03/08/2025
#உன்னையே_வணங்குகிறோம்_உன்னிடமே_உதவி_தேடுகிறோம்!
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِيْنُ،
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் #மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
மேலே சொன்னது போல் தொழுகையில் ஓதிவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தேனீர் கேட்பவன் யாரிடம் உதவி கேட்கிறான்? இவன் முஸ்லிமா? காபிரா?
தொழுகையில் “பாதிஹா ஸூறா” ஓதுவது கடமை. தவறினால் தொழுகை “பாதில்” வீணாகிவிடும். நிறைவேறாது.
ஒருவன் மேற்கண்ட திரு வசனத்தை نَعْبُدُكَ وَنَسْتَعِيْنُكُ என்று தொழுகையில் ஓதினால் அவனின் தொழுகை நிறைவேறாது. அது மட்டுமன்றி திருக்குர்ஆன் வசனத்தை மாற்றி ஓதிய குற்றவாளியாகவும் ஆகிவிடுவான்.
இந்த வசனத்திற்கும், திருக்குர்ஆன் வசனத்திற்கும் பொருளிலும், வசன அமைப்பிலும் வித்தியாசம் உண்டு. திருக்குர்ஆன் வசனம் பின்வருமாறு.
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِيْنُ،
முதலில் கண்ட சாதாரண வசனத்திற்கும், இந்த திருக்குர்ஆன் வசனத்திற்கும் வித்தியாசமிருப்பது அறிவுள்ளவர்களுக்கு மறைவானதல்ல. எனினும் அதைச் சுருக்கமாகச் சுட்டிக் காட்டுகிறேன்.
نَعْبُدُكَ وَنَسْتَعِيْنُكُ
என்றால் நாங்கள் உன்னை வணங்குகின்றோம், இன்னும் உன்னிடம் உதவியும் தேடுகிறோம் என்று பொருள் வரும்.
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِيْنُ،
என்றால் நாங்கள் உன்னை(யே) வணங்குகிறோம், இன்னும் உன்னிட(மே) உதவியும் தேடுகிறோம் என்று பொருள் வரும்.
இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்றால் சாதாரண வசனத்தில் உன்னை(யே) வணங்குகிறோம், உன்னிட(மே) உதவி தேடுகிறோம் என்று வணக்கத்தையும், உதவி தேடுதலையும் உறுதி செய்து சொல்லப்படவில்லை. ஆனால் திருக்குர்ஆன் வசனத்தில் குறித்த இரண்டு அம்சங்களையும் உறுதி செய்து சொல்லப்பட்டுள்ளது.
இத்தகைய விஷேடம் திரு வசனத்திற்கு எதனால் ஏற்பட்டதென்று ஆய்வு செய்வோம்.
இவ் ஆய்வு نَحْوُ எனும் அறபு மொழி இலக்கணத்தோடு சம்பந்தப்பட்டதாகும். இது அறபு மொழி இலக்கணம் கற்றவர்களுக்கும், கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கும் தெரியும். இக்கலையோடு சம்பந்தப்படாதவர்களுக்கு தெரியாது. இக்கலையோடு தொடர்பில்லாதவர்கள் இப்பகுதியை வாசிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மொழியிலக்கண விளக்கம்:
نَعْبُدُ
என்றால் நாங்கள் வணங்குகின்றோம் என்று பொருள். إِيَّاكَ نَعْبُدُ என்றால் உன்னையே வணங்குகிறோம் என்று பொருள்.
உன்னையே வணங்குகின்றோம் என்ற வசன அமைப்பு “வேறான்றையும் நாங்கள் வணங்கமாட்டோம்” என்ற கருத்தை தருகிறது.
نَعْبُدُكَ
என்ற வசனம் உன்னை வணங்குகின்றோம் என்ற பொருளை மட்டுமே தருகிறது. “வோறொன்றையும் நாங்கள் வணங்கமாட்டோம்” என்ற கருத்தை தரவில்லை.
இந்த வகையில் திருக்குர்ஆன் வசனமே சாதாரண வசனத்தை விட அர்த்த புஷ்டி உள்ளதாகவும், உறுதியானதாகவும் விளங்குகிறது.
ஆகையால் இதே கருத்தை குறித்த சாதாரண வசனம் தருவதாயிருந்தால் نَعْبُدُكَ என்ற சொல்லில் உள்ள كَ “க” என்ற எழுத்தை نَعْبُدُ என்ற சொல்லுக்கு முன்னால் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வருவதாயின் كَنَعْبُدُ என்று கொண்டு வர வேண்டும். இவ்வாறு கொண்டு வருதல் சட்ட விரோதமானதாகும். இவ்வாறு வசனம் வராது.
ஆகையால் نَعْبُدُكَ என்ற சொல்லின் கடைசியில் உள்ள كَ “க” என்ற எழுத்தை إِيَّاكَ என்று மாற்றிக் கொண்டு வருதல் வேண்டும். அவ்வாறாயின் نَعْبُدُكَ என்ற சொல்லின் கடைசியில் உள்ள كَ “க” என்ற எழுத்தை إِيَّاكَ என்று மாற்றி முன்னால் கொண்டு வர வேண்டும். إِيَّاكَ نَعْبُدُ என்பது போன்று. இவ்வாறு அமைப்பதால் ஏற்படுகின்ற விஷேட பயன் என்னவெனில் உன்னை என்ற கருத்தை “உன்னையே” என்று மாற்றித் தரும்.
இது தொடர்பாக இன்னும் விளக்கம் சொல்லலாம். ஆயினும் புத்தியுள்ளவர்களுக்கு இது தாராளம்.
إِيَّاكَ نَعْبُدُ
என்று நாம் எவ்வாறு அமைத்தோமோ அதற்குப் பின்னால் وَإِيَّاكَ نَسْتَعِيْنُ என்று வந்துள்ளதும் இவ்வாறு அமைக்கப்பட்டதேயாகும். இவ்வாறு அமைத்தவன் அல்லாஹ்தான். அவனுக்கு எல்லா இலக்கணமும் தெரியும்.
إِيَّاكَ نَعْبُدُ
“உன்னையே வணங்குகிறோம்” வேறெவரையும், எதையும் வணங்கவில்லை.
முஸ்லிம்களாயினும், முஸ்லிம்கள் அல்லாதவர்களாயினும் வணங்குகின்ற அனைவரும் அல்லாஹ்வையே வணங்குகிறார்கள். யார் எதை வணங்கினாலும் வணங்கப்படுபவன் அல்லாஹ்தான். (கடவுள்தான், இறைவன்தான்) இதுவே எதார்த்தம். இதில் கருத்து வேறுபாடு கிடையாது.
لَا إلهَ إِلَّا اللهُ الْمَعْبُوْدُ بِكُلِّ مَكَانٍ،
கோவிலாயினும், தேவாலயமாயினும், பள்ளிவாயல்களாயினும் அனைத்து இடங்களிலும் வணங்கப்படுபவன் அல்லாஹ்வேயன்றி வேறு யாருமில்லை.
இது எந்த சமயத்திற்கும் பொருத்தமான பொதுவான தத்துவமாகும். எவரால் அவன் வணங்கப்பட்டாலும் வணங்கும் முறையில் பிழை இருக்கக் கூடாது.
முஸ்லிம்களும் அல்லாஹ்வையே வணங்குகிறார்கள். ஆயினுமவர்கள் எந்த ஓர் குறிப்பிட்ட உருவத்தையும் முன் வைத்து அதை இறைவனை நினைவூட்டும் சின்னமாக்கி வணங்குவதில்லை. முஸ்லிம் அல்லாதவர்கள் எதார்த்தத்தில் இறைவனை வணங்கினாலும் ஏதேனும் ஓர் உருவத்தை நினைவுச் சின்னமாக்கியே வணங்குகிறார்கள். கோடான கோடி உருவங்களில் தோன்றும் வல்லமையுள்ள ஏகனை ஏதோ ஓர் உருவத்தில் மட்டும் கட்டுப்படுத்தி வணக்கம் செய்தல் அவனை வணங்கியதாகாது. பொதுவாக ஏதோ ஒன்றில் கட்டுப்படுத்தி வணக்கம் செய்தல் என்பது “ஷிர்க்” இணை வைத்தலாக ஆகிவிடும்.
اَللهُ تَعَالَى إلهٌ مُطْلَقٌ لَا مُقَيَّدٌ بِأَيِّ قَيْدٍ،
அல்லாஹ் என்பவன் “முத்லக்” எந்த ஒரு கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்ட பொதுவானவன். இதுவே சரியான தீர்வு.
அவன் எந்த ஓர் குறிப்பிட்ட உருவம் உள்ளவனல்ல. அவனின் கோடான கோடி உருவங்களை ஒன்றில் மட்டும் கட்டுப்படுத்த யாரால் முடியும்? அவனின் உருவங்கள் என்பன மனித உருவங்களை மட்டும் குறிக்காது. உயர்திணை, அஃறிணை அனைத்தின் உருவங்களையும் மற்றும் அல்லாஹ் படைத்த அனைத்து வஸ்துக்களின் உருவங்களையும் குறிக்கும். இவ்வாறு நாம் கணக்கெடுத்தால் எண்ணிலடங்கா உருவங்களை கணக்கெடுக்க வேண்டும். இது சாத்தியமற்றதாகிவிடும். அவ்வாறு கணக்கெடுக்க முடியுமாயிருந்தாலும் கூட அவையாவையும் ஒன்றில் கட்டுப்படுத்துவது எவ்வாறு சாத்தியமாகும்? சாத்தியமேயாகாது.
முஸ்லிம்கள் அல்லாதவர்கள் ஏதோ ஒன்றில் அவனைக் கட்டுப்படுத்தி வணங்கினால் கூட அதை மட்டும் அவனின் உருவமாகக் கொள்ள முடியாது.
وَإِيَّاكَ نَسْتَعِيْنُ
நாங்கள் உன்னிடமே உதவி தேடுகிறோம். அதாவது உன்னிடம் மட்டுமே உதவி தேடுவோம். வேறு எவரிடமும் உதவி கேட்க மாட்டோம்.
إِيَّاكَ نَعْبُدُ
என்பதற்கு மேலே சொல்லப்பட்ட விளக்கம் எல்லாம் இதற்கும் பொருத்தமானதாகும். மீண்டும் எழுதத் தேவையில்லை.
இத்திரு வசனத்திற்கு விளக்கம் சொல்லும் இப்னு தைமிய்யா, இப்னு அப்தில் வஹ்ஹாப் ஆகியோரின் ஆதரவாளர்கள் அல்லாஹ்விடம்தான் உதவி கேட்கலாமேயன்றி அவ்லியாஉகளிடமும், ஷெய்குமார்களிடமும் உதவி கேட்பது இத்திரு வசனத்திற்கு முரணானது என்றுதான் சொல்கிறார்களேயன்றி அல்லாஹ் தவிர வேறு எவரிடமும், எதனிடமும் பொதுவாகப் படைப்பிடம் உதவி கேட்கலாகாது என்று சொல்கிறார்களில்லை. திருக்குர்ஆனின் வசனத்தின் படி விளக்கம் சொல்வதாயின் அல்லாஹ் தவிர வேறு எவரிடமும் உதவி கேட்கலாகாதென்றுதான் சொல்ல வேண்டுமேயன்றி அவ்லியாஉகளிடமும், ஷெய்குமார்களிடமும் உதவி கேட்கலாகாதென்று சொல்ல முடியாது. இவர்களுக்கு அவ்லியாஉகளின் மீதும், ஷெய்குமார்களின் மீதும் என்னதான் கோபமோ தெரியவில்லை.
இவ்வாறு சொல்பவர்களிடம் ஏன் அவ்லியாஉகளிடமும், ஷெய்குமார்களிடமும் உதவி கேட்க கூடாதென்று சொல்கிறீர்கள்? என்று கேட்டால் அவர்கள் மரணித்துவிட்டார்கள். மரணித்தவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது என்று பதில் சொல்கிறார்கள். அவ்வாறாயின் உயிருள்ள அவ்லியாஉகளிடமும், உயிருள்ள ஷெய்குமார்களிடமும் உதவி கேட்கலாமா? அது ஆகுமா? என்று கேட்டால் அது ஆகும் என்று சொல்கிறார்கள். அல்லது கேள்விக்கு பதில் கூற முடியாமல் தலை குனிகிறார்கள்.
இவர்களின் இக்கூற்றின் படி உயிரோடுள்ள அவ்லியாஉகளிடமும், உயிரோடுள்ள ஷெய்குமார்களிடமும் யா வலிய்யல்லாஹ்! யா ஷெய்கீ! எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்க முடியும் என்று சொல்கிறார்கள். இதற்கு ஆதாரம் என்னவென்று கேட்டால் உயிரோடுள்ளவர்களுக்கு உதவி செய்ய முடியும் என்றும், மரணித்தவர்களால் உதவி செய்ய முடியாது என்றும் விடை சொல்கிறார்கள். இதற்கு திருக்குர்ஆனிலிருந்தோ, நபீ மொழியிலிருந்தோ ஓர் ஆதாரமாவது கூற முடியுமா? என்று கேட்டால் உயிருள்ளவனால்தானே செய்ய முடியும். மரணித்தவன் எவ்வாறு செய்வான் என்று வரட்டுத் தத்துவம் பேசுகிறார்களேயன்றி தமது வாதத்தை நிறுவ ஓர் ஆதாரம் கூட காட்டுவதற்கு முன் வருகிறார்களில்லை.
உயிருள்ளவனால் செய்ய முடியும், உயிரில்லாதவனால் செய்ய முடியாதென்பது - இந்த நம்பிக்கை பிழையானதாகும். ஏனெனில் செய்பவன் அல்லாஹ் மட்டும்தான். உயிருள்ளவனாலும் சுயமாகச் செய்ய முடியாது. உயிரில்லாதவனாலும் சுயமாகச் செய்ய முடியாது. சுயமாகச் செய்பவன் அல்லாஹ் மட்டும்தான். அவன் நாடினால் உயிரில்லாதவனையும் பேச வைப்பான். உயிரில்லாதவன் மூலமும் செயல்களை வெளிப்படுத்துவான்.
எனவே, உயிரில்லாதவனால்தான் செய்ய முடியாதென்ற குருட்டு ஞானத்தை தூக்கியெறிந்து விட்டு எதையும் ஆதாரத்தின் மூலம் நிறுவ முன் வர வேண்டுமென்று ரிஸ்வீ போன்ற அரை வேக்காடுகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
“ஹகீகத்”தில் - எதார்த்தத்தில் எது செய்வதாயினும் அதை அல்லாஹ்தான் செய்கிறான். இவ்வடிப்படையில் செயல்கள் யாவும் அல்லாஹ்வுக்குரியனவே தவிர உயிரோடுள்ளவனுக்குமில்லை, செத்துப் போனவனுக்குமில்லை.