17/11/2025
மாகாண சபைத் தேர்தலை நடத்த விசேட தெரிவுக்குழு அமைக்க நடவடிக்கை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் விசேட தெரிவுக்குழு அமைத்து தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பான விசேட தெரிவுக்குழு மற்றும் தேர்தல் முறைமை தொடர்பில் விசேட பிரேரணையொன்றை பொதுநிர்வாக அமைச்சின் குழுநிலை விவாதத்தின் போது விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் சபையில் முன்வைப்பார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர், உயர்நீதிமன்றம், அரச அலுவலகங்கள், பாராளுமன்றம், மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டுக் குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி எம்.பி தயாசிறி ஜயசேகர மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய தயாசிறி ஜயசேகர எம்.பி,
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிலிருந்து தமிழரசுக் கட்சி விலகியிருந்தது. ஒருசிலர் மஞ்சள் குருவிகளாகினார்கள். இதற்கான காரணத்தை சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி தெளிவாகக் குறிப்பிட்டார்.
நாட்டில் வாழும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் ஆட்சியிலிருந்த ஜனாதிபதிகள் தீர்வு காணத் தவறிவிட்டார்கள். தங்கள் அரசியல் இருப்புக்காகவே தமிழ் மக்களின் வாக்குகளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டு அரசாங்கம் வீழ்ச்சியடையும் சந்தர்ப்பங்களிலேயே தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவார்கள்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தமிழ் மக்கள் அரசாங்கங்கள் மீது நம்பிக்கை இழந்தார்கள்.
இந்த அரசாங்கம் மீதும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக குறிப்பிட்டீர்கள். எனினும் இதுவரை அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளப்படவில்லை.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமையும். மாகாண சபைத் தேர்லை நடத்தும் சட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். ஜனாதிபதி நினைத்தால் இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காணலாம். மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் சாணக்கியன் எம்பி கடந்த மே மாதம் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்தார்.
அந்த திருத்தத்துக்கு அமைய நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரதமர் தலைமையில் ஒரு குழுவை நியமித்து, உரிய நடவடிக்கைகளை எடுங்கள். நாம் அதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.