28/09/2025
பினாங்கில் நடந்த ஏர் ஆசியா ரேட்ரன் மெது ஓட்டத்தில் 4000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
பினாங்கு செப் 28
பினாங்கில் நடந்த ஏர் ஆசியா ரேட்ரன் மெது ஓட்டத்தில் 4000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பினாங்கு குளோபல் சுற்றுலாத்துறை ஆதரவில் கெர்னி பிளாசாவில் தொடங்கிய இந்த மெது ஓட்டத்தில் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இதர பிராந்தியத்தைச் சேர்ந்த ஓட்டக்காரர்கள் பங்கு பெற்றனர்.
ஏற்கனவே பாலி, சுராபாயா மற்றும் அண்மையில் சிங்கப்பூரில் ஏர் ஆசியா வெற்றிகரமாக இந்த மெது ஓட்ட நிகழ்வை நடத்தியது.
பினாங்கு ஒரு முன்னணி சுற்றுலா மையமாகவும் மற்றும் மக்கள் விரும்பும் தேர்வாகவும் இருப்பதால், இந்த மாநிலத்தை ஏர் ஆசியா தேர்வு செய்தது.
பினாங்கு ரேட்ரன் ஓட்டத்தில் 3கிமீ,5கிமீ மற்றும் 10கிமீ ஆகிய மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது.
அனைத்து வயது தரப்பினரும் இந்த மெது ஓட்டத்தில் பங்கு பெற்றனர்.
இந்த மெது ஓட்டத்தில் பங்கு பெற்று மொத்த ஓட்டக்காரர்களில் 32 விழுக்காட்டினர் பினாங்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
மொத்த ஓட்டக்காரர்களில் 28 விழுக்காட்டினர் அனைத்துலக நகரங்களை சேர்ந்தவர்கள்.
10கிமீ ஓட்டத்தை பினாங்கு சுற்றுலாத்துறைக்கான ஆட்சி குழு உறுப்பினர் வோங் ஹொன் வை, ஏர் ஆசியா எவியேஷின் குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஃபோ லிங்கம் மற்றும் ஏர் ஆசியா எவியேஷின் குழுமத்தின் வர்த்தக பிரிவு தலைமை அதிகாரி அமான்டா வூ கொடி அசைத்து தொடக்கி வைத்தனர்.
சமூகங்களுக்கிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் சமூகங்களை ஒருங்கிணைக்கவும் ஏர் ஆசியா இந்த ரேட்ரன் மெது ஓட்ட நிகழ்வை
தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதனிடையே இந்த ரேட்ரன் மெது ஓட்ட நிகழ்வை பினாங்கில் நடத்துவது ஒரு மைல்கல் என ஏர் ஆசியா எவியேஷின் குழுமத்தின் வர்த்தக பிரிவு தலைமை அதிகாரி அமான்டா வூ கூறினார்.
இந்த நிகழ்வில் நாலாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது ஒரு சாதனை தான் என அவர் சுட்டிக் காட்டினார்.
சுகாதாரம், உடல் ஆரோக்கியம் மற்றும் ஒற்றுமைக்கு மக்கள் முன்னுரிமை வழங்கி வருவதை இது சித்தரிப்பதாக அவர் தெரிவித்தார்.
விமானத்தில் சிறகடிப்பதையும் தாண்டி மக்களுக்கு அர்த்தமுள்ள அனுபவத்தை தருவதில் ஏர் ஆசியா உறுதியுடன் இருப்பதாக அவர் சொன்னார்.
இதனிடையே முதல் முறையாக பினாங்கில் ரேட்ரன் மெது து ஓட்ட நிகழ்வை நடத்த ஏர் ஆசியா முன்வந்துள்ளதை தாம் பாராட்டுவதாக பினாங்கு சுற்றுலாத் துறைக்கான ஆட்சி குழு உறுப்பினர் வோங் ஹொன் வை கூறினார்.
பல அனைத்துலக விளையாட்டு நிகழ்வுகள் இந்த மாநிலத்தில் நடத்தப்படுவதில் பினாங்கு பெருமை கொள்வதாக அவர் தெரிவித்தார்.
ஏர் ஆசியாவின் இந்த திட்டம் மிகவும் பாராட்டக்கூடியது என்றார் அவர்.
இந்த மெது ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம் உட்பட வெ 60,000 மதிப்பிலான பரிசுகள், இலவச இரு வழி விமான டிக்கெட்டுகள், ஹோட்டலில் தங்குவதற்கான இலவச பற்று தீட்டுக்கள் உட்பட பல பரிசுகள் வழங்கப்பட்டன.