
04/08/2025
தமிழ்நாடு
மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய சீமான் - வனத்துறையினருக்கு விடுத்த எச்சரிக்கை..!!
கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமை கோரி தேனி மாவட்டம் போடி அருகே மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
இதன்படி, தேனி மாவட்டம் போடி, முந்தல் அருகே அடப்பாறையில் நேற்று கட்சியினர் மற்றும் 500க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுடன் அடப்பாறை மலை பகுதியில் நுழைந்தார்.
இந்த போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி அளிக்காத நிலையில், பேரிகார்டுகளை வைத்து வழியை மறைத்தனர் காவல்துறையினர்.
ஆனாலும் தடையை மீறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து பேசிய சீமான், "கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். கூரிய கொம்புகள் இருந்தும் மாடுகளுக்கு போராட தெரியவில்லை.
மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சென்றால் மட்டுமே மலைப் பகுதி, வனப் பகுதியில் காட்டுத் தீ பரவுவது தடுக்கப்படும். மலைகளை பாதுகாக்க வேண்டுமெனில் அங்கு ஆடு, மாடுகள் மேய வேண்டும். நீரின்றி அமையாது உலகு எனில் ஆடு, மாடு இன்றி அமையாது காடு.
மலைகளில் கிரானைட் குவாரிகள் அமைப்பதற்கு அனுமதி கொடுக்கிறார்கள் மாடு மேய்ப்பதற்கு அனுமதி கொடுப்பதில்லை. இந்த காடு சிங்கம் புலிகளுக்கு மட்டும் தானா ஆடு மாடுகளை எங்கு கொண்டு போய் மேய்ப்பது?
தேனியில் உள்ள மாடுகளுக்கு பெயரே மலை மாடுகள் தான். இதே மலைகளில் தான் ஆடு மாடுகளை மேய்த்து வந்தார்கள் வனத்துறை இதற்கு தடை விதித்தால் ஒரு லட்சமாக இருந்த மலை மாடுகள் தற்போது ஐந்தாயிரமாக சுருங்கி விட்டன.
வனப்பகுதிகளில் மாடுகள் மேய்க்க கூடாது எனில் மேய்ப்பதற்கு மாற்று இடம் வழங்கியிருக்க வேண்டும். அதைச் செய்யமால் மாடு மேய்ப்பதை தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெடிகளை வைத்து மலைகளை தகர்க்கும் போது பாதுகாப்பாக இருக்கும் வனவிலங்குகள், எங்கள் மாடுகள் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றால் பாதுகாப்பு இல்லையா? எங்கள் கோரிக்கைகளை ஏற்காமல் மலைமேல் மேய்ச்சலுக்கு கால் நடைகளை தடை செய்தால் மீண்டும் மாடுகளை மலை மேல் ஏற்றி போராட்டம் நடத்துவோம்" என பேசினார்.