17/07/2025
ஜேவிபியின் இனவாதமும் பயங்கரவாதத் தடைச் சட்டமும்
-----------------------------------------------------
நலிந்த ஜயதிஸ்ஸ இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் இனம், மதம் பார்த்து பாவிக்கப்படுவதில்லை அண்மையில் நடந்த செய்தியாளர் சந்திப்ப்பில் குறிப்பிட்டார். ஆனால் இலங்கை வரலாற்றில் பயங்கரவாத தடை சட்டம் என்பது அதிகமாக தமிழ் மக்களுக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது அது முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்த சட்டம் ஜேவிபி ஆட்சிக்கு வந்த பின்னரும் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராகதான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
அண்மையில் ருஸ்தியை பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்துவிட்டு தேர்தல் மேடைகள் எங்கும் ஜனாதிபதி அவரை பயங்கரவாதி என்று கூறிக் கொண்டு இருந்தார், அவரை பயங்கரவாதி என்று கூறுவதற்கான காரணம் அவர் சியோனிச பாசிசத்தை எதிர்த்து ஒரு ஸ்டிக்கரை ஒட்டியதுதான். இப்போது கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சுஹைல் செய்த குற்றம் இஸ்ரேலிய சபாத் மண்டபத்துக்கு அருகில் நடந்து சென்றமை. ஜேவிபி ஆட்சி முஸ்லிம்கள் என்றால் அடிப்படையில் பயங்கரவாதிகளாக இருப்பார்கள் எனவே இஸ்ரேலை எதிர்க்கும் முஸ்லிமகளை கைது செய்கிறது.
இதே நேரம் வேறு மத்தை சேர்ந்தவர்கள் இஸ்ரேலை எதிர்ப்பதற்கு கைது செய்யப்பட்டதாக காணவில்லலை. மேலும் அண்மையில் பலஸ்தீன காபியா அணிந்தது தொழுகைக்கு சென்றதற்காக பலர் இரகசிய பொலிஸாரினால் விசாரிக்கவும் பட்டு இருக்கிறார்கள். இப்படி பலஸ்தீன எதிர்ப்பை முன்னெடுப்பவர்கள் மீது இலங்கை அரசாங்கம் மிக மோசமான ஒடுக்குமுறையை பிரயோகித்து வருகிறது.
பலஸ்தீனுக்கு ஆதரவாக செயற்பட்ட காரணத்தால் முஸ்லிம்கள் பயங்கரவாத தடை சட்டத்திற்கு கீழ் கைது செய்யப்படும் அதே நேரம் துப்பாக்கி போன்றவற்றை வைத்துக் கொண்டு இருக்கும் சிங்களவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதில்லை. இலங்கையில் சிங்கள வர்கள் சார்ந்த வன்முறை என்பது இயல்பாக்கம் செய்யப் படுகிறது.
அண்மையில் ஞானசார தேரர் தன்னுடைய உரையில் இலங்கையில் இருக்கும் அடுத்த மத (புலிகள், சஹ்ரானின் அமைப்பு) தற்கொலை தாக்குதல் நடத்தி மக்களை கொன்றது போன்று தனக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது கோத்தாபாய ராஜபாக்ஸ யாரையும் கொலை செய்யாமல் பெளத்த மதம் சொல்லும் அகிம்சை முறைப்படி பதவி விலகி சென்றதாக குறிப்பிடுகிறார். இங்கு கோத்தபாயா ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சராகவும், மஹிந்த ஜனாதிபதியாகவும் இருக்கும் காலத்தில்தான் இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்தது.
இந்த இனப்படுகொலையில் கிட்டத்தட்ட 70,000க்கு மேற்பட்ட மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். இது போல தமிழ் மக்களுக்கு எதிரான மிக மோசமான படுகொலை 1983 ஜூலையில் நடத்தப்பட்டது. அதில் 3,000க்கு மேற்பட்ட மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். இப்படி இலங்கை அரசாங்கமும் சிங்கள பாசிச அமைப்புகளும் இலங்கையில் நிகழ்த்திய மிகப் பெரிய படுகொலைகளை பட்ட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
இங்கு கவனிக்கப் படவேண்டிய விடயம் இங்கு பெரும்பான்மைவாதத்தால் நடத்தப்பட்ட படுகொலைகளைகள் இயல்பானதாக்கப்பட்டிருக்கிறது. அது இலங்கை நாட்டின் அமைதிக்கும், பாதுகாப்புக்குமான கொலைகளாக கருதப்பட்டு வந்து இருக்கிறது. இதே நேரம் சிறுபான்மை சமூகங்களினுள் இருந்து வந்த வன்முறைகள் பயங்கரவாதமாக கருதப்பட்டு அந்த வன்முறையை ஒழிக்க அரசாங்கம் எந்த அளவுக்கும் செல்லலாம் என்ற நிலையையும் இங்கு இருக்கிறது.
தங்களை இடதுசாரிகளாக அறிவித்துக் கொள்ளும் ஜேவிபியும் ஞானசார தேரர் போன்றே சிங்கள தேசியவாத பார்வையில் இருந்து இவற்றை நோக்குகிறது. உதாரணமாக 2017ஆம் ஆண்டு ரோஹிங்கியா அகதிகள் இலங்கைக்கு வந்த போது அவர்களுக்கு எதிரான தாக்குதலை சிங்கள ராவய போன்ற பாசிச அமைப்புகள் நடத்திய போது “இலங்கையும் அதன் மக்களும் மத ஸ்தாபனங்களுமே அபகீர்த்திக்கு உள்ளாகின்றன,” என்று ஜேவிபி அறிக்கை விட்டது. உலக சோசியலிச இணையதளம் "ஜே.வி.பி. அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் இந்த தாக்குதல் நடத்தியவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாமல் இருப்பது தற்செயலானது அல்ல.
தாம் தங்கியிருக்கின்ற சிங்கள-பௌத்த அடித்தளத்துடன் அவர்களுக்கு உள்ள ஒட்டுறவின் காரணமாகவே அவர்கள் அப்பெயர்களை குறிப்பிடவில்லை" என்று குறிப்பிட்டு இருந்தது. மேலும் ஜேவிபி “இலங்கையிலும் இப்போது சில காலமாக பல்வேறு விதமான இனவாத மற்றும் மத அடிப்படைவாத கும்பல்களின் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இனவாத மோதல்கள் காரணமாக இலங்கைக்கு கடந்த காலத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டதோடு முப்பது ஆண்டுகால இனவாத போரையும் எதிர்கொள்ள நேர்ந்தது.
அதன் சில பிரதிகூலமான விளைவுகளை இன்னமும் எமது நாடு எதிர்கொண்டுள்ளது” என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள். ஸ்டார் குண்டுத் தாக்குதல் நடந்த போது அனுர குமார திஸாநாயக்க முஸ்லிம்களின் கருவில் இருந்தே பயங்கரவாதம் உருவாகிறது என்று கூறினார், சிங்கள பாசிச அமைப்புகள் தாக்கியதும் மதஅடிப்படைவாத அமைப்புகள் என்று பொதுவாக கூறுவதுடன் அது இலங்கையில் இருக்கும் அணைத்து மதத்திற்கும் அபகீர்த்தி. அதே நேரம் இஸ்லாமிய பாசிஸ்ட்கள் தாக்கினால் பயங்கரவாதிகள்.
ஜேவிபி இப்படியான சொற்களை இனம், மதம் பார்த்து பாவிப்பது அவர்களுடைய நீண்ட கால சிங்கள இனவாத அடித்தளத்தில் இருந்து உருவாவது. ஜேவிபி இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிரான முன்னெடுத்த 30 வருடகால யுத்தத்தை ஆதரித்துடன் அதற்கான பிரச்சாரத்தையும் முன்னெடுத்தார். இலங்கையில் சமாதான பேச்சுவார்த்தை நடக்கும் போது அதை எதிர்த்து சிங்கள ராவய போன்ற அமைப்புகளை திரட்டி யுத்தத்தை நடத்தியது நாங்கள்தான் என்று கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஜேவிபி தொடர்ந்து சொல்லி வந்தார்கள். அவர்கள் அந்த காலத்தில் சிங்கள பாசிச அமைப்புகளை திரட்டி யுத்தம் ஒன்றே தீர்வு என்று போராட்டமும் நடத்தினார்கள்.
இப்படியான இனவாத சிந்தனையில் இருந்து உருவாக்கி வந்த ஜேவிபி தங்களுடைய ஆட்சியில் மதம், இன அடிப்படையில்தான் சட்டங்களை பயன்படுத்துகிறது. பிள்ளையானை பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யும் ஜேவிபி அரசாங்கம் அவர்களுக்கு எஜமானாக மஹிந்தகளை ஏன் பயங்கரவாத தடை சட்டத்தில் கீழ் கைது செய்வதில்லை என்ற கேள்வியை ராஜிவ்குமார் ஜாவீவ்வகாந்த் எழுப்பி இருந்தார்.
நலிந்த ஜயதிஸ்ஸ நடத்திய செய்தியாளர் சந்திப்பிலும் இனம், மதம் பார்த்து சட்டத்தை பிரயோகிக்கவில்லை என்றால் இலங்கையில் ஜேவிபி ஆட்சியில் இருக்கும் போது எத்தனை சிங்களவர்கள் மீது பயங்கரவாத சட்டத்தை பிரயோகித்திரிகிறீர்கள் என்ற கேள்விக்கு அவருடைய பதில் தன்னிடம் தகவல் இல்லை என்பதே இருந்தது.
இலங்கையில் பயங்கரவாத தடை சட்டத்தை அகற்றுவோம் என்று கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இஸ்ரேலிய பாசிச எதிர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக இதனை பயன்படுத்துகிறது. இது இத்துடன் நிற்க்ப் போவதில்லை. இது சிறுபான்மை சமூகத்தில் உருவாகும் எதிர்ப்புகள் மீது மிக மோசமாக பயங்கரவாத தடை சட்டத்தை பிரயோகிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.
அண்மையில் விஜித ஹேரத் "இனப்படுகொலை" என்ற சொல்லை பாவித்தால் கைது செய்யப்படுவார்கள் என்று மிரட்டினார். இது மிகப் பெரிய அபாயமாக இருக்கிறது. அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டம் கட்டாயம் இல்லாமல் ஆக்கப்பட வேண்டும்.