25/06/2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஆணையாளர் திருகோணமலை விஜயத்தை முன்னிட்டு அவரை வரவேற்கும் முகமாகவும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் அவசரமான மனித உரிமை நிலைமைகள் மற்றும் குறைபாடுகளை அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லவும் அமைதியான கவனயீர்ப்பு நடவடிக்கை இன்று (25) திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நடவடிக்கையினை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், சிவில் அமைப்புக்கள் மற்றும் வடக்கு கிழக்கு சமூக இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க் இன்றைய (25) புதன்கிழமை திருகோணமலை -ஜுப்லி மண்டபத்திற்கு விஜயம் மேற்கொண்டு சிவில் செயற்பாட்டாளர்களை சந்தித்த நிலையில் அவருடைய கவனத்தை ஈர்க்கும் முகமாக ஜுப்லி மண்டபத்தின் முன்பாக பாதிக்கப்பட்ட சமூகங்கள், குடிமைப் பூர்வ அமைப்புகள், மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது கவனயீர்ப்பில் கலந்து கொண்டோரை மனித உரிமை உயர்ஸ்தானிகர் சந்தித்து கலந்துரையாடியதோடு அவர்களிடமிருந்து மகஜர்களையும் பெற்றுக் கொண்டார்.
இதன்போது, இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இன அழிப்பை (Genocide) விசாரித்து குற்றவாளிகளை வழக்குப் பூர்வமாக தண்டிக்க ஒரு சர்வதேச குற்றவியல் நீதித்துறை முறைமை அமைக்கப்பட வேண்டும்.
செம்மணி, கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கூட்டு மனித புதை குழி விடயம் தொடர்பாக சர்வதேச நீதிமன்ற மற்றும் நிபுணத்துவ குழுக்களுக்கு அணுகுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் (ICC), அல்லது சர்வதேச நீதிமன்றத்திற்கும் (ICJ) – போர் குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள், மற்றும் இன அழிப்பு குற்றங்கள் ஆகியவற்றுக்காக பரிந்துரை செய்ய வேண்டும்.
தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழும் பிரதேசங்களில் அரசால் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புகளை உடனடியாக நிறுத்தி, உரிய உரிமையாளர்களுக்கு நிலங்களை மீளளிக்க வேண்டும்.
தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு தளங்களை அழிக்கும் செயற்பாடுகளை (Sinhalisation) நிறுத்த வேண்டும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா?
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர் ஆணையாளர் அலுவலகம் (OSLAP) நடத்திய இலங்கை பொறுப்புக்கூறும் திட்டம் – 1948இல் தொடங்கிய தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையின் மற்றும் இன அழிப்பின் முழு வரலாற்றையும் உள்ளடக்கி அறிக்கையிட வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை முன்நிறுத்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் ஊடகப் பேச்சாளர் ஜெரமி லோரன்ஸ் ஆணையாளரின் இலங்கை வருகை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.