14/01/2026
ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் கீழ் இயங்கும் துணிந்தெழு சஞ்சிகையின் 5ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, “துணிந்தெழு சங்கமம்” எனும் பெயரில் ஒரு விசேட விழா எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி கல்முனையில் நடைபெறவுள்ளது.
“துணிந்தெழு சங்கமம்” விழா, பல்வேறு கலை, இலக்கிய மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகளை உள்ளடக்கியதாக நடைபெறவுள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, சஞ்சிகையின் வளர்ச்சிக்காக கடந்த நான்கு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய உறுப்பினர்களை கௌரவிக்கும் வகையில் “துணிந்தெழு விருது” வழங்கி வைக்கப்படவுள்ளது.
மேலும், புதிய நூல்கள் மற்றும் படைப்புகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, துணிந்தெழு சஞ்சிகையின் விசேட பிரதியும் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.
அண்மையில் சஞ்சிகையினால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ்களும் கௌரவங்களும் வழங்கப்படவுள்ளன.
இலக்கிய ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகத்தின் பல்துறைகளையும் சேர்ந்தோர் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வு, அம்பாறை மாவட்டத்தில் ஒரு முக்கிய இலக்கிய விழாவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.