05/31/2026
ஹவாய் என்னும் அற்புதம் - பயணக் கவிதை
----------------------------------------
கவிதைகள் : இமயவரம்பன்
🌸
1. அவனியின் திலகம் ஹவாய்
அவாவுறும் சுகங்கள் எல்லாம்
… அளித்திடும் சுவர்க்கத் திற்கே
சவாலிடும் வகையில் எங்கும்
… தழைத்தநல் வளங்கள் தாங்கி,
நவீனமும் மரபும் சேர்ந்து
… நலமெலாம் நிறைந்து நின்ற
ஹவாயெனும் அழகுப் பூமி
… அவனியின் திலகம் தானே!
🌸
2. அழகில் ஓங்கும் ஹவாய்மகள்
திசையெலாம் உலவும் சோதிச்
… செங்கதிர்க் கரங்கள் தீண்ட,
பசுநிறம் கலந்த நீலம்
… பளிச்சிடும் கடலின் மேலே,
அசைவினால் வசியம் செய்யும்
… அலைத்திரள் நடனம் ஆட,
அசைவிலாப் புகழில் ஓங்கும்
… ஹவாய்மகள் இனிது வாழ்க!
🌸
3. ஹவாயின் ஓசை
வான்வரை தெறித்து எழும்பும்
… மலைநிகர் அலையின் ஓசை,
தேன்மலர்த் தென்றல் தீண்டத்
… தென்னைகள் சிலிர்க்கும் ஓசை,
ஊன்உயிர் உருக்கு கின்ற
… உகுலேலே இசையின் ஓசை,
கானவேய்ங் குழலின் ஓசை,
… கவின்ஹவாய் ஓசை, அம்மா!
🌸
4. ஹவாயின் ஆட்டம்
அலைகடல் நிகர்த்த கூட்டம்
… ஆர்ப்பரித்து அமர்ந்து பார்க்க,
கலைவளர் ஹூலா என்னும்
… களிமிகு நடனம் கண்டேன்;
அலர்நிகர் அடிகட்கு ஏற்ப
… அசைந்திடும் இடையின் சீரால்
நலமிகு கதைகள் சாற்றும்
… நல்-ஹவாய் பெருமை வாழ்க!
🌸
5. உயர்ந்தேன் தாழ்ந்தேன்
வானிலே உயர்ந்தேன், ஓடம்
… வலித்திடும் குடையைப் பற்றி
நால்நிலத்து எழிலைக் கண்டேன்,
… நான்எனை மறந்தேன்; பின்னர்
தான்ஒளிர் பவளப் பாறை
… தழைகடல் தரையில் தாழ்ந்து,
மீனுடன் உலவிச் சென்றேன்
… வியன்பெரும் ஹவாயில் இன்றே.
குறிப்பு :
ஓடம் வலித்திடும் குடை = parasailing என்று சொல்லப்படும் வான்குடைப் பறப்பு
கடல் தரையில் உலவுதல் = snorkeling என்று அழைக்கப்படும் ஆழ்கடல் நீச்சல்
🌸
6. அரண்மனைக் காட்சி
அருநிலத்து உரிமை எல்லாம்
… அயலவர் கவர, பின்னர்
அரசையும் பறிகொ டுத்த
… அவலத்தை உணர்த்தும் வண்ணம்
அரியணை அழகைக் காட்டி
… அணிதிகழ் அறைகள் காட்டி
ஒருகொடுஞ் சிறையும் காட்டும்
… அரண்மனை அதனைக் கண்டேன்.
குறிப்பு :
வெளிநாட்டவரிடம் தமது ஆட்சியைப் பறிகொடுத்த ஹவாய் அரச குடும்பத்தினரின் பரிதாப நிலையைக் கண்டு வருந்தும் பாடல்.
🌸