந்த வித கெட்ட பழக்கமும் இல்லை, 20 நிமிடப் பயணத்தில் சென்று பார்த்து விடக் கூடிய தூரம். இதை விட என்ன வேண்டும் என்று தான் அவர் நினைத்திருப்பார். ஆகவே தான் சுமார் ஐந்து கோடி செலவில் ஊரே பார்த்து வியக்கும்படி திருமணத்தை நடத்தியுள்ளார் தந்தை ! வால்வோ காரா, தர்றேன் ! மாப்பிள்ளைக்கு பிசினஸ் வைத்து தர வேண்டுமா ! பண்ணிக்கலாம் சாமி ! என அனைத்திற்கும் ஆமோதித்துள்ளார்,
ரிதன்யாவின் திருமண வீடியோவை யூடியூபில் பார்த்தேன் ! இப்போது அது நீக்கப்பட்டிருக்கிறது. கோவிலில் மணமகள் கிளம்புவது முதல் பல இடங்களில் ரிதன்யாவின் கண்கள் தந்தையைத் தான் தேடுகிறது. ஆனால் அப்படியான பாசக்கார மகள் இன்று இல்லை. காரணம் ஒரு பொன் குஞ்சன்.
கொங்குப் பகுதியை பொறுத்த வரை ஆண் குழந்தை அதிகாரம், வாரிசு, உரிமை. — பெண் குழந்தை என்றால் பாசம், கௌரவம். ஆண் வாடையே படாமல் நல்லபடியாக மகளிர் பள்ளியில் படிக்க வைத்து, மகளிர் கல்லூரிக்கு அனுப்பி ஒரு நல்ல குடும்பத்தில் கொடுத்து விட்டால் கடமை முடிந்தது. “மேற்படிப்பு, வெளிநாடெல்லாம் மாப்பிளையோட சேர்ந்து போ கண்ணு” என்பது தான் எழுதப்படாத விதி.
கொங்கு பகுதியில் பல காதல்கள் "எங்க அய்யங்கிட்ட சொல்லிப் போடுவேன் பாத்துக்க " என்ற ஒற்றை வரியில் முடித்து போகும். அப்படியே தொடர்ந்தாலும், சாதி, குலம், கூட்டம் எல்லாம் சரியாக இருக்கிறதா எனப் பார்த்த பிறகே காதல் மலரும். காரணம், எந்த சூழ்நிலையிலும் தன்னால் தன் தந்தை தலை குனிந்து விடக்கூடாது என யோசிக்கும் அப்பா செல்லங்கள் கொங்கு மகள்கள். சொத்தில் பத்துப் பைசா தரவில்லை எனினும் உரிமை வேண்டாம் என கையெளித்திடுவார்கள். கணவனே என்றாலும் அப்பாவிற்கு பிறகு தான் எவனும் !
ஆனால் ஆண் குழந்தையை ஓரளவிற்கு வசதி உள்ள குடும்பங்கள் கூட பொன் குஞ்சனாய் தான் வளர்ப்பார்கள். தாத்தா, அப்பா சொத்தில் வளர்ந்து, கல்யாணமண்டபம், வட்டிக்கு விடுதல், வாடகை வாங்குதல், விதம் விதமான ஸ்கேம்களில் சிக்கி ஏமாறுதல் தான் இந்த பொன் குஞ்சன்களின் வேலை. ஏழு தலைமுறைக்கு சொத்து இருப்பதால் மறந்தும் வேலைக்கு செல்ல மாட்டார்கள்.
தோல்வி, காதல், சண்டை, சமஉரிமை, ஏமாற்றம், புத்தகம், காத்திருத்தல், விட்டுக்கொடுத்தல் என எந்த அடிப்படை அனுபவமும் இருக்காது. அம்மா திட்டினாலே கோபித்துக் கொள்ளும் அமுல் பேபிகள். அம்மச்சிகளின் சின்ன ஜமீன்கள். வீட்டிலேயே பிரசவம், மூலிகைப் பண்ணை, லில்லிபுட் தேடுதல், பாரம்பரிய உணவு, இயற்கை வைத்தியம், திருமணமான மூன்று மாதத்தில் கருத்தரிக்க வைத்து விட வேண்டும் என இவர்களது எண்ண ஓட்டமே தூர்தர்சன் லெவலில் இருக்கும். 24 மணி நேரமும் வீட்டிலேயே இருக்கும் இவர்களுக்கு சமைத்துப் போடுதல், இல்லறத்தை இன்பமயமாக்குதல் தான் இவர்களுக்கு வாக்கப்படும் பெண்களின் நிலை.
கவினுக்கு மாத வாடகை மட்டும் 20 லட்சம் வருகிறது. திருமணமான மூன்றாவது வாரமே சிக்கல் வருகிறது, ரிதன்யா அப்பா வீட்டிற்கு வந்து, கவினின் அம்மாவை அழைத்துப் பேசியிருக்கிறார். எம்புள்ளையா இப்படி என பொய்யாய் அதிர்ந்து ரிதன்யாவை அழைத்து சென்றிருக்கிருக்கிறார். உன் பாதுகாப்புக்கு தான் என சொல்லி வீட்டின் கேட்டை பூட்டி ரிதன்யாவை உள்ளே அடைத்திருக்கிறார்கள்.
மன ரீதியாக உடல் ரீதியாகவும் டார்ச்சர் தொடர்ந்திருக்கிறது. அனுசரித்துப் போ என பெற்றோர் தரப்பும் அழுத்தம் தர, தோல்வி அடைந்த தன் திருமணத்தால் தன் அப்பாவிற்கு எந்த வித தலைகுனிவும் ஏற்பட்டு விடக்கூடாது என “இவர்களிடம் போராட என்னிடம் வலிமை இல்லை அப்பா, என்னை மன்னித்து விடுங்கள்” மிக அழகான தமிழில் சொல்லிவிட்டு உலகை விட்டு பறந்து போனது இந்த செல்லக் கிளி. பெயரையே பார்த்துப் பார்த்து வைத்தவர்களுக்கு மகளின் மறைவு எப்படி இருக்கும்.
இதில் நாம் கவனிக்க வேண்டியவை.
1) எவ்வளவு வசதி இருந்தாலும் , உங்கள் மகன் மற்றும் மகளை கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஒரு சில வருடங்களாவது வெளியூர்களுக்கு வேலைக்கு அனுப்புங்கள். புதிய ஊர், வேலை, நண்பர்கள் என கிடைக்கும் அனுபவம் அவர்கள் மனதை திடமாக்கும், அறிவை விசாலமாக்கும்.
2) வாழ்வின் எந்த சூழ்நிலையிலும், என்ன தவறு செய்திருந்தாலும் நீ எங்களிடம் வரலாம், ‘நாங்கள் இருக்கிறோம்’ என்ற நம்பிக்கையை தொடர்ந்து தாருங்கள்.
3) லட்சத்தில் பீஸ் கட்டினாலும், நீ பெயில் ஆகும் வாய்ப்பு இருக்கிறது, கோடியில் திருமணம் செய்தாலும் அது முறியும் வாய்ப்பும் இருக்கிறது, ஆனால் இது முடிவல்ல ! எதற்கும் ஒரு மாற்று உண்டு என்பதை சொல்லுங்கள்.
4) ஒரு காதல், ஒருவனுக்கு ஒருத்தி, நூறு மார்க், தங்கமான பிள்ளை, ஒழுக்கமான வளர்ப்பு என சம்பிரதாயங்கள் அனைத்தும் போலி, நீயும் உலகத்தில் உனது இருப்பு மட்டுமே நிஜம் ! எதுவும் கடந்து போகும், எல்லாவற்றையும் கடந்தும் நீ வாழலாம் என்ற திடம் தாருங்கள்.
5)மகன் என்றால் உழைப்பின் அருமை நிச்சயம் போதிக்கப்பட வேண்டும் ! பிறரிடம் கை கட்டி நின்று வேலை நுணுக்கம் பழகிட வேண்டும் ! வரிசையில் நின்று வாங்கத் தெரிய வேண்டும். வசதியும் திறமையும் வேறு வேறு ! இந்த உலகில் இருக்கும் ஏதோ ஒரு சிறிய தேவையாவது உனது திறமை சரி செய்ய வேண்டும், அதுவே மனித இருப்பின் அடிப்படைகளில் ஒன்று என்பதை சொல்லுங்கள்.
6) மனைவியே என்றாலும் பெண்ணின் விருப்பம் இன்றி தொடக்கூடாது என்பதை மண்டையில் உரைக்கும் படி சொல்லி வளருங்கள்.
7) திருமணத்திற்கு பிறகு படிப்பு, வேலை, சுயதொழில் என பெண்ணின் விருப்பம் எது என்றாலும் அதை நிறைவேற்றி தருவது தான் ஆணின் கம்பீரம் என சொல்லுங்கள்.
8 ) மகளோ, மனைவியோ பெண்ணை நம்புங்கள், தனியான பயணங்களை அனுமதியுங்கள், பெண்ணிற்கும் சிறகுகள் உண்டு, சார்ந்திருக்கும் வரை அது விரியாது. சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் பொழுது தான் அதன் பயணம் துவங்கும், எங்கு பறந்தாலும் அது கூடு வந்தே சேரும் எனப் போதியுங்கள்.
பிறகு ஒரு முக்கிய விஷயம்,
ஒருவேளை திருமண வயதில், உங்கள் வீட்டில் ஒரு பொன் குஞ்சனை மகனாக வளர்ந்திருந்தால், அவனுக்கு தேவை திருமணம் அல்ல, ஒரு வாழ்நாள் ஆயா ! மீறி திருமணம் செய்து வைத்தால் உங்களையும் சிறைக்கும் அழைத்து செல்லும் அற்புதங்களை நிகழ்த்துவார்கள் இந்த பொன் குஞ்சன்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
நன்றி: ஹரிஹரசுதன் தங்கவேலு, எழுத்தாளர்