14/02/2024
அரச துறையின் ஆற்றலை அதிகரிக்க இந்தியா இலங்கை கூட்டு முயற்சியில் வேலைத்திட்டம்
-----------------------------------------------------------------------------------
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில் அரச துறையின் ஆற்றலை அதிகரிக்கும் வேலைத்திட்டமொன்று இந்தியா மற்றும் இலங்கையின் கூட்டு முயற்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை புதிய துறைகள் ஊடாக வலுப்படுத்துவதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் வெளியிட்டிருந்தனர்.
இந்தியா - இலங்கை கூட்டு முயற்சியின் ஊடாக அரச துறையின் திறனை கட்டியெழுப்புவதற்காக அரச நிறுவன கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதுடன், செயற்திறனுடன் முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் லால், இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடல்களை இலங்கையில் முன்னெடுத்திருந்தார்.
அந்த கலந்துரையாடல்களின் விளைவாக, இலங்கையில் இருந்து உயர்மட்டக் குழுவொன்று இந்தியாவுக்குச் சென்று பொருத்தமான திறன் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டத்தை தயாரித்திருந்தது.
அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்புடைய இந்திய நிறுவனங்களுடன் மேலதிக கலந்துரையாடல்களை நடத்த தீர்மானித்துள்ளது.
அதன்படி கடந்த 12ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்த குறித்த குழுவினர் எதிர்வரும் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தியா நல்லாட்சி தேசிய மையத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் 12 அரச நிறுவனங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் டிஜிட்டல் கொள்முதல் உள்ளிட்ட அரசின் பிரதான சேவைகளுக்காக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல்மயமாக்கலை செயற்படுத்தல், புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அரச ஊழியர்களின் திறன் மேம்பாடு, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், உணவுகளின் நடுநிலையான விலைப் பொறிமுறை உள்ளிட்ட பல பிரிவுகளுடன் தொடர்புடைய நிறுவனங்களின் திறனை அபிவிருத்தி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.