26/06/2025
இதைப் பேச இதுவே நேரம்................
யூத-நஸ்ரானிகளுடன் மதீனாவில் ஒப்பந்தம் இருந்தபோதும் அவர்களின் குஃப்ருகளை கண்டிக்கும் ஆயத்துகளை அல்லாஹ் இறக்கிக் கொண்டே இருந்தான். அப்போதைய பொது எதிரியாக மதீனாவுக்கு இருந்தவர்கள் மக்காவின் முஷ்ரிக்குகள்.
ஆனாலும், மக்கா காஃபிர்களின் குஃப்ரையும் ஷிர்க்கையும் விமர்சித்த அதே அளவு, அல்லது அதைவிட அதிகமாக மதீனா யூத-நஸ்ரானிகளின் குஃப்ரையும் ஷிர்க்கையும் அல்லாஹ் கண்டித்தான். நபியவர்கள் எந்தச் சமரசமும் இன்றி அவற்றை ஓதி பிரச்சாரம் செய்து வந்தார்கள்.
"ஒப்பந்தம் இருக்கின்றதே, இப்போது பேசுகிற நேரமா இது? இந்தச் சமயத்தில் பேசுவது அவர்களுக்கும் நமக்குமான புரிந்துணர்வை சிக்கலாக்குமே? ஒரே ஊருக்குள் ஒற்றுமையை குலைக்குமே? பொது எதிரி இதைப் பயன்படுத்திக் கொள்வானே?" என்றெல்லாம் நபியோ நபித்தோழர்களோ யோசிக்கவில்லை.
ஆனால் இன்று யூத(சியோனிச)-நஸாரா(அமெரிக்க) அராஜகப் பொது எதிரியைக் காட்டி, ஷீஆக்களின் குஃப்ரையும் ஷிர்க்கையும் பேச இது நேரமில்லை என்று பேசுகிறார்கள். இதே குரலில்தான் இந்தியாவிலுள்ள பாசிச பொது எதிரியைக் காட்டி, இங்குள்ள முஸ்லிம்களிடையே பரவியுள்ள குஃப்ரையும் ஷிர்க்கையும் பேச இது நேரமில்லை என்று பேசுகிறார்கள்.
இது தஅவாவில் நுழைந்துள்ள பித்அத் வாதம். ஒற்றுமை கோஷத்தின் மூலம் கட்டி எழுப்பப்பட்ட வாதம். அரசியல் தந்திரங்கள்தான் இதன் ஆதார வேதம். குர்ஆன் சுன்னாவின் ஆதாரம் இல்லாத இந்த பித்அத் விதியை இருபதாம் நூற்றாண்டில் முதலில் முழங்கியவர் ஹசனுல் பன்னா. வளர்த்தெடுத்தவர் யூசுஃப் கர்லாவி. அதைச் சுருக்கமாக அவர்கள் இப்படிச் சொல்வார்கள்:
"உடன்பாட்டில் ஒன்றுபடுவோம். முரண்பாட்டில் அமைதி காப்போம்."
இக்வானிய சுரூரிய காரிஜி சிந்தனைப் போக்கை வெறுத்து ஒதுக்கும் ஸலஃபிகளான நாங்கள் சொல்வது இதுவே: யூத-நஸ்ரானிகளுடன் அரசியல் சமாதான ஒப்பந்தம் செய்திருந்த போதிலும், முஷ்ரிக்குகளுடன் ஹுதைபியா ஒப்பந்தம் செய்திருந்த போதிலும், நம்முடைய ஸலஃபின் தலைவர் அல்லாஹ்வின் தூதரும் தோழர்களும் குஃப்ர் ஷிர்க்கை, அதன் கூட்டங்களை, அவர்களின் வழிகெடுகளைக் கண்டித்தார்கள். அவர்களைப் பற்றி எச்சரிக்கை செய்ய இது நேரமில்லை என அமைதியாக இருக்கவில்லை. எனவே, எங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி கண்டிப்போம். நீங்களும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நாளை உங்களுக்கும் நமக்கும் மிஞ்சப் போவதும் உடன் வருவதும் இது மட்டுமே.