26/11/2025
என் நேசத்துக்குரிய கரிகாலனே...
உன்னிடம் சொல்வதற்கு சில சேதிகள் உண்டு.
உன் மீதான எங்களின் ப்ரியம் உனக்கே ஆச்சரியமாய் இருக்கலாம்.
தேசங்கள் கடந்தும் தமிழால் ஒன்றான உறவுகளின் இதயங்களில் உனக்கிருக்கும் தனித்துவமான இடம் குறித்து நீ புருவங்களை உயர்த்தலாம்.
கேள்...
இங்கே ஒரு இனக்குழுவினர் தமக்கென்று உண்டாக்கிய தலைவர் மூன்று நாட்களில் நான்கு கட்சி மாறுகிறார்...
இன்னொரு இனக்குழுவினரின் தலைவர்கள் தெற்கும் , கிழக்கும் , வடக்கும் என்று அடிபடுகிறார்கள்.
இன்னொரு குழுவின் தலைவர்கள் அவர்கள் மக்களின் ஊதியத்தைப் பெற்றுக்கொடுக்க கூட குரல் கொடுக்க பின்நிற்கிறார்கள்.
பெரும்பான்மை குழுவொன்று தமக்காய் உண்டாக்கிய தலைமைகள், இல்லாத பகடிகளும் சில்லறை வேலைகளையும் செய்கிறார்கள்.
ஆதலால் தான் கரிகாலா, அவர்கள் மட்டில் நீ காழ்ப்புணர்வின் சாரமாய் இருக்கிறாய். அவர்கள் பொதுவில் ஒப்புக்கொள்ள விரும்பாத இயலாமை அது. தலைமைகளுக்கான வெற்றிடத்தின் அசூசை.
அதே காரணத்தினால் தான் கரிகாலா நீ எங்களால் ஆராதிக்கப்படுகிறாய். அளவில்லாமல் அன்பு செய்யப்படுகிறாய்.
நீ எங்களைக் காதலித்தாய். எங்களுக்காகவே வாழ்ந்தாய். தணியாத தாகத்துடன் தீயிடை வெந்த ஆயிரமாயிரம் பிள்ளைகளுடன் உன் மூத்தவனையும் பலிகொடுத்தாய். பேரன்பின் வெளிப்பாடல்லவா அது ? " அவர் அவர்களின் பாலுள்ள அன்பால் தன் மகனையும் அவர்களுக்காய் பலிகொடுத்தார் " எனச்சொல்லி இங்கே தழைத்தோங்கி கோலோச்சும் ஒரு மதத்தின் அடிப்படைக் கொள்கையே அல்லவா அது. அவர்களின் படி நீ அங்கேயே கடவுளாகிறாய் கரிகாலா.
நீ இருக்கும் வரையில் நாம் தலைநிமிர்ந்து நடந்தோம். எங்களுக்கான ஒருமித்த குரலாய் நீ இருந்தாய். சிதறிப்போய்விடாதபடிக்கு பத்திரமாய் பாதுகாக்கும் ஒரு ஆயனின் கண்காணிப்பில் இருந்த மந்தைகள் போல எதிர்காலம் குறித்த நிம்மதியோடு உறங்கப்போனோம். எமக்கு சுவராகவும் , கூரையாகவும் நீ இருந்தாய். உன் பிள்ளைகள் இருந்தார்கள்.
கடவுள் கோட்பாட்டின் தோற்றம் தெரியுமா கரிகாலா?
மனிதன் தான் பார்த்து பிரம்மித்த, தன் ஆளுகைக்கு உட்படுத்த முடியாதவைகள் குறித்து அச்சப்பட்டான். மானசீகமாக நேசித்தான். அவற்றை அல்லது அவர்களை கடவுள்கள் ஆக்கினார்கள். தொல்தமிழர் மரபே முன்னோர் வழிபாடு தான். காலத்தில் நின்று அவர்கள் தேவைகளுக்காகவும் , உரிமைகளுக்காகவும் போராடியவர்களை , வீரம் செறிய வாழ்ந்தவர்களை , மாண்போடு நின்றவர்களை என் முப்பாட்டன்களும் , பாட்டிகளும் நடுகல் இட்டு கடவுளாய் வணங்கினார்கள். பின்னர் பெரும் சமயங்களில் கடவுளானார்கள். என் பிரான் சிவனும் அப்படி ஆன ஒரு கடவுள் தான்.
கரிகாலா... எமக்கு காலத்தால் விதிக்கப்பட்ட தேவையை நீ தான் கையிலெடுத்தாய். கடைசிவரை அதன் ஒழுங்கில் நின்றாய். நாம் சோரம் போகாதபடிக்கு நீ யாரிடமும் சோரம்போகமலிருந்தாய். தழல் வீரம் செறிந்தாய். எப்போதும் எங்களை நசித்தாய்.
ஆதலாலே கரிகாலா நீ இறைவனாகிறாய்.
இறைவனுக்கு பிறப்புண்டு , வாழ்வுண்டு காலம் ஆகும் இயல்புண்டு. இறையாகிய கரிகாலனே , நீ எந்த தூணிலோ துரும்பிலோ இருந்தபடி எம்மை நோக்கி உன் அந்த மந்திரப்புன்னகையை திருப்பு. நீ எங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்ற நினைப்பே பவித்திரமானதும் பாதுகாப்பானதும் ஆகும்.
இங்கே கடவுள் நம்பிக்கை அத்தனையும் அப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் இறைவனே!
மேதகு தமிழினத்தலைவர்71 ❤️