01/11/2025
அல்லாஹ் மட்டுமே உள்ளான். படைப்பு என்பது முக்காலத்திலும் இல்லாதது.
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இவ்வாறு சொல்கிறார்கள் “ஸ்பெய்ன்” நாட்டைச் சேர்ந்த ஹிஜ்ரீ 509ல் பிறந்து ஹிஜ்ரீ 594ல் மரணித்த குத்புல் அக்தாப் அபூ மத்யன் ஷுஐப் றஹிமஹுல்லாஹ் அவர்கள்.
وَمِنْ أَلْطَفِ إِشَارَاتِ وَحْدَةِ الْوُجُوْدِ قَوْلُ الْقُطْبِ أَبِى مَدْيَنْ التِّلَمْسَانِيْ رحمه الله تعالى،
اللهَ قُلْ وَذَرِ الْوُجُوْدَ وَمَا حَوَى - إِنْ كُنْتَ مُرْتَادًا بُلُوْغَ كمالٍ
فَالْكُلُّ دُوْنَ اللهِ إِنْ حَقَّقْتَهُ - عَدَمٌ عَلَى التَّفْصِيْلِ وَالْإِجْمَالِ
وَاعْلَمْ بِأَنَّكَ وَالْعَوَالِمَ كُلَّهَا - لَوْلَاهُ فِيْ مَحْوٍ وَفِي اضْمِحْلَالِ
مَنْ لَا وُجُوْدَ لِذَاتِهِ مِنْ ذَاتِهِ - فَوُجُوْدُهُ لَوْلَاهُ عَيْنُ مُحَالٍ
فَالْعَارِفُوْنَ بِرَبِّهِمْ لَمْ يَشْهَدُوْا - شَيْئًا سِوَى الْمُتَكَبِّرِ الْمُتَعَالِ
وَرَأَوْا سِوَاهُ عَلَى الْحَقِيْقَةِ هَالِكًا- فِي الْحَالِ وَالْمَاضِيْ وَالْإِسْتِقْبَالِ
இவர்கள் “திலம்ஸான்” என்ற ஊரில் அடக்கம் பெற்றுள்ளார்கள். இவர்கள் “ஷெய்குல் அக்பர்” முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களால் مُعَلِّمُ الْمُعَلِّمِيْنْ (ஆசிரியர்களின் ஆசிரியர்) என்று பட்டம் சூட்டப்பட்டவர்களாவர்.
முதலில் இவர்களின் பாடல் வரிகளுக்கான பொருளை எழுதிய பின் இவர்களின் வரலாறுகளை சுருக்கமாக தமிழில் எழுதுகிறேன்.
பாடல் வரிகளுக்கான சுருக்கமான தமிழாக்கம்:
01. நீ அல்லாஹ் என்று சொல். (அல்லாஹ்) என்று நீ சொல். “வுஜூத்” உள்ளமை என்பதையும், அது தொடர்பானதையும் விட்டு விடு. நீ பூரணம் அடைய விரும்பினால்.
02. நீ சரியாக ஆய்வு செய்தால் அல்லாஹ் அல்லாத அனைத்தும் - படைப்புகள் யாவும் இல்லாதவை என்று தெரிந்து கொள்வாய். நீ பொதுவாக ஆய்வு செய்தாலும் இதுவே முடிவு. விபரமாக ஆய்வு செய்தாலும் இதுவே முடிவு.
03. அல்லாஹ் இல்லையெனில் நீயும், ஏனைய ஆலம்களும் - அண்டசராசரங்களும் இல்லாதவை என்று தெரிந்து கொள்.
04. எவனுக்கு - எந்த ஒரு படைப்புக்கு அல்லாஹ்வின் “தாத்” உள்ளமையிலிருந்து “தாத்” இல்லையோ அவ்வாறு ஒன்றிருப்பது அசாத்தியமானதாகும்.
05. அல்லாஹ்வை அறிந்த “ஆரிபீன்” இறைஞானிகள் பெருமைக்குரிய, உயர்வுமிக்க அல்லாஹ் தவிர எதையும் கண்டதேயில்லை.
06. எதார்த்தத்தில் சென்ற காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களிலும் அல்லாஹ் தவிர வேறொன்றையும் இறைஞானிகள் காணவில்லை. அவர்கள் அனைத்தையும் அல்லாஹ்வாகவே கண்டார்கள்.
அபூ மத்யன் ஷுஐப் அவர்களின் சுருக்கமான வரலாறு:
இவர்கள் “உன்துலுஸ்” ஸ்பெய்னைச் சேர்ந்தவர்கள். بُوْ مَدْيَنْ அல்லது أَبُوْ مَدْيَنْ என்று மக்களால் அழைக்கப்பட்டு வந்தார்கள். இவர்களின் இயற் பெயர் ஷுஐப் ஆகும். شَيْخُ الشُّيُوْخْ என்றும், مُعَلِّمُ الْمُعَلِّمِيْنْ என்றும் அழைக்கப்பட்டு வந்தார்கள்.
பிறப்பு: ஹிஜ்ரீ 509, மீலாதீ 1115.
மறைவு: ஹிஜ்ரீ 594, மீலாதீ 1198.
பிறந்த இடம்: குத்னியானா - قُطْنِيَانَةْ (இது إِشْبِيْلِيَّةْ இஷ்பீலிய்யாவுக்கு சமீபத்தில் உள்ளது)
சட்ட மேதை - فَقِيْهْ
“முதஸவ்விப்” ஸூபீ - مُتَصَوِّفٌ
ஸ்பெய்ன் கவிஞர் - شَاعِرٌ أُنْدُلُسِيٌّ
இவர்கள் மொறோக்கோ, ஸ்பெய்ன் நாடுகளில் ஸூபிஸக் கல்லூரிகள் அமைத்த மகான். இஷ்பீலிய்யா, பாஸ் நாடுகளில் படித்தவர். அதிக காலம் “பஜாயா” நாட்டில் வாழ்ந்தவர். இங்கு அதிகமானோர் இவரைப் பின்பற்றினர். இங்கு இவரின் அறிமுகம் பிரசித்தி பெற்றது.
இவ்வாறிருந்த நிலையில் “மறாகிஷ்” என்ற நாட்டு மன்னனிடம் இவர்களின் எதிரிகளிற் சிலர் இவர் பற்றிய தவறான கருத்துக்கள் கூறியதால் இவர்கள் மன்னரிடம் கொண்டு வரப்பட்டார்கள். மன்னர் இவர்களைக் கொலை செய்ய முடிவு செய்ததாகவும், “மறாகிஷ்” என்ற இடத்தில் இவர்களின் ஆதரவாளர்கள் அதிகமாக இருந்த காரணத்தினால் அங்கு கொலை செய்ய முடிவில்லையாதலால் இவர்கள் பக்கத்து நாடான “திலம்ஸான்” என்ற இடத்திற்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார்கள். இங்கு அவர்களை கொல்வது அவர்களின் திட்டமாக இருந்தது.
எனினும் இவர்களின் சதித் திட்டத்தை அல்லாஹ்வின் கருணையால் அறிந்த அபூ மத்யன் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களை அழைத்துச் சென்ற பாதுகாவலர்களிடம் “திலம்ஸான்” என்ற இடத்தை நாம் அடையும் வரை நான் உயிரோடிருந்தால் அங்கு சென்றபின் என்னைக் கொலை செய்யுங்கள். அங்கு செல்வதற்கிடையில் நான் மரணித்தால் என்னை திலம்ஸானிலேயே அடக்கம் செய்து விடுங்கள் என்று முன் கூட்டியே அறிவித்து விட்டார்கள்.
ஸுப்ஹானல்லாஹ்! திலம்ஸானை அடைவதற்கிடையிலேயே அவர்களை அல்லாஹ் அழைத்துக் கொண்டான். மரணித்து விட்டார்கள். “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்” إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنْ
மகான் அவர்கள் “திலம்ஸான்” எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு கவர்ச்சியான “தர்ஹா” “மசார்” ஒன்றும் கட்டப்பட்டு தினமும் பல்லாயிரம் மக்களால் தரிசிக்கப்பட்டும் வருகிறார்கள்.
“பனூ மரீன்” மன்னர்கள் அவர்களின் “தர்ஹா” - மசாரில் ஒரு பள்ளிவாயலும், கல்வி தாபனம் ஒன்றும் கட்டியுள்ளார்கள். மக்கள் தினமும் அங்கு சென்று “சியாறத்” தரிசித்தும், அருள் வேண்டியும் வருகிறார்கள்.
இவர்கள் மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்நதவர்கள். தனது உறவினர்களின் ஆடுகளை வளர்த்து அவர்களிடமிருந்து அதற்கான கூலி பெற்று வாழ்ந்து வந்தார்கள். இத்தகைய கஷ்டத்திற்கு மத்தியில் திருக்குர்ஆனைக் கற்றுக் கொள்வதிலும், அதை மனனம் செய்வதிலும் கவனமெடுத்தார்கள். மொறோக்கோ நாடுகளைத் தரிசித்து ஆங்காங்கே அறிவு ஞானங்களைக் கற்றார்கள். இன்னும் “ஸப்தா” “தன்ஜா” நாடுகளுக்கும் சென்று பல அறிஞர்களைக் கண்டு அவர்கள் மூலமும் கல்வி, ஞானங்களைக் கற்றுக் கொண்டார்கள். தங்களின் வறுமை காரணத்தினால் எவரிடமும் கையேந்தாமல் உழைத்து வாழ்வதற்கான வழிகளில் முயற்சி செய்தார்கள். மீனவர்களைச் சந்தித்து அவர்களுடன் மீன்பிடித் தொழிலும் கவனம் செலுத்தினார்கள்.
பின்னர் “மறாகிஷ்” مَرَاكِشْ என்ற ஊரில் இராணுவத்தில் சேர்ந்து சில காலம் செயல்பட்டார்கள். அக்கால கட்டத்தில் தங்களின் ஒரு கரத்தை இழக்க வேண்டிய நிலையும் அவர்களுக்கு ஏற்பட்டது. இராணுவத்தில் பணியாற்றிய கால கட்டத்தில் அங்கு பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் இவர்களின் ஆன்மிகப் போக்கை அறிந்து فَاسْ “பாஸ்” நாட்டிற்குச் செல்லுமாறு ஆலோசனை வழங்கினார்கள். அவரின் ஆலோசனைப்படி அங்கு சென்று மார்க்க ஞானங்களைக் கற்கத் தொடங்கினார்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்,
سِرْتُ إِلَيْهَا وَلَازَمْتُ جَامِعَهَا، وَرَغِبْتُ فِى مَنْ عَلَّمَنِيْ أَحْكَامَ الْوُضُوْءِ وَالصَّلَاةِ، ثُمَّ سَئَلْتُ عَنْ مَجَالِسِ الْعُلَمَاءِ فَسِرْتُ إِلَيْهَا مَجْلِسًا بَعْدَ مَجْلِسٍ،
குறித்த இராணுவ வீரரின் ஆலோசனைப்படி “பாஸ்” நாட்டிற்குச் சென்று ஒரு பள்ளிவாயலில் தங்கியிருந்து “வுழூ” வின் சட்டங்கள், தொழுகையின் விபரங்களைக் கற்றுக் கொண்டு “உலமாஉ” மார்க்க மேதைகளின் சபைகளில் கலந்து கொண்டு இறைஞானம் கற்கலானார்கள்.
குறிப்பு: இக்காலத்தில் “பாஸ்” எனும் நாடு “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் அதி உச்சக்கட்ட நிலையில் இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நாட்டில் ஆன்மிக மகான்களான ஷெய்குமாரை மட்டும் ஏற்றுக் கொண்டு ஏனைய உலமாஉகளின் உறவை முறித்துக் கொண்டார்கள்.
இதன் வரிசையில் ஹிஜ்ரீ 572ல் மரணித்த اَبُوْ يَعْزَى بَلْنُوْرْ என்ற மகானிடமும், ஹிஜ்ரீ 559ல் மரணித்த الشيخ علي بن حرزهم என்ற மேதை அவர்களிடமும் “முஹாஸபீ” என்ற இறைஞான மகானால் எழுதப்பட்ட اَلرِّعَايَةْ என்ற நூலையும், அஷ்ஷெய்கு அபுல் ஹஸன் என்ற ஞான மகானால் எழுதப்பட்ட اّلسُّنَنْ என்ற நூலையும், அஷ்ஷெய்கு அபூ அப்தில்லாஹ் அத்தக்காக் என்ற மகானிடம் “தஸவ்வுப்” கலையையும் கற்றார்கள்.
திரு மக்கா நகர் பயணம்:
இதன் பின் அபூ மத்யன் அவர்கள் திரு மக்கா நகர் சென்று “ஹஜ்” வணக்கம் செய்ய விரும்பி பயணத்தை தொடர்ந்தார்கள். வரும் வழியில் பல்லாயிரம் மார்க்க மேதைகளைச் சந்திக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. அவர்களில் உலமாஉகள் - மார்க்க மேதைகள், மற்றும் ஞான மகான்கள், துறவிகள் அடங்குவர்.
விஷேடமாக வலீகட்கரசர் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு கிடைத்தது.
திரு மக்காப் பள்ளிவாயலில் அவர்களிடம் “ஹதீது” நபீ மொழிகளை கற்கும் வாய்ப்பு இவர்ககுள்கு கிடைத்தது. இதைவிடப் பெரும் பாக்கியம் என்னவெனில் குத்பு நாயகம் அவர்கள் இவர்களுக்கு “ஸூபீ” என்று பட்டம் சூட்டியதேயாகும். அல்ஹம்து லில்லாஹ்! இதைவிட வேறு பாக்கியம் என்னதான் இருக்கறது?
அபூ மத்யன் அவர்கள் “ஹஜ்” பயணத்தை முடித்துக் கொண்டு ஆபிரிக்க நாட்டுக்கு திரும்பிவிட்டார்கள். அங்கு “பஜாயா” பகுதியின் கிழக்கில் உள்ள “பஜாயா” நகர் பட்டணத்தில் அதிக காலம் தங்கியிருந்தார்கள். இங்கு தங்கியிருந்த காலத்தில் அவர்கள் சர்வதேச மட்டத்தில் பிரசித்தி பெற்றார்கள். “பஜாயா” நகர் பள்ளிவாயலில் தங்கியிருந்து அறிவு ஞானங்களைக் கற்றுக் கொடுக்கவும், தங்களின் ஸூபிஸ “தரீகா”வை வளர்ப்பதிலும் கவனம் செலுத்தினார்கள்.
وَكَانَ يَقُوْلُ: طَرِيْقَتُنَا هَذِهِ أَخَذْنَاهَا عَنْ أَبِيْ يَعْزَى بِسَنَدِهِ عَنِ الْجُنَيْدِ الْبَغْدَادِيْ عَنْ سَرِيِّ السَّقَطِيْ عَنْ حَبِيْبِ الْعَجَمِيْ عَنِ الْحَسَنِ الْبَصَرِيْ عَنْ عَلِيِّ بْنِ أَبِيْ طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُمْ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ جِبْرِيْلَ عَلَيْهِ السَّلَامْ عَنْ رَبِّ الْعَالَمِيْنَ،
மகான் அபூ மத்யன் அவர்கள் பின்வருமாறு சொல்வார்கள்.
(நாங்கள் எங்களின் ஸூபிஸ “தரீகா”வை அல்லாஹ்விடமிருந்த ஜிப்ரீல் வழியாக, அவரிடமிருந்து கண்மணி நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் வழியாக, அவர்களிடமிருந்து அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் வழியாக, அவர்களிடமிருந்து ஹஸனுல் பஸரீ வழியாக, அவர்களிடமிருந்து ஹபீபுல் அஜமீ வழியாக, அவர்களிடமிருந்து ஸரிய்யுஸ்ஸகதீ அவர்கள் வழியாக, அவர்களிடமிருந்து ஜுனைதுல் பக்தாதீ வழியாக, அவர்களிடமிருந்து எனது குரு - ஷெய்கு அபூ யஃசா வழியாக பெற்றுக் கொண்டோம்)
இவ்வாறு ஏன் சொன்னார்கள் என்றால் அவர்கள் பேசிய கொள்கையான “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை அல்லாஹ்விடமிருந்து மேற்கண்ட எவராலும் மறுக்க முடியாதவர்கள் வழியாக வந்த கொள்கை என்பதை இக்காலத்தில் மேற்கண்ட கொள்கை “குப்ர்” என்று குரைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு செருப்படி - செருப்பு - அடி கொடுப்பதற்கேயாகும்.
முற்றும்.